சிலரை பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிடும். சிலரை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். நம்மையும் அறியாமல் நம் உள்ளம் , அவர்களின் உள்ளத்தில் " உள்ளதை" தெரிந்து கொள்கிறதோ என்றுகூட தோன்றுகிறது. அப்படி எனக்குப் பிடித்த அரசியல் தலைவர்களில் ஒருவர் " அடல் பிகாரி வாஜ்பாய்" அவர்கள். எனக்கு சுமார் 20 வயது இருக்கும்போது, ஒரு சந்தர்ப்பத்தில் வாஜ்பாய் அவர்களை பற்றி என் அப்பா ஏதோ புகழ்ந்து கூறிக்கொண்டு இருந்தார். நான் இடையில் திடீரென குறுக்கிட்டு, என் அப்பாவிடம் ' அவர் ஏன் அவ்வாறு பெரிய தலைவராக இருக்கிறார் என்றால் - அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை அதனால்தான் ' என்றேன். ஒரு கணம் அதிர்ந்த என் தந்தை ' ஏன் அப்படி? ' சொல்கிறாய் என்றார். ஏனெனில் பிரம்மச்சாரியாக வாழும் ஒருவர் தன் முழு ஆற்றலையும் - மனது வைத்தால் - நல்ல விஷயங்களில் செலவிட முடியும், அப்துல் கலாம் கூட அப்படிதான் என்றேன். என் அப்பா ஒரு நொடியில் சுதாரித்தவராய் பேச்சை தவிர்த்துவிட்டு வேறு திசையில் கவனத்தை திருப்பிவிட்டார்.
தற்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் ' Life of Kalam' என்ற நூலில் அருண் திவாரி, அப்துல் காலம் அவர்கள் தனக்கும் வாஜ்பாய் அவர்களுக்கும் பொதுவான அம்சமாக 'கவிதை' இருப்பதாகவும்,வாஜ்பாய் ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாஜ்பாயின் கவிதைகளில் தனக்கு மிகவும் பிடித்த கவிதையாக கலாம் அவர்கள் " உயரம் " என்ற கவிதையை கூறியுள்ளார். பொதுவாக, படைப்புகள் என்பவையே ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை , ஏக்கங்களை, நிராசைகளை, கற்பனைகளை வெளிப்படுத்துவதாகவே அமையும். வாஜ்பாயின் அக்கவிதையை படிக்கும்போது அவர் எப்படிப்பட்ட பண்புள்ளவர், மனிதநேயம் மிக்கவர் என்பதை அறியமுடியும். அக்கவிதை மிகச்சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை, கவிதையின் சாரம் இதுதான்:-
உயரம்
_______
உயரே செல்கிறேன்
உயரே செல்கிறேன்
சாதித்து சாதித்து உயர்ந்து செல்கிறேன்.
உயரத்தின் உச்சியில்
தனிமையை தவிர வேறொன்றுமில்லை !
அங்கே மரங்கள் வேர் கொள்ளாது..
செடி கொடிகள் வளராது..
ஓ ! கடவுளே !
என் சக மனிதனை கூட
கட்டித்தழுவ இயலாத உயரத்தில்
என்னை வைத்து விடாதே !
- வாஜ்பாய்.
Writing
P.Lingeswaran,
Assistant Professor
Comments
Post a Comment