என் தந்தை நவம்பர் 27 காலமானார். தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், அவையில் என்னை முந்தச் செய்து விடலாம் என் கனவு கண்டவர். நல்ல ஆங்கில அறிவு, மூன்றுவேளை சோறு, மேற்கூரை என நான் கவலைப்படாமல் பார்த்துக்கொண்டார். உயிரோடு இருக்கும்போது திட்டிக்கொண்டே இருந்தவர், இறந்தபின் ஹீரோவாக தெரிகிறார். அவரது வாலிப பிராயத்தில் குறைந்தது ஐந்தாறு பெண்களுக்காகவாவது ஹீரோவாக விளங்கினார் என்று என் மாமா கூற கேள்விப்பட்டேன். கடைசியாக என் தந்தையை நான்தான் மிகுந்த சிரத்தையோடு கவனித்துக்கொண்டேன். சித்த மருத்துவம்தான் அவரை நலமாக வைத்திருந்தது. நடக்கும்போது எங்கு தடுமாறுவார், எப்படி தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பதுவரை துல்லியமாக அறிந்து வைத்திருந்தேன்.
தொடர்ந்த துக்க தினங்களில் மீண்டு சகஜ நிலைக்கு வருவதே சிரமமான காரியமாக இருந்தது. கவனத்தை கலைக்க எங்கள் ஊரில் நடந்த ஒரு புத்தக கண்காட்சியில் நுழைந்துவிட்டேன். நினைவெல்லாம் அப்பாவாக இருந்தார். ஒரு ஸ்டாலில் எஸ்.ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். ஒருவர்கூட அவரை கண்டுகொள்ளவில்லை. நான் சட்டென கவலை மறந்து அவரை நோக்கி நகர்ந்தேன். நேரில் சற்று பூசினாற்போல் புதுசாய் தென்பட்டார். நான் அருகில் சென்று வணக்கம் சார் என்றேன். புன்னகையுடன் கைகுலுக்கினார். உங்கள் புத்தகங்களை படிப்பேன் சார் என்றேன். சிரித்தார். உயிர்மையில் படிப்பேன் என்றேன். சிரித்தார். எல்லா புத்தக கண்காட்சிகளிலும் சுஜாதாவின் புத்தகங்களே அதிகம் சேல்ஸ் ஆகிறது என்பீர்களே என்றேன். அப்போதுதான் அவர் என்னை கவனித்து இருக்கவேண்டும். தயக்கத்துடன், சார் ஒரு போட்டோகிராப். ஓ! தாராளமாக எடுத்துக்கங்க என்றார். பிறகு உலக சினிமாவை பற்றி தான் எடுக்கப்போகும் செமினார் நோட்டிசை என்னிடம் ஒன்று கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அடுத்த கவன கலைப்பு, நீதானே என் பொன் வசந்தம். படம் முழுக்க இளையராஜாவின் இசை கட்டிப்போடுகிறது என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாக ஒத்துக்கொள்வீர்கள். நீதானே.......எந்தன்.....பொன்வசந்தம்.....ஜீவா பாடுகையில் ஒரு கிடார் இசை ஒலிக்கிறது பாருங்கள்! இதயத்தை சுண்டி இழுக்கிறது. நிஜமாகவே இழுக்கிறது.
கௌதம் மேனன் Aesthetic feeling எனப்படும் அழகியலை பிரதானப்படுத்தி படம் எடுக்கிறார். அழுக்கில்லாமல் எப்போதும் அழகாக தோற்றமளிக்கும் கதாபாத்திரங்கள், நுண்ணிய முகபாவங்கள், பின்னணி இசை என மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி சேர்ந்து நம்மை படத்தில் ஒன்ற வைக்கின்றன. சமந்தாவிற்கு எல்லாம் அளவெடுத்தது மாதிரி சரியாக இருக்கிறது.
really good grief resolving technique to be followed by common people
ReplyDelete