நான் தமிழ் சினிமாக்களை விரும்பி பார்ப்பேன். ஹாலிவுட் படங்களை அவ்வளவாக பார்ப்பதில்லை. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களையே நான் இன்னும் பார்க்கவில்லையோ என்ற மனக்குறை எனக்குண்டு. இன்றைய உலகயமயமாக்கல் காலகட்டத்தில் ஒரு கல்லூரி மாணவரோ, ஒரு சமூகநல விரும்பியோ, ஒரு பொதுநோக்குடைய சிந்தனையாளரோ அவ்வப்போது வெளிவரும் திரைப்படங்களை பார்ப்பது அவசியம் என்றே கருதுகிறேன். காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, அது எடுக்கப்பட்ட விதம், மக்களிடையே பெரும் வரவேற்பு இவையெல்லாம் மாறிவரும் மக்களின் மனோநிலையை, சமூக-பொருளாதார சூழ்நிலையை துல்லியமாக பிரதிபலிக்கின்றன.
உலகத்தரமான சினிமாவாக கருதப்படுவதற்கு குறிப்பிட்ட ஒரு திரைப்படம் தன் சொந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற வரையறையை பொதுவாக எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
சினிமா விமர்சகர்கள் தமிழ் படங்களை அவ்வளவாக சிலாகிப்பதில்லை. அவர்களின் விமர்சனங்களில் பெரும்பாலும் இத்தாலிய பிரெஞ்சு ஜெர்மானிய சீன அமெரிக்க படங்களே இடம்பெறுகின்றன. அந்த படத்தை எடுத்த இயக்குனரே சிந்திக்காத கோணத்தில் எல்லாம் ஆராய்ந்து ,சைக்கோ அனலிசிஸ் செய்துவிடுகிறார்கள். இவர்கள்(உலக சினிமா விமர்சகர்கள்) தமிழ் சினிமா நோக்கி வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, வேறு ஏதோவொரு அயல்நாட்டு படத்தின் கதையை தமிழ் இயக்குனர்கள் சுட்டுவிடுகிறார்கள் அல்லது தழுவி எடுத்துவிடுகிறார்கள் என்பதே. என்னுடைய சந்தேகம் என்னவெனில், அந்த இத்தாலிய ஜெர்மானிய பிரெஞ்சு சீன அமெரிக்க இயக்குனர்களுக்கு கதைக்கரு எங்கிருந்து கிடைக்கிறது? அல்லது சுத்தமான கற்பனையில் தோன்றியதா?
தமிழ் திரைப்படங்களை உயர்த்தி பேசாவிட்டாலும், தென்னிந்திய மொழிகளில் ஒன்றான மலையாள தேசத்தில் நீண்ட காலமாக, உலகத்தரம் வாய்ந்த கதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிமையாக, கலைநயத்துடன் - நுட்பமான மனவுணர்வுகளை சித்தரிக்கும் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவையெல்லாம் விமர்சகர்கள் கண்ணில் படவில்லையா? இல்லை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்களா? உதாரணத்திற்கு, செம்மீன் ( ஷீலா, 1950 ), தூவான தும்பிகள் (மோகன்லால், சுமலதா, பார்வதி), தன்மாத்ரா (மோகன்லால், மீரா வாசுதேவன்), ஒரே கடல் (மம்மூட்டி, மீரா ஜாஸ்மின்) போன்றவை. இன்னும் எத்தனையோ படங்கள் உள்ளன.
தமிழ் சினிமாவில், நான் பார்த்ததிலிருந்து, உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் என நான் கருதும் பட்டியல் இது:
அந்த நாள் (சிவாஜி கணேசன், 1954)
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
வீடு (அர்ச்சனா)
அழியாத கோலங்கள்
எங்கேயோ கேட்ட குரல்
புது கவிதை
மகாநதி
தேவர்மகன்
ஹேய் ராம்
அன்பே சிவம்
நாயகன்
இருவர்
ஆய்த எழுத்து
உதிரிப்பூக்கள்
அழகி
தென்றல்
தவமாய் தவமிருந்து
சொல்ல மறந்த கதை
ராமன் தேடிய சீதை
கல்லூரி
வழக்கு எண் 18/9
சேது
நான் கடவுள்
எங்கேயும் எப்போதும்
மைனா
தசாவதாரம்
விருமாண்டி
இந்த கட்டுரையை நான் மனதில் எழுதி வைத்தபோது, நிறைய தமிழ் திரைப்படங்களை பட்டியலில் வைத்திருந்தேன். தாமதமாகிக்கொண்டே வந்ததால் பல படங்கள் மறந்துபோய் விட்டன. இன்னும் சில நாட்களானால் கட்டுரையே மறந்துவிடும் அபாயம் இருப்பதால் ஞாபகத்திற்கு வந்தவரை எழுதிவிட்டேன்.
Comments
Post a Comment