தெருவுக்கு தெரு கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு கல்விச்சேவை செய்து வருகின்றன. எந்த படிப்பானாலும் அதில் சேர, மக்கள் கூட்டமும் அம்முகிறது. 1980-90 - களில் பொறியியல், மருத்துவம் போன்றவற்றிற்கு மிகுந்த மதிப்பு இருந்தது. தற்போது இப்படிப்புகள் குப்பையாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மக்களும் விழித்தபாடில்லை. பொதுவாக, பெற்றோரானாலும் பிள்ளைகலானாலும் - ஒரு படிப்பில் சேரும்முன் - அதற்கு தம்மிடம் அடிப்படையாக ஒரு ஆர்வம் உள்ளதா, ஈடுபாடு (Interest and Involvement) உள்ளதா என ஆராய்வதில்லை. என் நண்பன் அதை படிக்க போகிறான், அவர் சொன்னார் இவர் சொன்னார், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் என குருட்டாம்போக்கில் தூண்டப்பட்டே ஒரு பாடப்பிரிவில் சேர்கின்றனர். குளறுபடிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது?
அப்துல் கலாம் அவர்கள் , ஒரு பொறியியல் பிரிவை ( அல்லது ஏதாவது ஒரு பாடபபிரிவை) எவ்வாறு தேர்வு செய்வது என தன் ' அக்னி சிறகுகள்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " எந்த ஒரு பிரிவை தேர்வு செய்யும் முன் அது தன் உள்ளார்ந்த பண்புகளுக்கும், இலட்சியங்களுக்கும் (Inherent traits and Objectives in life) ஒத்து வருமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். இதை இன்று பொறியியல் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புறேன் " என்று தெளிவாக அறிவுறுத்துகிறார்.
இன்று ஒரு படிப்பில் மாணவர்கள் (பின்புலத்தில் பெற்றோர்கள்) அடித்து பிடித்து சேர்வதற்கு முக்கிய காரணம் - படித்து முடித்தவுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதோ, நாட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதோ அல்ல. படிப்பை முடித்தவுடன் நல்ல வருமானமும், அதன் மூலம் சொகுசான வாழ்க்கையும் அடையலாம் என்பதே. ஆனால், உண்மையோ மிக எளிதானது. ஒருவர் தன் உள்ளார்ந்த அடிப்படை பண்பிற்கேற்றவாறு ஒரு பாடத்தை படிக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர் முழு ஈடுபாடு, ஆர்வம் மற்றும் உழைப்புடன் செயல்படுவார். தானாகவே அவர் மனதில், உடலில் உறைந்திருக்கும் முழுத் திறமையும் வெளிப்படும். இந்த சூழ்நிலையில், வேலை வாய்ப்புக்கும், வருமானத்திற்கும் என்ன பஞ்சம்? தான் தெரிவு செய்த துறையில் மிக உயர்ந்த நிலையை படிப்படியாக அடைய முடியும் அல்லவா? மாறாக, வெளிப்பகட்டுக்கும் வருமானத்திற்கும் ஆசைப்பட்டு ஒருவர் தனக்கு சுவாரஸ்யமே இல்லாத பாடத்தை படிக்கிறார் என்றார் அவர் நிச்சயமாக மழுங்கிய ஆற்றலையே (Inefficiency) வெளிபடுத்துவார்.
ப.லிங்கேஸ்வரன்.
13/06/2015.
Comments
Post a Comment