இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா என்பது ஒரு கேள்வி.
முதலில் நமக்கு எல்லாம் தெரியுமா என்பது இன்னொரு கேள்வி. குரு என்றால் மனிதனின் அறியாமை எனும் இருளை போக்குகிறவர் எனப்பொருள். நமக்கு என்ன அறியாமை உள்ளது? நிச்சயமாக உள்ளது. உதாரணமாக, பூமிப்பந்தில் சதுரமாகவோ வட்டமாகவோ ஒரு நிலத்தை அடையாளம் வைத்துக்கொண்டு என் நிலம் என் நிலம் என உரிமை கொண்டாடுவது, சிலநேரங்களில் மறதியில், நாமும் சாஸ்வதமாக பல்லூழி காலம் வாழப்போகிறோம் என நினைத்துக்கொள்வது, இயற்கையோடு விளையாடுவது போன்றவை நம் அறிவு மயக்கங்களில் சில. அந்த அறிவு மயக்கத்தை தெளிய வைக்க வருவபர்தான் குரு.
உலக வாழ்வில் பெரும்பாலும் மனிதர்களின் நினைவு - நிரம்ப எப்படி பணம் சம்பாதிப்பது, பாலுணர்வு இவற்றிலே அழுந்திக் கிடைப்பதால் - அவர்களின் எண்ணத்திற்கேற்ப மனமானது அவர்களை உந்தித்தள்ளி அதே நிலையை ஒத்த குருஜிக்களிடம் அல்லது போலி குருக்களிடம் அவர்களை கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு தன்முனைப்பு (EGO ) காரணமாக ஒருவர் குரு ஸ்தானத்தில் இருப்பதை உள்மனம் ஒத்து கொண்டாலும், வாய்விட்டு கூற மறுக்கிறார்கள்.
உண்மையில் குரு என்பவர் நம்மை வாழ்க்கைத் துயரங்களில் இருந்து விடுவிக்க வருபவர். ஏதோ ஏதோ நினைத்து நினைத்து ,கற்பனையில் உழன்று உழன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை - வாழ்வின் உண்மை நிலையை அகத்தில் உணர்த்தி அமைதி பெறச் செய்பவர். மீண்டும் மீண்டும் தவறு செய்து வினைகளை மூளையில் ஞாபகங்களை கூட்டிகொண்டே செல்லும் நம்மை தடுத்து நிறுத்துபவர். தமிழில் " தடுத்தாட்கொள்ளுதல் " என்ற ஒரு அழகான வார்த்தை உண்டு. நாம் தவறு செய்யும்போது, தவறு செய்ய நினைக்கும்போது - பிரபஞ்சம் முழுவதும் விரிந்து நிற்கும் குருவின் எண்ண அலைகள் - அதாவது பிரபஞ்சம் முழுவதும் விரிந்து நிற்கும் குருவானவர் - ஒரு நொடியில் நம்மை தடுத்தாட் கொள்கிறார்.
முற்றிலும் இறைவனை உணர்ந்தவரே குரு. இறைவனே குருவாக வருகிறார். முற்றிலும் மனத்தூய்மை பெற்றவரே குரு.
1. ஐயப்படாது அகத்தது உணர் வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
2. அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
என்ற தெய்வப்புலவரின் குறள்களையும் , அந்தணர்க்கு அவர் கூறும் இலக்கணத்தையும் ஒப்பு நோக்குக.திருமந்திரத்திலும், சமஸ்கிருத ஆன்மீக நூல்களிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது காண்க.
ஆகையால், குருவின் துணையின்றி ஒரு மனிதன் தானாக சுய முயற்சியில் வாழ்க்கையின் உண்மைநிலை அறிவதும், சிக்கல்களில் இருந்து விடுபடுபடுவதும் மிக அரிது. மேலும், தன்முனைப்பின் காரணமாக ஒரு குருவிடம் நிலைத்து நிற்காமல் பல குருமார்களிடம் சுற்றிக்கொண்டே இருப்பது நேரம்தான் வீண். பிறவி நீள்வதுதான் மிச்சம். வினைபோகமே ஓர் தேகம் கண்டாய் என்கிறார் பட்டினத்தார்.
சரியான குருவை தேர்ந்தெடுப்பது எப்படி? இக்கேள்விக்கான பதில் சுலபம். உங்கள் தேடல் என்னவோ அதற்கேற்ப குரு தானாக அமைவார், வருவார். பணம்தான் உங்கள் இலக்கு என்றால், மன அமைதிதான் உங்கள் இலக்கு என்றால், செக்ஸ்தான் உங்கள் இலக்கு என்றால் அதற்கேற்ப குரு தானாக வருவார். இலக்கு தவறானது என்றால் அவமானமும் பின்னால் வரும். உங்கள் உள்ளுணர்வே சரியான குருவை ஈர்க்கும். இன்னார்தான் உங்கள் குருவாக இருக்க வேண்டுமென நான் கூறவில்லை. சுவாமி விவேகானந்தரோ, நபிகளோ, செயின்ட். பால் அவர்களோ, ஏசுநாதரோ, ஓஷோவோ யாரை வேண்டுமானாலும் உங்கள் குருவாக தேர்ந்தெடுக்கலாம். உண்மையில் நீங்கள் விழிப்புணர்வு நிலையில் குருவை தேர்ந்தெடுக்கவில்லை. உங்கள் நோக்கத்திற்கேற்ப உங்கள் ஆழ்மனமே குருவை உங்களிடம் கொண்டு வருகிறது அல்லது அவரிடம் உங்களை சேர்க்கிறது.
குரு சிஷ்யன் உறவில் மிக அற்புதமான விஷயம் என்னவெனில் - முதலில் நீங்கள் (உண்மையான ) குருவை இறுக்கப் பற்றிக்கொள்ள வேண்டும். சில காலம், குரங்குக்குட்டியைப் போல குருவைப் பிடித்துக்கொள்ள வேண்டும். சிலநாட்கள் கழிந்தால், குரு உங்களை பூனைக்குட்டியை போல கவ்விக் கொள்வார். நீங்கள் நினைத்தாலும் அவர் உங்களைவிட மாட்டார்.
சுத்தமாக மனத்தூய்மை பெற்ற ஒருவரோ, முற்றிலும் இறைவனை உணர்ந்த ஒருவரோ உங்களுக்கு குருவாக வாய்க்கப்பெற்றால் அது உங்கள் முன்னோர்கள் செய்த பாக்கியம். ஒவ்வொரு ஆன்மாவிலும் தெய்வத்தை உணர வேண்டும் என்ற ஆவல் உள்ளார்ந்த தன்மையாக உள்ளது. சிலருக்கு அது வெளிப்படையாக தெரிகிறது, சிலருக்கு வெளிப்படாமல் அமைதியாக ஆழ்மனதில் படர்ந்துள்ளது.
LINGESWARAN
Assistant Professor / MBA
Comments
Post a Comment