உலக பொருளாதாரம், அரசியல், சட்டம் இவற்றில் நிலவும் குழப்பங்கள்....




நண்பர்களே!  இன்று நாம் மிகக் கடினமான சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சமூக நிலைமை தற்போது இல்லை. மனித மனம் இறைநிலை (Gravity)  எனப்படும் பேராற்றலை அடித்தளமாக கொண்ட ஒரு பாய்மப்பொருள் ஆகையால், கூட்டு மனமாக திகழும் சமுதாயமும் நிலையாக விளங்கும் என சொல்வதற்கில்லை. காட்டுமிராண்டிகளாக மனிதர்கள் வாழ்ந்த காலந்தொட்டு,  நவீன கருவிகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் இக்காலம் வரை - மானிட சமுதாயம் தனது பல்வேறு துறைகளிலும் (in the all walks of life)  யூகிக்க முடியாத மாற்றங்களை பெற்றுக்கொண்டே வருகிறது.



மற்றொருபுறம், தனி மனிதனானாலும் குடும்ப வாழ்க்கையானாலும், தொழில், நாடு என்ற அளவிலும் ஒவ்வொருவரும் கடுமையான சிரமங்களுக்கும் (Hardships), நெருக்கடிக்கும் உள்ளாகி நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.  கொளுத்தும் வெயிலில் இடையில் சிறிது மழை பொழிந்து ஆசுவாசப்படுத்துவது போல, வாழ்கையில் ஆங்காங்கே சிலபல இன்பங்கள் உண்டென்றாலும், பொதுவாக பார்க்குமிடத்து வாழ்க்கையே துயரமாகத்தான் இருக்கிறது. அவரவர்கள் தங்கள் வாய்ப்பு வசதி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமாளித்து வாழ்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.  அமைதி என்பது எட்ட முடியாத ஒரு இலக்காகவே இருக்கிறது.


சமுதாய அமைப்பு, மக்களின் மனோபாவம் - நடத்தை, விஞ்ஞானம் , அறிவு இவைகளெல்லாம் ஆதியிலிருந்து வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகிறதென்றால் - இந்த வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது?   இதன் முடிவுதான் என்ன?   உலகம் முழுவதும் பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், அரசியல் இவற்றை ஆராய்ந்தால் குழப்பங்களே எஞ்சி நிற்கின்றன.  எந்த ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் நிலைத்த பலன்களை 
தர முடியவில்லை.  கால வெள்ளத்தில் செல்லாத காசாகிவிடுகிறது.  பொருளாதாரம் என்றால் என்ன?  பொருளாதாரம் என்பதே மனிதர்களின்  தேவையில் இருந்துதான் துவங்குகிறது.  தேவைகளும், தேவைகளை பூர்த்தி செய்யும் முறைகளுமே பொருளியல் துறையின் அஸ்திவாரங்களாகும் .  பொருளியலின் பால பாடமும் இதுவே.  முதன்மை தொழில்களான உழவு , நெசவு, கட்டுமானம் மற்றும் இவை சார்ந்த தொழில்கள் பெரும் அளவிற்கே ஒரு நாட்டின் வளமும், அமைதியும் அமையும்.   மேற்கூறியவற்றை அளவுகோல்களாக கொண்டால் (Standards),  அவற்றிலிருந்து  விலகும் அளவிற்கேற்ப (Deviation)  நாட்டில்  விலைவாசி உயர்வு,  பணமதிப்பு குறைதல்,  மக்கள் வாங்கும் கடன்கள் அதிகரிப்பு,  வேலையில்லா திண்ட்டாடம்  போன்ற சீரழிவுகள் அதிகமாகும்.  தொடர் விளைவுகளாக சமூக அமையின்மை (Social restlessness),  குற்றங்கள்,  குடும்பங்களில் சண்டை சச்சிரவுகள் போன்றவையும் பல்கிப்பெருகும்.


மனித வாழ்க்கை புத்தகத்தின்  எல்லாப் பக்கங்களிலும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு துறை உண்டென்றால் அது பொருளாதாரம் மட்டுமே.  சுருங்க கூறினால், மனிதனின் பிறப்பு- நடப்பு- இறப்பு  மூன்றும் பொருளாதாரத்தில் அடங்கி விடுகிறது.   உலகத்தை,  ஒப்பிடுபவரின் மனோநிலையையும் அனுபவத்தையும் பொறுத்து,  ஒரு சிறை சாலைக்கோ , ஓர் இன்பப் பூங்காவிற்கோ ஒப்பிடலாம்.  மரணமே ஒரு மனிதனை உலக சமுதாயத்தின் கிடுக்கி பிடியிலிருந்து விடுவிக்கிறது.  உயர்நிலை ஊழியர் ஒருவரின் ஊதியம் ஒரு லட்ச ரூபாய், குமாஸ்தா (Clerk)   ஒருவரின் ஊதியம் பத்தாயிரம் ரூபாய் , மில்லில் மேற்பார்வையாளரின் ஊதியம் ஐந்தாயிரம் ரூபாய் இவை தவிர தினக்கூலிகள், விவசாயக்கூலிகள்.  இந்த அளவிற்கு ஏற்றத்தாழ்வுள்ள சமூக-பொருளாதார அமைப்பை கொண்ட நாட்டில் எவ்வாறு அமைதி நிலவும்?


