

இப்போது பாடல்களை மொபைல்போனில், கம்ப்யுட்டரில், சிடி டிவிக்களில் கேட்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் ஆடியோ கேசட்டுகள்தான் இருந்தன. நமக்கு பிடித்த பாடல்களை ஒரு பேப்பரில் எழுதி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டால் நான்கைந்து நாட்களில் கேசட்டில் பதிந்து தந்து விடுவார்கள். ஒரு கேசட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து பாடல்கள் வரை பதியலாம்.
கமல், ரஜினி இவர்களின் பாடல்கள் ஒரு பன்னிரண்டு பாடல்களை கேசட்டில் மேற்சொன்னவாறு பதிந்து, நான் காதலித்த பெண்ணிடம் கொடுத்து.....கேட்டு பார்...சூப்பராக இருக்கும் எனக்கூறி கொடுத்துவிட்டேன். அவளும் மிகுந்த ஆர்வத்தோடு, ஓடோடிச்சென்று, டேப் ரெக்கார்டரில் கேசட்டை போட்டு, Volume- ஐ அதிகமாக வைத்துகொண்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். பாடல் ஓடத்துவங்கியதுதான் தாமதம். பாவம்...பதறி விட்டாள். சடாரென டேப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்து என்னை முறைத்து பார்த்தாள். நல்லவேளை வீட்ல அம்மா இல்ல.....என்னைய இப்படி மாட்டி விட்டுடீங்களே என்று நேரில் பேசிக்கொண்ட போது கூறினாள். அது என்ன பாடல் என்னவென்றால், கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் வரும் ' வனிதாமணி......வனமோகினி....' என்ற பாடல்தான். எஸ்.பி.பியும், ஜானகியும் போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள். ஆனால் பாடல் துவங்கும் முன், கமலின் கமகம குரலில் '........கண்ணே.....தொட்டுக்கவா.....கட்டிக்கவா....கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா.....' என விறுவிறுவென ஓடத்துவங்கும். கமலை தவிர வேறு யாராலும் அந்த வரிகளை அப்படி பாட முடியாது.
புதுக்கவிதை என்ற ஒரு ரஜினி படம் 1983 -ல் வெளிவந்தது. என் அப்பாதான் எனக்கு அந்த படத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். பிளஸ்டூ படித்துக்கொண்டிருந்த போது, அருமையான படம்பா இது.......பாரு நல்லாயிருக்கும் என்று ஒருநாள் கூறினார். நானும் பார்த்தேன். அதன்பிறகு, என் ஆன்மாவை விட்டு அந்தப்படம் அகலவே இல்லை. புதுக்கவிதை ஒரு படமே அல்ல. அது ஒரு காவியம். அந்தப்படத்தில் ஒரு காட்சி வருகிறது, ரஜினி தன்னுடைய டைரியை மறந்துவிட்டு செல்லும்போது, வில்லன்களில் ஒருவர், ' .......பிரதர்.......காவியத்தை மறந்துட்டு போறீங்க.......' என்பார். ரஜினியும்,ஜோதியும் உண்மையிலேயே காதலிக்கிறார்களோ என்றுகூட தோன்றும்.
வெள்ளைப்புறா ஒன்று...
ஏங்குது கையில் வராமலே...
நமது கதை...
புதுக்கவிதை...
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை....
ஒருதடவை இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். ஜானகியின் குரலில் ஒரு ரம்மியமான ஹம்மிங்குடன் பாடல் துவங்கும். வாழ்நாளில் மறக்கவே முடியாது. மெய்மறக்க செய்யும் பாடல் என்பார்களே. அதுதான் இது.
பெரும்பாலும் எல்லோருக்கும் காதல் அனுபவம் இருக்கும். காதலிப்பார்கள்; அல்லது தான் மட்டும் காதலிப்பார்கள்; அல்லது காதலிக்கப்படுவார்கள். காதல் நோய் ( நோய்தானே...! ) ஆரம்பித்த புதிதில் பசங்களும், பொண்ணுகளும் ரொம்பவே உணர்ச்சிவசப்படுவார்கள். அன்பை வார்த்தைகளில் காட்டுகிறேன் என, உளறிக்கொட்டுவார்கள். காமெடியாகி, அசடு வழிவார்கள். இதற்கு பதிலாக, இளையராஜாவின் இசையிலமைந்த ஒரு பாடலின் நாலு வரிகளை பாடிக் காண்பிக்கலாம். உதாரணமாக,
உன்னோடுதான் என் ஜீவன்...
ஒன்றாக்கினான் நம் தேவன்...
நீதானம்மா என் தாரம்...
மாறாதம்மா எந்நாளும்....
( படம்: தர்மத்தின் தலைவன் , பாடல்: தென்மதுரை வைகைநதி )
உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் மானே...
உயிர் பூவெடுத்து
ஒரு மாலையிடு
விழிநீர் தெளித்து....
ஒரு கோலமிடு.....
உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் மானே...
______________________________________
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது...
அடடா.....முந்தானை சிறையானது..
இதுவே என் வாழ்வில் முறையானது..
பாறை ஒன்றின் மேலே
சிறு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே..
உன்னால் ஒரு சொந்தம் வந்தது.....!
ராமன் அப்துல்லா என்ற ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் ஒரு அற்புதமான பாடல் வருகிறது. பாலு மகேந்திரா கேட்டு வாங்கியிருப்பார் என நினைக்கிறேன். சங்கீதத்தில் ஸ்ருதி, லயம் என்று கேள்விபட்டுயிருப்பீர்கள். இவைதவிர சங்கதி என பாடலில் ஒன்று உண்டு. எஸ்.பி.பியும், சித்ராவும் சங்கதி பிசிறில்லாமல் பாடியிருப்பார்கள். ஒருவரின் உள்ளத்தில் அடைபட்டு கிடைக்கும் உணர்வுகளுக்கு இசைவடிவம் கொடுத்தால் அது என்ன வடிவம் பெறுமோ அதுதான் இளையராஜாவின் பாடலாகும். இளையராஜா இசையை வார்த்தெடுக்க, கவிஞர் இசையில் தனது வரிகளை அற்புதமாக கோர்த்து எடுக்க, ராமன் அப்துல்லாவில் வரும் அந்த பாடல் வரிகள் இதோ:
முத்தமிழே முத்தமிழே...
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன...
முத்தத் தமிழ் வித்தகியே...
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன..
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன...
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன...
மனம் வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே....
____________________________________
காதல் வழிச்சாலையிலே...
வேகத்தடை ஏதுமில்லை...
நாணக்குடை நீ பிடித்தும்...
வேர்வரைக்கும் சாரல்மழை..
பூவைக் கிள்ளும்
பாவனையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாள்...
மின்னல் சிந்தி சிரித்தாள்
கண்ணில் என்னை குடித்தாள்...
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாள்...!
Comments
Post a Comment