உங்கள் உலகத்தை உருவாக்குபர் யார் ?




இந்து மத புராணங்களில் ஒரு கதை உண்டு. விநாயகர் தன், தாய் தந்தையை வலம்வந்து , பெற்றோரே என் உலகம் ஆகையால் உலகை சுற்றி வந்து விட்டேன் என்று சொல்லி பரிசை தட்டிச் சென்றாராம். இக்கதை எந்த அளவு உண்மை என எனக்குத்தெரியாது. ஆனால் , இதனோடு தொடர்புடைய ஓர் உளவியல் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஓர் அக உலகம் ( Inner World) உண்டு. அந்த உலகத்தை வேறு ஒருவரால் அவ்வளவு எளிதில் உணரவோ , கணிக்கவோ இயலாது. இவ்வுலகத்தில் தனிப்பட்ட ஒரு மனிதரின் விருப்பங்கள் , ஆர்வங்கள், அபிலாஷைகள் , நம்பிக்கைகள் , கொள்கைகள் , இலக்குகள் , கற்பனைகள் இவையாவும் அடங்கியுள்ளன. இது மனிதனுக்கு மனிதன் முற்றிலும் வேறுபடும் . ஒருவரின் அக உலக ' உள்ளடக்கம் / Content ' காலப்போக்கில் , வயது முதிர்ச்சி பெற பெற ஒரளவு மாறக்கூடியதுதான். என்றாலும் , இந்த உள்ளடக்கம் முழுவதுமாக மாறக்கூடும் அல்லது மாற்ற முடியும் என்று சொல்வதற்கில்லை. இப்போது முக்கியமான கேள்வி , உங்கள் அக உலகத்தை உருவாக்குபர் யார் ? நம்முடைய அன்னையும் , தந்தையும் தான் ஒரு குழந்தையின் அக உலக படைப்பாளிகள். அன்னையும் தந்தையும் எப்படி பேசுகிறார்கள் , என்ன பேசுகிறார்கள் , எந்த விஷயங்களை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் , எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் , அவர்களின் பழக்கவழக்கங்கள் நடத்தைகள் , உணவுப்பழக்கம் , சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடுகள் - இவையனைத்தையும் 7 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை கூர்மையாக கவனித்து தன்னையும் அறியாமல் அடிமனதில் (downloading in unconscious mind) பதியவைத்துக்கொள்கிறது. இவ்வாறாக, முதல் 10 வருடங்களில் , பெற்றோர் மூலமாக உருவாகும் ' மன உள்ளடக்கங்களை ' பொறுத்தே ஒரு குழந்தை பிற்காலங்களில் ' முடிவெடுக்கும் திறன் , சுகதுக்கங்களை சந்திக்கும் திறன் , தோல்விகளில் இருந்து மீண்டு வருவது , நல்ல உடல்நலம் , பணம் சம்பாதிக்கும் திறன் , அதிகம் சிந்தித்து மனத்தை குழப்பிக் கொள்ளாமல் இருத்தல் ' போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. பெற்றோரிடமிருந்து நல்ல மன உலகத்தை சொத்தாக பெற்ற குழந்தைகள் , உடல்நலத்துடன் செல்வமும் பெற்று சிறப்பான வாழ்க்கையும் - குழப்பமான / மோசமான மன உலகத்தை சொத்தாக பெற்றொரிடமிருந்து பெற்ற குழந்தைகள் இன்னல்களுக்கு இடையிலேயே, வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகின்றன. இம்மன நிலையை Psychological Wounds என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள் . லஞ்சம் எனும் சமூகக்கேடு குடும்பத்திலேயே துவங்குகிறது என்று Dr. Abdul Kalam அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சனையை ஒருவர் தானாக சரிசெய்து கொள்வது மிக சிரமமான காரியம். திறமையும் அனுபவமும் உள்ள மனோதத்துவ நிபுணர்களின் துணையோடு ( using appropriate therapy and counseling) பெருமளவில் சரிசெய்து விடலாம் என நினைக்கிறேன் . [ இதற்கு தொடர்புடைய மற்றுமொரு கட்டுரையை படிக்க :- CLICK HERE ]

--------------
P. Lingeswaran,
Asst. Prof. / MBA
14.06.2021
_______________

Comments