எனது நண்பர் சதீஷ் அவர்கள் (சென்னை) கேட்டுக் கொண்டதிற்கிணங்க இக்கட்டுரையை எழுதுகிறேன். மேலும் ஆன்மீக நண்பர்கள் பலருக்கும் இக்கருத்துக்கள் பயன்படும் என நம்புகிறேன். மனதிற்கு ஓய்வு கொடுப்பது எப்படி? மனித மனம் நிச்சயமாக ஒரு புதிர்தான்(Puzzle). மனம் தானாகவே (Automatic machine) இயங்கும் ஓர் இயந்திரம் போன்றது.
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் அரிது.
- தாயுமானவர்.
இறப்பின்போதும், தூக்கத்தின்போதும் தவிர எண்ண ஓட்டங்கள் நிற்பதே இல்லை. இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன? தூக்கத்தில் கூட எண்ணங்கள் (ஆழ்மனம்) கசிந்து கனவுகளாக (Thoughts in disguise) வெளிப்படுகின்றன. நமக்கு பொதுவான பிரச்சினை என்னவெனில், சிந்தித்து சிந்தித்தே மூளையும் , உடலும் சோர்ந்து போய்விடுகின்றன. உடல் உழைப்பின் செலவாகும் ஆற்றலை காட்டிலும், யோசிப்பதாலேயே அதிக ஆற்றல் செலவாகி விடுகிறது. இதனால் மனசோர்வும், வெறுப்பும் ஏற்படுகிறது. எதையாவது எண்ணி எண்ணி , மூளையில் இறுக்கம் ஏற்பட்டு தூக்கமின்மை கூட உருவாகலாம். உடல் நலம் பாதிக்கும், முகம் பொலிவிழந்து போகும். ஆகையால், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது மனதிற்கு ஓய்வு கொடுக்க பழகிக்கொண்டால் - உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி , மனதில் ஓர் இதமான உணர்வு ஏற்படும் .
தொடர்ச்சியாக இடைவிடாமல் , மனதில் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்க காரணம் என்னவென்றால் (1) ஆசைகளும் (2) பற்றுக்களும் தான். எவருக்குமே ஆசைகள் கூடிக்கொண்டே தான் போகின்றனவே தவிர குறைந்த பாடில்லை. பொதுவாக, மனிதன் புலன் இன்பங்களுக்கு அடிமை.
' கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே '.
- திருமூலர்.
எப்போதும் நம்முடைய மனமானது ' மனைவி, மக்கள், பணம், தொழில், பாலுறவு, எதிர்காலம் குறித்த கற்பனைகள், பயம் ' இவற்றையே ' பற்றிக்கொண்டே ' இருப்பதால் - உணர்வு நிலையிலும் உணர்வற்ற நிலையிலும் - மனமெனும் உண்மைத் தொழிலாளி ( நாமே உருவாக்கிக்கொண்ட ஆசைகளையும் பற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டு ) எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறான். அவ்வப்போது மனித மனம் இவைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்கினால்தான் , மனம் உண்மையான ஒய்வைப்பெறும்.
