கலை தேவதை...


பெண்களை 'தேவதை ' , 'பேரழகி ' என்று வர்ணித்து பார்த்திருப்பீர்கள். ஒரு கவிஞர் 'கலை தேவதை ' என்று பெண்களை வர்ணிக்கிறார். அந்தக் கவிஞரின் பெயர் பிறைசூடன் . பாடல்: புல்லைக்கூட பாட வைத்த புல்லாங்குழல். இலக்கியங்களில் இருந்துதான் வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தை Mirror Of Life என்பார்கள். இந்தப்பாடலில்(திரைப்படத்தில்)- ஹீரோ விஜயகாந்த் , சுகாசினியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார் , அதே நேரம் சுகாசினியை நேசிக்கவும் செய்கிறார். சுகாசினி தன்னை மணந்து கொள்ள வேண்டுமெனில் ஒரே ஒரு நிபந்தனை போடுகிறார். அதாவது ' அடியே சாரதா ' என்று ஒரே ஒருமுறை விஜயகாந்த தன்னை அழைக்க வேண்டும். அது முடியாமல் திருமணம் நின்றுவிடுகிறது. இப்படியான சூழலில் பாடல் வருகிறது. ஒரு பண்பட்ட , புலமையுள்ள , மனித உணர்வுகளை புரிந்துகொள்ள கூடிய கவிஞர்தான் இதுபோன்ற பாடல்களை எழுத முடியும். சுகாசினியின் மேல் விஜயகாந்திற்கு உள்ள காதல், அவருடைய வாழ்க்கையில் சுகாசினியினால் ஏற்பட்ட தாக்கம் , ஹீரோவின் இயலாமை , சுகாசினியின் தடுமாற்றம் இவையனைத்தும் பாடல் வரிகளில் வெளிப்படுகின்றன.

" கடல் நீரில் ஆடும் நிலவை தொட ,
அலைபாயும் என்மீது ஒளியும் பட " - என்று சில வரிகள். இதைவிட ஒருவரின் இயலாமையையும் , நிதர்சனத்தையும் கூற முடியுமா?

" ஊமை பாடும் பாடல் எனது உள்ளம் சொன்னது" - இன்னொரு வரி. வாய் பேச இயலாத ஒருவர் பாடும் பாட்டு எப்படி இருக்கும். கவிஞரின் ஒப்புமை பிரமிக்க வைக்கிறது.

எந்த ஒரு பாடல் / செய்யுள் / கவிதை / காவியம் என்றாலும் , அதற்கு ஒரு பாடுபொருள் (Central Theme /காரணகர்த்தா ) தேவை. அதற்காகத்தான் ஒரு படைப்பே உருவாகிறது. பின்வரும் வரிகளை கவனியுங்கள் :-
" ராகம் உனது, தாளம் உனது , பொருளும் நீயம்மா " - ராகத்தின் , போடும் தாளம் , அனைத்திற்கும் காரணம் எல்லாம் நீயே என்று சரணடைந்து விடுகிறார். சரணாகதி என்பது , இறைவனிடம் தவிர காதலில் மட்டுமே நடக்கும். இப்பாடலை (https://www.youtube.com/watch?v=VCjieP6illg) ஒருமுறை கேட்டுப்பாருங்கள், வாழ்நாளில் நீங்கள் மறக்கவே மாட்டீர்கள்.

__________________________________
P. LINGESWARAN
Assistant Professor
MBA
____________________________________

 

Comments

Post a Comment