

நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் தான்; ஆனால் மனித நம்பிக்கை உள்ளவன்; மனிதர்களை நேசிக்கிறவன். மண்ணில் ஒவ்வொரு துணுக்கும் எல்லா மனிதருக்கும் சொந்தமானது என்பதை நம்புகிறவன். சூரியனைப் போல, மழையைப் போல, நிலாவைப் போல , காற்றைப் போல எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்ற வேட்கையோடு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறவன் நான்.
இந்த ஆனந்தத்தில் வேதாத்திரிய தத்துவத்தின் விஸ்வரூபத்தை வேதாத்திரி மகரிஷியின் உட்குரலாக நான் கேட்கிறேன். அதனால் அவருடைய கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு நெருக்கம் இருப்பதாக நிச்சயம் நான் நம்புகிறேன்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் மழை பொதுவுடமையாக இருப்பது போல, காற்று பொதுவுடமையாக இருப்பது போல - தண்ணீரையும் பொதுவுடைமையாக்க வேண்டும் என்கிறார். இந்தக் கருத்தை ஆழமாக , அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி. எனக்கு பிடித்தமான கருத்தும் இதுதான்.
- கவிப்பேரரசு வைரமுத்து.
______________________________________________________________
வேதாத்திரி மகரிஷியின் பெருமைகளில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு கோணத்தில் வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களில் பெரியார் சாயல் தெரியும். இன்னொரு கோணத்தில் மகாத்மா காந்தியின் சாயல் தெரியும். விவேகானந்தர் சாயல் தெரியும். இப்படி ஒரு மனிதன் ஒரே நேரத்தில் பல்வேறு வடிவங்களை சமூகத்தில் காட்டுவது என்பது எல்லோருக்கும் இயலாது.
மகரிஷி அவர்கள் உள்முகமாக , தான் அனுபவித்து தெளிந்து, அதன் பிறகு தத்துவங்களை நமக்கு வழங்கியிருக்கிறார். அந்த அனுபவம்தான் மிக அற்புதமானது.
இறைவழிபாடு, உயிர்வழிபாடு இரண்டும் இணைந்தால்தான் அது ஆன்மீக வழிபாடு என்று ஒரே வரியில் சொல்கிறார்.
மகரிஷியின் வாழ்கையை முற்றாக பின்பற்றியவர்கள் இந்த மண்ணில் நல்லவண்ணம் வாழமுடியும். உடல்நலனையும், மனநலனையும் சேர்த்து சிந்தித்து , இரண்டின்பால் மனித சமுதாயத்தை கொண்டுவந்து சேர்ப்பதற்காக ஒரு மாபெரும் தவத்தை நடத்தியுள்ளார்கள் வேதாத்திரி சுவாமிகள்.
- தமிழருவி மணியன்.
_______________________________________________________________
நன்றி: அருள்நிதி. மன்னார்குடி பானுகுமார் அவர்கள்.
( வேதாத்திரி மகரிஷி பற்றி நூறு அறிஞர்கள் என்ற நூலிலிருந்து. வெளியீடு: விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் )
____________________________________________________________
Comments
Post a Comment