செய்முறை:-
எவ்வித இடைஞ்சல்களும் அற்ற தனியிடத்தில் தியானம் செய்யும் நிலையில் அமர்ந்துகொள்ளவும். விரிப்பின் மேல் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு , முதுகுத்தண்டு வளையாமல் நேராக அமரவும். அதே நேரம் Relax -ஆக இருக்கவும்.முதலில் ஒரு நிமிடம் அமைதியாக மூச்சை கவனித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும். பின், ஆசனவாய் பகுதிக்கு ஒரு இன்ச் (உத்தேசமாக) மேலாக உங்கள் நினைவை (Concentrate) நிலைநிறுத்தவும். இவ்விடம் மூலாதாரம் எனப்படும். நினைவை நிலைநிறுத்த மிகவும் சிரமப்பட வேண்டாம், லேசாக முயன்றால் போதும். இப்போதுதான் , ஒவ்வொரு எண்ணமாக வரத்துவங்கும். குறுக்கிடும். இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன? நாம் நினைத்த, செய்த, சொன்ன - காரியங்களே ( Thoughts, Words, Deeds) எண்ணங்களாக மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்றன. இந்த எண்ணங்கள்தான் உண்மையிலேயே ஒவ்வொருவருடைய சொத்து. ஆகையால் எரிச்சல் அடையாமல் பயிற்சியை தொடரலாம். உதாரணமாக, குடும்பச்சண்டை ஒன்று உங்கள் நினைவுக்கு வருகிறது என வைத்துக்கொள்ளுங்கள், அப்போது நீங்களாகவே ஒரு சங்கல்பம் கூறுங்கள்::- " இந்தப் பிரச்சினை பற்றி பிறகு யோசித்துக் கொள்கிறேன். என் மனம் சிறிது நேரம் ஓய்வாக சுதந்திரமாக இருக்கட்டும் " - என சங்கல்பம் கூறிவிட்டு மீண்டும் நினைவை மூலாதாரத்தில் நிறுத்தவும். இவ்வாறு மனதை ஒருமுகப் படுத்த முயலும்போது - உங்கள் தொழில், அந்தஸ்து, பொறுப்புகள், இலக்குகள், பணப்பிரச்சிகள், குடும்பம் ஆகிய எண்ணங்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு - மூலாதாரத்திலேயே மனதை லேசாக அமர வைக்கவும். ஒவ்வொரு எண்ணம் குறுக்கிடும்போதும் , அதற்கு தகுந்த சங்கல்பம் சொல்லி - நாசூக்காக அவ்வெண்ணத்தை ஒதுக்கி வையுங்கள். உங்கள் மூளையும், மனமும் , உடல் உறுப்புகளும் சிறிது சிறிதாக ஓய்வு பெறும் . எண்ணங்களை மென்மையாக கையாளவும், அவற்றோடு போராட வேண்டாம். மூலாதாரத்திலேயே நினைவு இருக்கட்டும். இவ்வாறு ஒரு 20 - 30 நிமிடங்கள் செய்தால் - அதில் 5- 10 நிமிடங்கள் மனதிற்கு ஓய்வளிக்க முடியும். இதுவே பெரிய சாதனையாகும். மூளையின் இறுக்கம் தளர்ந்து , உடல் முழுவதும் ஒரு நல்ல உணர்வு, முழுமையான உணர்வு தெரியும். இப்பயிற்சி உடல் மனதிற்க்கு பாதுகாப்பான முறையாகும். ஒரே நாளில் இப்பயிற்சி கைவல்யம் ஆகி விடாது. சில நாட்கள் தொடர்ந்து முயன்றால்- இதில் உள்ள எளிமை உங்களுக்கு புரியும். மனம் நல்ல அமைதியும் ஓய்வும் பெறும் போதுதான், வாழ்க்கையை பற்றிய தெளிவும் உண்மை நிலையம், இயற்கை ரகசியங்களும் நமக்கு புலனாகும்.
மூலாதாரத்தில் நினைவை செலுத்தி தவம் செய்வது , சாந்தி தவம் அல்லது இறங்கு படி என அழைக்கப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல - அதிக\குறைந்த உடல் வெப்பம் சமநிலைக்கு வரும், ரத்தக்கொதிப்பு சீராகும். எண்ணங்கள் தாறுமாறாக ஓடுதல், மனக்கொதிப்பு, காமவெறி, ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, பதட்டம், கண் எரிச்சல் போன்றவை படிப்படியாக குறையும்.சிந்தனையில் ஓர் நிதானம் உண்டாகும். இன்னும் பலப்பல பலன்கள் இதனால் உண்டு. இறுதியாக நான் கூற விரும்புவது, இப்பயிற்சி நான் உருவாக்கியது அல்ல.ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் (மதுரை), தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஆகியோர்க்கே பெருமை முழுதும் சேரும். வாழ்க வளமுடன்.
குறிப்பு: ஏதேனும் சந்தேகமிருப்பின், பின்வரும் Email -ல் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். lingeswaran.ise@gmail.com
Writing
P.Lingeswaran,
Asst.Prof / MBA
குறிப்பில்.....!
ReplyDeleteதொடர்பு எனும் வாசகம் விட்டு போனதால் வாக்கியத்தின் அர்த்தமே மாறிபோனது போல தோனுது ஆசானே...🙏