பாபநாசம் - கமல் எனும் மகா நடிகனின் மாயாஜாலம். .








சினிமா பார்ப்பதையே ஓர் ஆனந்த அனுபவமாக மாற்றிவிடும் திறன் மிகச்சில படைப்புகளுக்கு தான் உண்டு.  03/07/2015 அன்று நான் பார்த்த பாபநாசம் திரைப்படமும் அப்படி ஓர் அனுபவத்தை தந்தது. கமல் எனும் மகத்தான நடிகனின் நடிப்பில் அப்படியே பிரமித்துவிட்டேன். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வரும் பந்தையும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசும் கிரிக்கெட் வீரனை போல, காட்சிக்கு காட்சி கமல் அசத்துகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.  கடைசி சில காட்சிகளில், இருந்த ஒரு ஆதாரமும் கிடைக்காமல் போலீஸ்(ஐ.ஜி) திகைத்து நிற்கும்போது - தலையை சாய்த்து கமல் ஒரு பார்வை  பார்க்கிறாரே - ஹீரோயிசம், உலகத்தரம், பாத்திரத்தின் உணர்வுகள் என அத்தனை வார்த்தைகளையும் ஒரே பார்வையில் அடக்கி விடுகிறார்.  கிளைமாக்ஸ் சீனில், வழக்கம்போல் 'கமல் கிளிஷே' எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கண்ணீரும், உணர்ச்சியும் பொங்க அவர் கைகூப்பி பேசும்போது - நடிப்புக் கலை மீது தீராக்காதல் கொண்ட ஒரு மகா கலைஞனால்  மட்டுமே அப்படி ஒரு மாஜிக்கை நிகழ்த்த முடியும்.


படத்தின் வெற்றியில் மிகப் பெரிய பங்கு  இயக்குனர்  Jeethu Joseph- க்கு தான்.  He should be a Clever director. படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் மிக இயல்பாக , தேவையான அளவு கச்சிதமான நடிப்பை தந்திருக்கின்றனர் (இளவரசு, கலாபவன் மணி, ஆஷா சரத், இன்ஸ்பெக்டர்). அதிலும் ஆஷா சரத்தின் கூரிய கண்களோடு, அவரது  அழகும் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என்று நினைக்கிறேன். அவருக்கு கணவராக நடித்தவர் யார்?  மிகச் சரளமாக நடித்திருக்கிறார்.  மலையாளி என நினைத்திருந்தேன். அவர் (ஆனந்த் மகாதேவ்) ஹிந்திக்காரர் என்று என் மனைவி கூறினாள். கௌதமியின் நடிப்பிலும் குரலிலும் அசதிதான்  தெரிகிறது.


கமல் மட்டுமல்லாமல் அத்தனை கலைஞர்களும் திருநெல்வேலி வட்டார பாஷையை அட்சர சுத்தமாக பேசியுள்ளார்கள். எனக்கு மிகத்தெளிவாக நெல்லை பாஷை புரிந்தது.   REC-ல் படித்ததனால் எனக்கு தமிழ்நாட்டின் எல்லா லோக்கல் ஸ்லாங்குகளிலும் பரிச்சயம் உண்டு.  'டக்குனா சல்லிப்பய.....',  'வீட்ல கரச்சல குடுக்ராவ.....',  ' நீ என்ன அப்படி நிக்க....' - இப்படி படம் முழுக்க.  திருநெல்வேலி வட்டார வழக்கு, மலையாள மொழியின் இழுவை உச்சரிப்பும் மலையாள வார்த்தைகளும் கலந்த தமிழ் என்றே யூகிக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் சமூக அக்கறை வசனங்களில் அங்கங்கே தெறிக்கிறது. பாபநாசம் - மனதை மயக்கிய ஓர் இனிய அனுபவம்.



ப.லிங்கேஸ்வரன்.


Comments