தமிழருவி மணியன் - காந்திய மக்கள் இயக்கம் . .


20/03/2016 அன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல்லில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள், அக்கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.  தற்செயலாக அந்த வழியே சென்றுகொண்டிருந்த நான், பைக்கை ஓரங்கட்டி விட்டு - உத்தேசமாக ஐம்பது பேர் கூடியிருந்த கூட்டத்தில் ஐம்பதியோறவது  ஆளாக இணைந்து அவரது பேச்சை கவனித்தேன்.  தன் பேச்சில் Benevolent  Dictator என்ற ஓர் அருமையான வார்த்தையை மணியன் பயன்படுத்தினார். Dictator  என்றால் சர்வாதிகாரி.  Benevolent  Dictator என்றால் ஜனங்களின் நலனுக்காகவே சர்வாதிகாரத்தை பயன்படுத்துவது. (உ-ம்: லீ க்வான் யூ, முதல் சிங்கப்பூர் பிரதம மந்திரி).  காந்திய சிந்தனைகள், காந்திய தத்துவங்களை ஆதாரமாக வைத்து  ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளனர் என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறினார்.

அதிமுக, திமுக, ம.ந.கூ, பா.ஜ.க, என சர்வ கட்சிகளையும் விளாசித் தள்ளினார். தன் மீது அடிக்கடி கூறப்படும் சில குற்றச்சாட்டுகளுக்கு சலிப்புடன் விளக்கமளித்தார்.  Psychoanalysis எனும் உளவியல் உத்தியின்படி ஒருவர் நீண்ட நேரம் பேசும்போது அவரை எடைபோடுவது மிக எளிது.  அரசியல்வாதிகள் நீண்ட நேரம்  ஆவேசமாக பேசும்போது, அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை நினைத்து நீங்கள் நகைத்திருப்பீர்கள் அல்லவா?  ஒருவர் பேச்சை கூர்ந்து கவனித்தாலே - அவர் அடிமனதில் இருந்து உண்மையை பேசுகிறாரா இல்லை நடுமனத்தில் சிந்தித்து வார்த்தைகளால் வேஷமிட்டு பேசுகிறாரா என்பதை கண்டிபிடித்து விடலாம்.  தொண்டை நரம்பு புடைக்க மேடைகளில் கத்திவிட்டு, ஏசி அறைகளில் சாமான்யனுக்கு  கிடைக்காத சுகங்களை அனுபவித்து வாழும் அரசியல்வாதிகள் ரகத்தில் தமிழருவி மணியன் சேரமாட்டார்  என்றே தோன்றுகிறது.

தத்துவத்தையும், அறத்தையும் அடிப்படையாக கொண்டு -  காந்திஜி, காமராஜர் போன்றவர்களை முன்னோடிகளாக கொண்டு இயக்கம் நடத்தும் இவரின் கட்சிக்கு இந்த முறை ஓட்டளித்தால் என்ன? எனும் எண்ணம் ஓர்  கணம் மின்னி மறைந்தது.

P.LINGESWARAN,
21/03/2016
DINDIGUL.

Comments