Freudian Psychology - Id, Super Ego, Ego.







புற மனம் எப்போதும் மூன்று வகையான நெருக்கடிக்கு (Supervision and Persuading) உள்ளானபடியே இருக்கிறது. அவை:
1. Id
2. Super Ego
3. Society
இதில் Id என்பது உடல் இயக்க தேவைகளாகும்(Physiological needs).  அதாவது பசி,தாகம், குளிர் சூடு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளல் மற்றும் பாலுணர்வு(Sexual need) போன்றவை ஆகும். ஒவ்வொரு தேவையும் அவ்வப்போது உரிய நேரத்தில் கிளர்ந்தெழுந்து - தங்களை நிறைவு செய்து கொள்வதற்காக (Gratification of needs) - புற மனத்தை வந்தடைகின்றன. Id உணர்வுகள் உரிய நேரத்தில் பூர்த்தி செய்யப்படாவிட்டால், மனத்திற்கு அது துன்ப உணர்வாகி விடும். அவற்றின் ஒரே குறிக்கோள் Satisfaction of needs and avoidance of pain மட்டுமே ஆகும். Id உணர்வுகளுக்கு நியாய தர்மம், சரி தவறு, நல்லது கெட்டது என்ற ஏதும் தெரியாது. இவற்றை தூய தமிழில் கருநிலை உணர்வுகள் எனலாம். Id உணர்வுகளில் பாலியல் உணர்வே மிகவும் வலிமையானது ஆகும். பாலியல் உணர்வுகள் சரியான நேரத்தில் நிறைவு எய்தா விட்டால் அவை மூர்க்க உணர்வாக(Aggression) வெளிப்படும். Id உணர்வுகளும், ஆழ்மனமும் ஒன்றோடொன்று இசைந்தும்(Association), ஒன்றுக்குள் ஒன்று ஊடாடியும்(Interaction) செயல்படுகின்றன.


ஆழ்மனதிலிருந்து ஓங்கி எழும் Id உணர்வுகள் புற மனத்தை வந்ததையும்போது அல்லது தூண்டும்போது, புற மனம் அவற்றை அப்படியே செயல்படுத்தி விடுவதில்லை. காரணம், Super Ego எனும் மனத்தின் ஒரு பிரிவு எப்போதும் புற மனத்தையும், Id-யும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் Super Ego புற மனத்தை சரியான வழியில் தேவைகளை(Needs, Desires and Wishes) நிறைவேற்றிக் கொள்ளுமாறு அறிவுறுததிக்கொண்டே இருக்கும். Super Ego சற்றும் வளைந்து கொடுக்காத ஒரு சர்வாதிகாரி போன்றதாகும்.


உண்மையில், மனத்தில் Super Ego என்ற ஒரு தனிப்பிரிவு கிடையாது. மனிதன் குழந்தை பருவத்திலிருந்து வளர வளர - மனித மனம் தான் வளரும் சூழ்நிலைகளை சமூகத்தை உற்று நோக்கி அதன் கோட்பாடுகளை, கட்டுப்பாடுகளை, அறநெறிகளை உள்வாங்கி கொண்டு - தனி அமைப்பாக உருவெடுக்கிறது. இதுவே சூப்பர் ஈகோ ஆகும். நாம் பேச்சு வழக்கில் வழங்கும் மனசாட்சியை இதனோடு ஒப்பிடலாம்.


ஒரு மனிதன் சமூக கட்டுப்பாடுகளுக்கு, அறநெறிக்கு முரணான செயல்களை செய்ய முனையும்போது, Super Ego மனிதனின் Ego-வை வன்மையாக(Condemn)  கண்டிக்கிறது. குற்ற உணர்வுக்கு (Sense of guilt) உள்ளாக்குகிறது. தேவைகளை, ஆசைகளை முறையற்ற வழியில் நிறைவேற்ற கூடாது என உள்ளிருந்து குரல் (Inner voice) கொடுக்கிறது. அதே சமயம் ஆழ்மனதிலிருந்து கிளர்ந்து எழும் எண்ணங்கள், தேவைகள் இவை ஒரு பக்கம் மனிதனை நெருக்குகின்றன. சமூகத்திலோ அத்தேவைகளை பூர்த்தி செய்ய உகந்த வாய்ப்போ, நேரங்காலமோ வாய்க்கவில்லை. இவ்வாறாக ஒரு மனிதன்(அதாவது புற மனம்) Id - Super Ego - Society என மூன்றுவித நெருக்கடிக்கு உள்ளாகின்றான். சமுதாயத்தின் பிடியோ கிடுக்கிபிடி போன்றது.


