கூடங்குளம் அணு உலை...








கூடங்குளம் அணு உலை பிரச்சினை தற்போது கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். கூ.அ.உலை துவங்கினால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்றால் அது அண்டப்புளுகு. அதில் நிறையவே டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கிறன. மின்சாரத்தை உற்பத்தி செய்து தேவையான இடங்களுக்கு விநியோகம் செய்வதிலுள்ள முக்கிய பிரச்சினை Energy Loss  என்பதாகும், கரண்ட் கம்பிகளில் மின்சாரம் பாயும்போது ஒரு குறிப்பிட்ட அளவு விரயமாகி விடுகிறது.


கூ.அணு உலை எதிர்ப்பு ,ஆதரவு என இரு பிரிவாக மோதிக்கொள்கிறார்கள். அணு உலைக்கு எதை அடிப்படையாக வைத்து ஆதரவு தருகிறார்கள் என புரியவில்லை.  சொந்த காசில் யாராவது மொத்த குடும்பத்திற்கே சூனியம் வைத்துக் கொள்வார்களா?  ஸ்கூல் பிள்ளைகள் மாதிரி பேசக்கூடாது.   அணு உலையில் மின் உற்பத்தி துவங்கினால் பின்வரும் இரண்டில் ஒன்று நிச்சயமாக நடந்தேறும். ஒன்று,  ஏதேனும் விபரீதம் நேர்ந்தால்,  தமிழக மக்கள் அனைவரும் கூண்டோடு வைகுண்ட பதவியை அடைவது.  அல்லது, அணுக்கதிர் கசிவினால் ஏதோவொரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக சாவடி வாங்குவது.


நான் அணுப் பொறியியலோ, அணு இயற்பியலோ படிக்கவில்லை. ஆனால் இயற்பியல் படித்த என்னால்  எது நிஜம், எது சரடு என்று பிரித்தறிய முடியும்.  அணுக்கரு உலை கதிர்வீச்சு எவ்வாறு உடல்நலனை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வது சுலபமான காரியம்தான்.


ஒரு அணு என்பது கண்களுக்கு புலப்படாத, மைக்ராஸ்கோப்பில் மட்டும் அகப்படும் ஒரு கோள (உருண்டை) வடிவ அமைப்பாகும்.  ஒரு அணுவில் மூன்று வகையான துகள்கள் உள்ளன. அந்த துகள்களும் கோள வடிவமானவைதான். அணுவின் மையப்பகுதி  உட்கரு எனப்படும்.  உட்கருவில் நியுட்ரான் எனப்படும் துகள்களும், புரோட்டான் எனப்படும் துகள்களும் இடம்பெறுகின்றன.  உட்கருவை சுற்றி பல்வேறு வட்டப்பாதைகளில் எலெக்ட்ரான் எனப்படும் துகள்கள் பயங்கரமான வேகத்தில் சுழல்கிறன.


இவ்விடத்தில் ஒரு முக்கியமான விஷயம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது.  நாம் பார்க்கும் நட்சத்திர மண்டலத்தில் (பிரபஞ்சத்தில்)  நான்கே வகையான விசைகள்தான் செயல்படுகின்றன. ஒன்று, இரண்டு  அணுக்களிடையே /  பொருட்களிடையே  நிலவும் ஈர்ப்பு விசை.  இரண்டு , ஒரு அணுவில் எலெக்ட்ரான்-களை பிடித்து வைத்திருக்கும் மெலிதான விசை. மூன்று, அணுவின் உட்கருவில்  நியுட்ரான்-களையும், புரோட்டான்-களையும்  இறுக்கி பிணைத்திருக்கும் ஒரு வலுவான விசை.  நான்கு, மின்காந்த விசை.  இந்த நாலு வகையான விசைகளையும்  ஒன்றிணைத்து நோக்கிவிட   (Finding a single force which is known as Unified Force)  அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக முயன்று வருகிறார்கள்.


