பாலுணர்வு எனும் உளவியல் ஆயுதம் !




உலகில் எந்த மூலையில் எந்த போராட்டம் நடந்தாலும் அது ' ஆளும் வர்க்கத்திற்கும் , உழைக்கும் வர்க்கத்திற்கும் ' இடையே நடக்கும் போராட்டமாகத்தான் இருக்கும். தலைப்புக்கள் வேண்டுமானால் மாறலாம். ஏன் அப்படி ? உலகில் உள்ள மொத்த வளத்தில் ( Wealth and Resources) செல்வத்தில் 90 % சதவீதத்தை , மொத்த மக்கள் தொகையில் 5 - 10 % சதவீதமே உள்ள ஆளும் வர்க்கம் அனுபவித்துக் கொண்டிருக்கிருக்கிறது. அனுபவிக்காத மீதமுள்ள மக்களில் முக்கால்வாசிப்பேர் உழைப்பாளிகள் /நடுத்தர மக்கள். அவர்கள் விழித்து விடக்கூடாது , சிந்திக்க கூடாது - அதற்கு என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுத்துவதே ' உலகை ஆளும் கும்பலின் ' தலையாய வேலையாகும். அப்படி அவர்கள் செய்யும் பலபல திட்டங்களில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மனிதனின் ( Biological needs) அடிப்படை தேவைகள் ' உணவு , உடை , இருப்பிடம் மற்றும் பாலுணர்வு '. இவற்றின் பாலுணர்வு என்பது மிகவும் வலுவான உயிரியல் தேவையாகும். பாலியல் தேவை உரிய வயதில் , உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் . அது நிறைவேறாமல் தாமதமாகிக்கொண்டே போனாலோ அல்லது மனதில் அடக்கி ( Suppressed) வைக்கப்பட்டாலோ - மனப் போராட்டம் , மனக் கொந்தளிப்பு உண்டாகும். மிகவும் திறமை வாய்ந்த உளவியல் நிபுணர்கள் ' அதிகார வர்க்கத்தில் ' நிறைய நபர்கள் இருகிறார்கள் போலும். உழைப்பாளிகள் , நடுத்தர வர்க்கத்தினர் கிளர்ச்சி ( Agitation / Protest) செய்யாமல் இருக்க ' பாலுணர்வை முறையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமை ' எனும் ஆயுதத்தை ( Psychological weapon) கையில் எடுத்துள்ளார்கள். பாலுணர்ச்சியை மையமாக வைத்து மக்களின் வாழ்க்கையில் விளையாடுவது ஒரு நுட்பமான உளவியல் விளையாட்டாகும். அதை நியாயப்படுத்த ' ஒருவர் வாழ்வில் நன்கு வளர்ச்சியடைய வேண்டும் , வாழ்க்கையில் இலக்குகள் வேண்டும் , நேர்மறை சிந்தனை வேண்டும் , நன்றாக படித்து பெரிய உத்தியோகத்திற்கு போக வேண்டும் ' என்றெல்லாம் இளைஞர்கள் உள்ளத்தில் பதிய வைத்து விட்டார்கள். இளைஞர்களும் இவற்றை வேதவாக்காக கொண்டு வாழ்க்கையில் ஓடுவார்கள். திருமணம் தாமதமாகும் . பாலுணர்வு நிறைவேறுவதில் சிக்கல் உண்டாகும் . ஆழ்மனதிலிருந்து வலுவோடு புறப்படும் பாலுணர்வு சரிவர நிறைவேறவில்லை எனில் , ஒரு மனிதன் ஒழுங்காக சிந்திக்க முடியாது. மனமே சிதைந்து போகலாம். உரிய வயதில் நிறைவேற்றப்படாத பாலியல் தேவையால் நிச்சயம் உடலிலும் மனதிலும் கோளாறுகள் ஏற்படும் . இதுதான் ( Civilized society) நாகரீகமான சமூகமா ? வளர்ச்சியடைந்த சமூகமா ? மிக அடிப்படை தேவையான பாலுறவை அசிங்கமான , பேசினால் குற்ற உணர்ச்சி உண்டாக கூடிய விஷயமாக்கி விட்டார்கள் . இன்னும் , தெளிவாக கூற வேண்டுமானால் , எல்லோர் கையிலும் மொபைல் போன் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது . விதவிதமான ஆபாசப் படங்கள் , காட்சிகள் கடல்போல கொட்டிக்கிடக்கின்றன. இவை எந்த அளவுக்கு ஒருவரின் மனதை விகாரமாக்கும் ? நிஜத்தில் அதெல்லாம் சாத்தியமா ? கற்பனைக்கும் , யதார்த்த வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகமாக அதிகமாக - விரக்தி , மன இறுக்கம் ஏற்படும் . இறுக்கம் , விரக்தி நிறைந்த மனதில் மகிழ்ச்சிக்கு இடமேது ? சிந்தனைக்கு இடமேது ?

-----------------------

P. Lingeswaran
Asst. Prof.
_______________________

Comments