காதல் 2016 . .





இப்போது காதல் என்பதே இல்லை எனக் கொதிக்காமல் ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஈகோ உண்டு.  தான் நினைப்பதே சரி என்று நினைப்பதே ஈகோ.  இருபது  வருடங்களுக்கு முன் உண்மைக் காதல்கள் இருந்தன, இப்போது காமக் காதல்கள்தான் உள்ளன என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. நான் 17 வயதில் ஒரு பெண்ணை காதலித்தேன். 33 வயதில் திருமணமாயிற்று.  இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?  ஹார்மோன்களின் கூடுதல் குறைவுதான் வித்தியாசம்.  17-18 வயதில் ஏற்படுவதுதான் உண்மையான காதல் என்பது என் அபிப்ராயம். 17 வயதில் ஒருவர் மேல் காதல் வர, ஒரே தகுதிதான் உண்டு. பிடித்திருக்க வேண்டும்.  அவ்வளவே. ஆனால் நீங்கள் 30 வயதில் ஒரு பெண்ணை /ஆணை காதலிக்க(திருமணம் செய்ய)  அவர் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கௌரவமான வேலை, குடும்ப அந்தஸ்து, எதிர்கால திட்டங்கள், வேலையின் தன்மை, ஜாதி மதம் இப்படி பலபல. 17 வயதில் வருவது  Infatuation என்பார்கள். அப்படியென்றால் 30 வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டு  ஆஞ்சநேயர் பக்தர்களாக மக்கள் மாறி விடுகிறார்களா என்ன?  அதே பஜனை தான் பாடுகிறார்கள். சிறிய வயது காதல் தூய நீர்நிலையை போன்றது. சமூகத்தின் அழுக்குகள் ஏதும் படியாதது. எதிர்கால நெருக்கடி கழுத்தறுப்புகள் இல்லாதது.  வயது கூட கூட சமூகம் நம்மை பார்த்து நகைக்கிறது.  மனித மனதின் இயல்பான தன்மையே காதல் என்று சொல்லலாம். ஆதலால்தான்  எந்த வயதிலும் ப்ரேமம் (மலையாளம்) போன்ற படத்தை மெய்மறந்து ரசிக்க முடிகிறது.


நம் மூளையில் எண்ணற்ற வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. Dopamine, Serotonin என பல பெயர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை 14 வயதில் சுரக்க துவங்கி, 30 வயதுக்கு மேல் லேசாக குறைய துவங்குகிறது.  Optimum ஆக 25 வயதில் திருமணம் செய்வது மனதிற்கும், உடல் உள்ளுருப்புகளுக்கும் நல்லது என நினைக்கிறன். 

தற்கால இளைஞர்களுக்கு காதலின் புனிதம் தெரியவில்லை, காமத்திற்காக காதலிக்கிறார்கள் என்ற புலம்பலை பரவலாக கேட்க முடிகிறது.  இந்த புலம்பலில் நீதி சற்று குறைவாகவே  இருக்கிறது எனத் தோன்றுகிறது.  மொத்த இளைஞர்கள் கூட்டமும்தானே இப்படி மாறியிருக்கிறது?  இதன் காரணம் தெளிவானது: செல் போன்கள், இன்டர்நெட்,  உணவு முறை, வாழ்க்கை முறை ,சுருக்கமாக சொன்னால் தொழில்நுட்ப முன்னேற்றம்.  பத்து இருபது வருடங்களுக்கு முன்பு இவையெல்லாம் இல்லையே? இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?யோசித்து பாருங்கள்.

LINGESWARAN
FEBRUARY 12/2016.

Comments