Super Ego-ன் சம்மத்தோடும், சமூக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் ஒருவரின் தேவைகள் நிறைவேற்றப்படும்போது மனித மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுகிறது. உடல் நலமான நிலையில் அமைகிறது. ஆனால் வெளியுலகில் போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லாத நிலையிலோ- Super Ego நெருக்கடிக்கு உள்ளாகியோ ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளை கட்டுப்படுத்தி கொண்டாலோ அல்லது தனக்குள் அமுக்கிகொண்டாலோ அந்த தேவைகள் ஆசைகள் அதனையும் நிறைவேறாத விருப்பங்களாகி(Unfulfilled wishes) ஆழ்மனதில் புதைந்து விடுகின்றன.மனத்தில் புதையுண்ட விருப்பங்கள் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, வெளிவர துடித்துக் கொண்டே (Impulses) இருக்கின்றன. நினைவுக்கு எத்டியோ எட்டாமலோ அவை புற மனத்தில் கடலலைகள் போல மோதிக்கொண்டே இருக்கின்றன. புற மனமோ - Super Ego ன் கண்டிப்புக்கு அஞ்சியும், சமூக சூழல் காரணமாகவும் - ஆழ்மன விருப்பங்களை, ஏக்கங்களை தலையில் அடித்து மீண்டும் ஆழ்ம்னத்திற்கே அனுப்பி விடுகின்றன. இது புற மனத்திற்கும் அடி மனத்திற்கும் இடையில் நடக்கும் ஓயாத போராட்டமாகும். நிறைவேறா ஆசைகள், விருப்பங்கள் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆழ்மனதில் அக இறுக்கம் (Internal tension) அதிகரிக்கிறது. கூடிக்கொண்டே வரும் அக இறுக்கம் ஆற்றலாக(Energy) மனித உடலின் நரம்புகள், சதைகள் வழியாக பிதுங்கி வெளிப்பட்டு பல்வேறு நோய்களாக உருவெடுக்கின்றன. மன பதட்டம்(Anxiety), மிகை அச்சம்(Phobia), நரம்பு தளர்ச்சி, வயிற்று புண்(Ulcer), தலைவலி, தோல் நோய்கள், சர்க்கரை வியாதி, காசநோய், புற்று நோய் என எவ்வித நோயாகவும் வடிவெடுக்கலாம்.


இரக்கமற்ற இந்த் போராட்டங்களுக்கிடையே புற மனம் தன்னை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு உத்திகளை கையாளுகிறது. இல்லையெனில், ஆழ்மனதிலிருந்து துடித்து எழும் ஆசைகள் மனத்தை சிதைத்து விடும். புற மனத்தின் இவ்வித உத்திகள் Defense mechanisms எனப்படும். தேவைகளை உரிய வழிகளில் நிறைவேற்ற முடியாத புற மனம் அவற்றை 'மடை மாற்றம்' (Transformation) செய்கிறது. ஆன்மீகம், கலை இலக்கியம் போன்ற உயரிய வழிகளில்(Sublimation) திருப்புகிறது. சுயஇன்பம்(Masturbation), கற்பனைகளில் துய்த்து இன்பம் காணுதல்(Hallucination or Imagination) , விளையாட்டுகளில் ஆவேசமாக ஈடுபடுதல் போன்ற தற்காப்பு உத்திகள் மூலமாக தேவைகள், ஆசைகளின் வீரியத்தை (Intensity) புற மனம் குறைத்துக்கொண்டு இறுக்கம் தளர்கிறது. Defense mechanism பற்றி நீங்கள் விரிவாக ஆங்கில நூல்களிலும், இன்டெர்நெட்டிலும் படிக்கலாம். இதைத் தவிர கனவுகளிலும் ஆழ்மன எண்ணங்கள் வெளிப்படுகின்றன. உறக்கத்தில் புற மனம் சற்று அசந்து விடுகிறது. ஆனால் சூப்பர் ஈகோ எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. எனவே ஆழ்மன உணர்வுகள் வேஷமிட்டுக் கொண்டோ(in disguise), திரிந்த நிலையிலோ(modified) அல்லது வேறுபட்ட பல்வேறு விருப்பங்கள் ஒன்றோடொன்று இணைந்தோ(merge) - கனவுக் காட்சிகளாக வெளிப்பட்டு தங்களை நிறைவு செய்து கொள்கின்றன. ஆகவே கனவுகள் மனத்தின்(புற) இறுக்கம் , பதட்டம் இவற்றை குறைக்கும் பணியை செய்கின்றன.


நமது உள்ளதை,கனவுகளை நாமே உற்று நோக்குவதன் மூலமும் ஆராய்வது மூலமும் பிராய்ட் அவர்களின் கருத்துக்கள் எந்த அளவு உண்மையானவை என தெள்ளத் தெளிவாக உணரலாம். சமூகத்தை அவ்வளவு எளிதில் யாரும் மாற்றிவிட முடியாது. மெல்ல மெல்ல சமூகம் என்றோ மாறலாம். ஆனால் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை மிக குறுகியது அல்லவா?  கருநிலை உணர்வுகளும்(Id) பகுத்தறிவற்றவை மற்றும் கச்சா பொருள்(Raw material) போன்றவை. ஆகையால் நம்முன் இருக்கும் ஒரே வழி புற மனத்தை(அதாவது மனிதனின் சிந்தனை ஆற்றலை) வலுப்படுத்துவதும், வளப்படுத்துவதும் தான். மனத்தின் கட்டமைப்பை சந்தேகமற புரிந்துகொண்டு - மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, சமூக அமைப்பை, சமூக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு - அதற்கு தக்கவாறு நம்முடைய தேவைகள், விருப்பங்கள், இவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் திறனை பெற்று விட்டால் மன அமைதியும், நோயற்ற உடலும், வாழ்வில் வெற்றியும் வசமாகும்.பிராய்டிய உளவியலின் வெற்றியும் அதுவே ஆகும்.

பின்குறிப்பு
இந்த கட்டுரையை படிக்கும் முன் இதற்கு முந்தைய என் கட்டுரையை படித்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராய்ட் உளவியல் கடல் போன்றது என்றால் கடல்கரையில் விளையாடும் குழந்தை போன்றதே என்னுடைய இந்த இரண்டு கட்டுரைகளாகும். Sigmund Freud 23 நூல்கள் எழுதியுள்ளார். ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரின் சாதனை அளப்பரியது.

Comments

  1. In this related topic :

    http://www.cnn.com/2010/HEALTH/06/07/freud.psychology.psychoanalysis/index.html

    ReplyDelete

Post a Comment