ஸ்வாதியும், போராடும் புலிகளும்...




இரண்டு நாட்களுக்கு முன்பு போராளி பார்த்தேன். சினிமா பொம்மை கதாநாயகி போலல்லாத சுவாதியின் இயல்பான அழகு என்னை ரொம்பவே கவர்ந்திருந்தது.
சுவாதிக்காகவே படத்தை பார்த்துவிட வேண்டுமென தீர்மானித்திருந்தேன். சிங்கப்பல் தெரிய சிரிக்கும் சுவாதி கொள்ளை அழகு. ஒரு காட்சியில் சசிகுமார் சுவாதியிடம் நீ இனிமேல் நினைத்தாலும் என்னைவிட்டு போக முடியாது என்கிறார். அதற்கு சுவாதி, உங்கள விட்டு போகமாட்டேன் என்பார், சசிகுமாருக்கு சட்டென்று கோபம் வந்து, எனது...போகமாட்டியா... என சற்று கோபத்துடன் அன்பை வெளிப்படுத்துவார். அந்த காட்சியில் சுவாதி பயமும், இன்ப அதிர்ச்சியும் கலந்து கலங்கிய கண்களுடன் ஒரு எக்ஸ்பிரஷனை காட்டுகிறாரே பார்க்கலாம்....அசத்தல் எக்ஸ்பிரஷன். சிலவினாடிகளே வரும் அபூர்வ காட்சி. தவறாமல் பாருங்கள்.


ஆனந்த விகடனில் படத்தை சரியாக விமர்சனம் செய்யவில்லை. எந்த ஒரு படைப்பையும் மேலோட்டமாக எடைபோட்டு விடகூடாது. ஒரு படைப்பாளியின் மனதின் ஓட்டத்தை அல்லவா ஒரு படைப்பு பிரதிபலிக்கிறது? சிலோன் பரோட்டாவுடன் ' போராளி' எதிர்பார்ப்பை ஏறக்கட்டி விட்டார்கள் என்றிருக்கிறார்கள் விகடனில். அது உண்மையல்ல. சமுத்திரக்கனி தனது தமிழ் உணர்வை படம் முழுக்கவே பின்புலமாக சித்தரித்திருக்கிறார். குமரன், பாரதி, தமிழ்செல்வி என்ற பெயர்களை உற்று நோக்குங்கள். கிராம அத்தியாயத்தில் ஒரு வீர தமிழ்ப்பெண்ணை காட்டியிருக்கிறாரே, அவர் யார்? குறிப்பாக, சசிகுமாருக்கு கிராமத்தில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த கவனத்திற்கு உரியவை. யார வேணாலும் நம்பலாம், இந்த சொந்தக்காரய்ங்க இருக்க்காங்களே.....என்று சசிகுமார் பல்லை கடித்துக்கொண்டு கூறும் வசனம், உடனிருந்தே செய்யப்படும் துரோகத்தைதானே குறிக்கிறது. ஒரு மனிதன் அஹிம்சை வழியிலும், அற வழியிலும் வாழவேண்டும் என்பது சரிதான். ஆனால் நம் உயிருக்கே ஆபத்து என்றால், அவர்களை திருப்பி தாக்கி அழிப்பது என்பது இயற்கை நியதியில் சரியான ஒன்றுதான். உயிர் போய்விட்டால், மனிதனின் அடிப்படை உணர்வான உளதாம் தன்மைக்கே (Feeling of Existence) அர்த்தமில்லையே. படத்தின் கடைசி காட்சிகளில் இதையொட்டிய கருத்து வெளிப்படுகிறது.


போராளி படம் முழுவதுமே இலங்கை நிகழ்வுகளை முடிந்தவரையில் இயக்குனர் பின்புலமாக சித்தரித்திருக்கிறார். சமூக-அரசியல் கட்டுப்பாடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டே வாழும் ஒரு படைப்பாளி ஒரு இவ்வளவுதான் செய்ய முடியும். வேறு என்ன செய்வது சொல்லுங்கள்? பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு பேட்டியில், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரு சினிமாவாக எடுக்க விரும்பியதாகவும்,. அதில் திரு.பிரபாகரன் பாத்திரத்தில் நடிக்க விரும்பியதாகவும் கூறினார். கூறிவிட்டு , இன்றைய சூழலில் அப்படி ஒரு படம் எடுத்தால் அதை வெளியிடவே நாக்கு தள்ளி விடும் என்றார். தமிழ்நாட்டில் அதுதான் உண்மை.


ஆனந்த விகடனிலும் மற்றும் சில பத்திரிக்கைளும் இலங்கையில் நடைபெறும் கொடூர நிகழ்வுகளை குறித்து கட்டுரைகள் வெளிவரும். முதலில் ஒருசில பத்திகள் படிக்க துவங்குவேன், பிறகு அப்படியே நிறுத்திவிட்டு வேறு செய்திகளுக்கு தாவி விடுவேன். என் இதயம் ஏற்கனவே நிறைய தாங்கி தாங்கி பலகீனமாகிவிட்டது தான் காரணம்.


என் அப்பாவிற்கு இலங்கைப் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் சுவாதியும், ஜெய்யும் வரும் ' கண்கள் இரண்டால் ' என்ற பாடல் டிவியில் ஓடும் போதெல்லாம் அப்படியே கண்சிமிட்டாமல் பார்ப்பார். கோபத்தில் கத்திக் கொண்டிருக்கும்போது கூட அந்த பாடல் டிவியில் ஒலித்தால், அப்படியே அமைதியாகி விடுவார். எனக்கு இதன் காரணம் நீண்ட நாட்களாக புரியவே இல்லை. பின்பு ஒருநாள், பழைய ரெக்கார்டுகளை துருவிக் கொண்டிருக்கும்போது என் அம்மாவின் சிறுவயது போட்டோ கிடைத்தது. அப்போது விளங்கிவிட்டது , ஏன் என் அப்பாவிற்கு கண்கள் இரண்டால் பாடல் பிடித்ததென்று.

Comments

  1. Super Linges, Nice Post.........

    Good .........

    ReplyDelete
  2. Cool...I just enjoyed the movie couple of days back...

    ReplyDelete

Post a Comment