காதல் என்பதற்கு பல வரையறைகள் வைத்திருக்கிறார்கள். ஹார்மோன்களின் கலவரம், அன்பின் வெளிப்பாடு, ஆதியுணர்வு என் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்குகிறார்கள். சிலர் காதல் என்றே ஒன்று இல்லை என அரிவாளைப் போடுகிறார்கள். ஒரு மெகா சைஸ் யானையை ஒருபக்கமாக தொட்டு விளங்கிக்கொள்வது மாதிரி ஒவ்வொருவர் கூறுவதிலும் உண்மையின் கீற்று இருக்கவே செய்கிறது. அவற்றுள் சிக்மன்ட் பிராய்ட் சொன்னதே உண்மைக்கு அண்மையில் வருகிறது. ' காதல் என்பது சுயநலத்தின் வெளிப்பாடு, சுயநலமே காதலில் முதன்மையானது...' என பிராய்ட் சொன்னதை சற்று Extrapolation செய்தால் காதலின் வரையறை முழுமை பெற்றுவிடும். ஒருவரின் சுயநலம் பூர்த்தியாவதில் இன்னொருவரின் சுயநலம் பூர்த்தியாவது அடங்கியிருப்பதும், அந்த உறவில் இருவருக்கிடையேயான நம்பகத்தன்மையும், சங்கடங்களை புரிந்துகொண்டு சகித்துக்கொள்வதும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக காதல் எனும் இயற்கை வகுத்த அற்புத அமைப்பை யதார்த்தமாக புரிந்துகொள்வதும் - காதலுக்கான வரையறையை முழுமையும், புனிதமும் பெறச்செய்கிறது.
இந்த இடத்தில்தான் இன்றைய, மெல்லாமலேயே உணவை அவசரமாக விழுங்கும், இளைஞர்கள்/இளைஞிகள் வழுக்கிவிடுகிறார்கள் (நியாயம்: உணவு ருசிக்கு அல்ல, பசிக்கு). படிப்பினால் பெற்ற விழிப்புணர்வும் முக்கியமாக பொருளாதார சுதந்திரமும் Exposure -ம், காலங்காலமாக அடங்கிக்கிடந்த பெண்களை, அசட்டு துணிச்சல் பெறச்செய்து, சப்பை காரணங்களுக்கெல்லாம், வக்கீல் நோட்டிஸ் வரை வந்துவிடுகிறார்கள். உடலில் ரத்தம் விறுவிறுவென ஓடும்போது என்ன கவுன்சிலிங் கொடுத்தாலும் கோர்ட்டுக்கு வெளியில் அடம்பிடிப்பார்கள். நாற்பது வயதுக்கு பிறகு சாய்ந்துகொள்ள தோள் தேவைப்படுகையில் இருப்பது வெறித்துப் பார்க்க விட்டமும், விலையுர்ந்த சோபாவும்தான். கடைசியில் ஒரு குடிகாரன் கிடைப்பான், Hepatitis C இலவச இணைப்போடு. ஆண்களுக்கும் இது பொருந்தும்.
காதலில் சொதப்புவது எப்படி என்று ஒரு படமே எடுத்துவிட்டார்கள். படத்தில் ஒரு சூப்பர் சீன் (வளையோசை கலகல) வருகிறது. இன்று எவர் காதலையாவது சொதப்ப நினைத்தால் அது மிக சுலபமான காரியம். ஒன்றும் செய்ய தேவையில்லை, அவர்களை அப்படியே விட்டுவிட்டால் போதும். தாங்களாகவே உழட்டிக்கொண்டு காதல் பூட்ட கேஸாகிவிடும்.
காதல் என்பது ஒரு இயற்கை உபாதை. அதற்கு பலமட்டங்களில் சமூக-பொருளாதார சம்மதங்கள் தேவைப்படுகிறது. சங்க இலக்கியங்களில் ' களவு ஒழுக்கம்' என்றொரு வார்த்தை தென்படுகிறது. இந்த வார்த்தை இன்று நாம் பேசும் காதலையே குறிக்கிறது என யூகிக்கிறேன். காதல் என்பதே ஒரு திருட்டுத்தனம்தான். அதில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மோப்பம் பிடிக்கலாம், இளநீர் குடிக்கலாம்(உதடு), உப்பு மூட்டை போகலாம் ஆனால் கடைசியில் பெற்றோர் ஒப்பந்தத்துடன் தாலி கட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் களவு ஒழுக்கம் என்கிறார்கள். இல்லையெனில் குளிரும் காயவேண்டும், நெருப்பும் சுடக்கூடாது என்ற கதையாகிவிடும்.
போன ஜென்மத்தில் (1999) நானும் ஒரு பெண்ணும் காதலித்தபோது எங்கள் காதல் சுர்க்கி கலவையால் கட்டப்பட்ட அணை மாதிரி படுகெட்டியாக இருந்தது. விரிசல் விழுகவே ஏழு வருடங்கள் ஆனது. கல்லூரியில் நான் படிக்கையில் நானும் என்னுடைய ஜூனியர் ஒருத்தியும் நண்பர்களாக இருந்தோம். மற்ற பெண்களை போல் அண்ணா, தம்பி (பாதுகாப்பாம்) என்று ஜல்லியடிக்காமல் லிங்கேஸ் இங்க வாங்க போங்க என்று மென்மையாக கூப்பிடுவாள். சரியான சொதப்பல் பார்ட்டி. நான் அவளைவிட சொதப்புவேன். தமிழ் தேசிய தீவிரவாதம் என்றெல்லாம் சீரியசாக அவளிடம் பேசுவேன். கொஞ்சங்கூட டென்ஷனாகாமல் காமெடியாக எடுத்துக்கொள்வாள். இதில் விசேஷம் என்னவென்றால், இருவரும் ஒரே நேரத்தில் சொதப்பலாக எதையும் செய்ய மாட்டோம், பேச மாட்டோம் என்பதுதான். கடைசியாக அவள் ஒன்று என்னிடம் எதிர்பார்த்தாள். பலவருடங்கள் கழித்து அந்த விஷயம் எனக்கு புரியவந்த பொழுது அவளுக்கு திருமணமாகி இருந்தது.....!
Liked this line "ஒரு மெகா சைஸ் யானையை ஒருபக்கமாக தொட்டு விளங்கிக்கொள்வது மாதிரி ஒவ்வொருவர் கூறுவதிலும் உண்மையின் கீற்று இருக்கவே செய்கிறது. "
ReplyDeleteஇக்கால காதலை விவரிக்க முடிவதில் சிரமம் ஏற்படுகிறது..
ReplyDeleteஇக்கால இளைஞர் காதல் பொருபற்றதாகவும், உண்மையில்லாமலும் இருப்பது போல் வேகமாய் மாறி வருகிறது.
Good article lingeswaran. ungal article-lum unmaiyin keetru irukkavae seikirathu..
ReplyDelete