எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ராஜபார்வை திரைப்படத்தை சிலாகித்து உயிர்மை பத்திரிகையில் எழுதியதை படித்ததிலிருந்தே, அந்த படத்தை தேடி அலைந்து கொண்டிருந்தேன். பலமாதங்கள் முயற்சிக்கு பின் ஒரு பெட்டிக் கடையில் ராஜபார்வை சிடி கிடைத்தது. கதை ஒரே வரிதான். காதலிக்கிறார்கள். கடைசியில் காதல் என்னவானது. பார்வையற்ற ஒரு அழ்கான இளைஞன். மிக அழகான ஒரு பெண்.
ராஜபார்வை திரைப்படம் (1981) ஒரு மராட்டிய அல்லது பெங்காலி படம் பார்க்கும் உணர்வை தந்தது. அளவான ஆனால் மேதாவித்தனமற்ற இயல்பான வசனங்கள். வழக்கமான தமிழ் சினிமாக்களிருந்து ராஜபார்வை முற்றிலும் மாறுபட்டது. முடிந்தவரை தமிழ்நடிகர்களை தவிர்த்துவிட்டு, பிறமொழி மாந்தர்களை கமல் நடிக்க வைத்திருக்கிறார். காட்சியமைப்புகள் எளிமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜபார்வை படத்தை கூர்ந்து கவனிப்பது ஓர் இன்ப உணர்வை (Pleasure experience) தருகிறது. மாதவி இந்த படத்தில்தான் அறிமுகம் என நினைக்கிறேன். மாதவியின் அழகு அசரடிக்கிறது. கமல் பார்வையற்ற கலைஞனாக நேர்த்தியாக, சற்று கூட மிகையில்லாமல்- துக்கம், கோபம், இயலாமை, பரிதவிப்பு என் அத்தனை காட்சிகளிலும் தான் ஒரு மகத்தான கலைஞன் என்பதை நிரூபிக்கிறார். கமலுக்கும் மாதவிக்கும் காதல் மலரும் காட்சி, ஒரு பூ மலர்வதை போல இயல்பாக, அற்புதமாக காட்சிப்படுத்த பட்டிருக்கிறது.
படத்தில் எல்லா உணர்வுகளையும் இளையராஜாவின் வயலின் இசையே பேசிவிடுகிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ஒரு வயலின் இசைக்கோர்ப்பு, நிச்சயமாக இளையராஜா ஒரு உலக இசைமேதை தான். பல இடங்களில் மௌனத்தையே இசையாக்கிவிடுகிறார். ஒரு இசை மேதைக்கான முக்கியமான அளவுகோல் இதுவென நான் கருதுகிறேன். மௌனம் எந்தவித வடிவும் இல்லாத ஓர் ஆயுதமாகும். பார்வையாளனின் உணர்வுக்கேற்ப மௌனம் உருவெடுக்கிறது.
இத்திரைப்படத்திற்கு ராஜபார்வை என பெயர் சூட்டியவ்ர் கவியரசர் கண்ணதாசன். இருபது-முப்பது வருடங்களுக்கு முன் உயிரோடு உயிராக, உள்ளத்தோடு உள்ளம் கலந்த இருவரின் காதல் எப்படி இருக்கும் என்பதை இன்றைய நூடுல்ஸ் காதலர்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்களுக்கு நிச்சயமாக ராஜபார்வை திரைப்படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்கிறேன்.
ப. லிங்கேஸ்வரன்
ப. லிங்கேஸ்வரன்
Comments
Post a Comment