வெளிப்புறத்திலிருந்து ஒரு வலுவான விசையை கொண்டு தாக்கினால், அணுவில் சுழலும் எலெக்ட்ரான்கள் கழன்று ஓடிவிடும்.  ஆனால் உட்கருவில் இறுக்கி பிணைக்கப்பட்டுள்ள நியுட்ரான் மற்றும் புரோட்டான் கள்  அப்படி அல்ல.  அணுக்கரு உலையில் நடப்பது என்னவென்றால்,  இன்னொரு மிக ஆற்றலுள்ள விசையால், உட்கருவிலுள்ள  நியுட்ரான் புரோட்டான் துகள்கள்  சிதறடிக்கபடுகின்றன.  அப்போது மாபெரும் ஆற்றல் அணுவிலிருந்து வெளிப்படுகிறது.  இந்த ஆற்றலே மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது. உண்மையில் நடப்பது என்னவென்றால், ஒரு அணுவின் கட்டமைப்பே  சிதறடிக்கபடுகிறது.  ஒரு அணுவின் மையப்பகுதியான உட்கரு சிதையும்போது, மிக நுட்பமான அலைகள் ( கதிர்வீச்சு) வெளிப்படுகிறது.


அணுவிலிருந்து வெளிப்படும் இந்த அலைகள் (கதிர்வீச்சு) மிகமிகமிக நுண்ணியதாகவும், மிகமிகமிக அதிக அலைவேகமும் கொண்டதாகும்.  எங்கும், எவ்வளவு தடிமனான பொருளையும் எளிதில் ஊடுருவி செல்ல கூடியவை இந்த அலைகள்.  இவை மனித மன கணக்குக்கு அப்பாற்பட்டவையாகும்.  எவ்வளவு திறமையான பாதுகாப்பு வசதிகளும் அணுக்கதிர் வீச்சை தடுத்து நிறுத்தக்கூடும் என்று சொல்வதற்கில்லை, அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.


நுண்ணிய, வேகமான - அணுக்கரு சிதைவின்போது  - வெளிப்படும் இந்த அலைகள் மனித சதைகளையும், எலும்புகளையும், ரத்தத்தையும் சுலபமாக ஊடுருவி செல்லும். அவ்வாறு செல்லும்போது, இன்னதென கணிக்க முடியாத, ரசாயன மாற்றங்களை உடலில் அவை ஏற்படுத்தி விடும்.  அதன் விளைவாக, ரத்த புற்றுநோய், எலும்பு புற்றுநோய், உடலின் ரசாயன திணிவு மையங்களான நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் ( தைராய்டு போன்றவை), மூளை பாதிப்பு  போன்ற பல்வேறு நோய்கள் உருவாக நிச்சயம் வாய்ப்புண்டு.


மனித உடலின் மிகவும் மென்மையான செல்களான, விந்து செல்களையும்  அணுக்கதிர் வீச்சு பாதிப்பிற்குள்ளாக்கும். விந்து செல்கள் பாதிக்கப்படுவதால்  குழந்தை பேறின்மை கூட  ஏற்படலாம்  என நாமே யூகித்துக்கொள்ளலாம்.  ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் விந்து மற்றும் அண்ட செல்கள் மூலமாகவே உருவாவதால் , தலைமுறை தலைமுறையாக  மேற்கூறிய நோய்களோடு  உடல் ஊனம் , மூளை வளர்ச்சி குறைவு, ஆட்டிசம்  போன்ற பல்வேறு வியாதிகள் உடலில் தொற்றிக்கொண்டு  மனித குலத்தை தொடர்ந்து நாசமாக்கும்.


அழகாக, பேரறிவோடு அடுக்கப்பட்டிருக்கும் அணுவின் கட்டமைப்பை சிதைப்பதென்பது  ஆண்டவனோடு விளையாடுவது போன்றதாகும்.  தொடர்ந்து  தன்னை சீண்டிக்கொண்டே இருப்பவர்களை இயற்கை அன்னை இரக்கமின்றி ஒறுத்து விடுவாள். ' அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது '  என்ற  தாயுமானவர்  வாக்கை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது.

Comments

  1. well explained a complicated subject in simple words. Thanks for the article Lingeswaran!

    ReplyDelete

Post a Comment