சமூகவியல், பொருளியல் இவற்றை பற்றி விவாதிக்கும்போது சட்டம்  (Law  )  குறித்த பரிசீலனை தவிர்க்க முடியாதது.  உண்மையில், சட்டம் என்றால் என்ன?  நாற்புறமும் கட்டைகள் கொண்டு அமையப்பெற்ற சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பே சட்டமாகும்.  இதற்குள் ஒரு பொருளை அடைக்கலாம் .  இதே போன்றே (Analogy),  ஒவ்வொரு மனிதனின் சொல்லையும் செயலையும் பிறர்க்கு தீங்கிழைக்காத வகையில் கட்டுப்படுத்துவதே சட்டங்களின் அடிப்படை கருத்தாகும்.  சட்டங்கள் இல்லையென்றால், மனிதர்கள் மனம் போன போக்கில் செயல்பட்டு சமுதாயத்தையே உருக்குலைத்து விடுவார்கள்.  சட்டம் என்ற சொல்லுள்  தர்மம் என்ற சொல் தொக்கி நிற்கிறது.  அதாவது மறைந்து நிற்கிறது. தர்மம் என்ற சொல்லின் தமிழ்ச்சொல் அறம் என்பதாகும். அறம் என்றால் தனக்கோ பிறருக்கோ கெடுதல் செய்யாத தகைமையாகும்.  இப்போது சட்டம் என்பதை உற்று நோக்குவோம். சட்டத்திற்காக தர்மமா?   தர்மத்திற்காக சட்டமா?  அறநெறியை காப்பதற்காகத்தான் சட்டங்கள் அறிஞர்களால் வகுக்கப்பட்டுள்ளன.  சட்டம் என தனியாக ஒன்றுமில்லை. மனித சமுதாயத்தின் அடிப்படை கட்ட்டமைப்பை, மாண்பை, அமைதியை காப்பதே சட்டங்களின் மறைமுகமான நோக்கமாகும்.  இந்த அடிப்படை உண்மையை  மனதில் இருத்திக் கொள்ளாத எந்த நீதியரசரும், வழக்கறிஞரும்  துல்லியமான நீதியை வழங்க முடியாது.  பண வசதியில்லாத அடித்தட்டு மக்கள், படிப்பறிவில்லாதவர்கள், ஏழை எளியவர்கள் இவர்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தின்பால் உள்ளதே ஆகும்.


இளைஞர்களின் நிலை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது.  பொறுமையின்மை, பெரியோர்களிடம் மரியாதைக் குறைவு, ஆடம்பர பொருட்களிலும் இன்பங்களிலும் பெரும்பாலான நேரத்தை செலவிடுதல் போன்ற விரும்பத்தகாத நிலையே இன்றைய இளைய சமுதாயத்திடம் காணப்படுகிறது.  அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள்,  அதிகாரிகள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது.  கலங்கிய ஒரு நீர்நிலையிலிருந்து குவளை ஒன்றில் நீரை முகர்ந்து எடுத்தால், அந்த குவளை நீரும் கலங்கியே அல்லவா இருக்கும்?   அதே போல், பண்பாட்டில் தரம் குறைந்த மக்களிடமிருந்து உருவாகும் தலைவர்களும் அவ்வாறே  தரம் குறைந்த குணாதியசங்களை கொண்டுள்ளார்கள்.  இதில் யார் யாரை குறை கூறுவது?


இயற்கையானது முழுமையானது.  பூரணப் பொருளான  (Holistic or Plenum) இயற்கை உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் பருவுடல்களையும், அவர்களின் மனங்களையும் அதாவது எண்ண அலைகளையும் தன் அகத்தே அடக்கிக் கொண்டுள்ளது.  மனிதன் தான் தன்னுடைய பொறாமை, பேராசை, வெறுப்பு, அதிகாரம், பிறரை உயர்வு தாழ்வாக கணித்தல் போன்ற முறையற்ற எழுச்சி பெற்ற எண்ண அலைகளால் - மன அலைச்சுழல் உயர்ந்து - இயற்கையிடம் இருந்து தன்னை விலக்கிக்  கொள்கிறான்.  இயற்கையோ எப்போதும் மனிதர்களுக்கு கருணை காட்ட தவறுவதில்லை.  கடல் நீர் ஆவியாகி மேகமாகி உலகத்தை எப்போதும் குளிர்விக்க தயாராகவே இருக்கிறது.  ஆனால் இயற்கையின் பின்னமான (ஒரு பகுதியான)  மனிதர்களின் வெறுப்பு  அலைகள் மேகத்தை தங்களின் உள்ளார்ந்த தன்மையால் விலக்கி விடுகின்றன.  மேகங்களோ மனிதர்கள் வசிக்காத காடுகள் , கடல் போன்றவற்றில் பொழிந்து விட்டு செல்கிறன.


மனிதன் தனது தெய்வீக தன்மையை உணர வேண்டும்.  அரிதினும் அரிதாக கிடைத்த மானிடப் பிறவியை வீணாக்கி விடாமல் - தன்னுடைய தேவைகளை முயன்று பூர்த்தி செய்வதோடல்லாமல் - உலக மக்களோடு வற்றாத அன்பு செய்து, விட்டு கொடுத்தல், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்தல் போன்ற உயர் பண்புகளோடு வாழும்போது  தானாகவே உலகில் குழப்பங்கள் குறையத்துவங்கி - சமுதாயம் அமைதி நிலையை நோக்கி செல்ல துவங்கும். அந்த பொன்னாளில் தான் மனிதனின் உண்மையான வெற்றி துவங்குகிறது.  சமூகவியல் நிபுணர்கள், மனோதத்துவ அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள்  இவர்களை மனித குலத்தின்  நலனுக்காக வேண்டிக்கேட்டு கொண்டு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


ஏப்ரல், 27 / 2013.
திண்டுக்கல்.

Comments

  1. Nice articles.

    This article reflects the things which is happening infront of our eye

    A mirror of this real world

    ReplyDelete

Post a Comment