
எஞ்சினீரிங் படித்துக்கொண்டிருந்த போது எப்.டபிள்யு.டைலர் , எல்டன் மாயோ, கில்பேர்த் போன்ற மேனேஜ்மென்ட் அறிஞர்களை அறிந்திருந்தேன். எம்.பி.ஏ. படிக்கும் பீட்டர் டிரக்கர் என்ற பெயரை அடிக்கடி கேள்விபட நேர்ந்தது. யார் இவர் புதிதாக இருக்கிறாரே என ஆராய்ந்தபோது அவரைப்பற்றி ஒரு அறிவுக்களஞ்சியமே கிடைத்தது. நீண்ட நெடிய அவரது வரலாறை மிகவும் சுருக்கி தருகிறேன்.
நவீன நிர்வாக இயலில் டிரக்கரின் பங்களிப்பு அளப்பரியது. டிரக்கர் தனது கருத்துகளை பெரும்பாலும் தத்துவங்கள் போலவே கூறினார். இருந்தாலும், சர்வதேச கம்பெனிகளில் பணிபுரிந்த அனுபவம், பேராசிரியராக பணிபுரிந்த அனுபவம், சமூதாயத்தின்பால் அவர் கொண்ட அக்கறை, கூர்மையான கணிப்புகள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து பிழிந்து, சாராம்சமாக தனது கருத்துகளை முன்வைத்தார். மேனேஜ்மென்ட் துறையில் டிரக்கரின் கருத்துகள் வேத வாக்காக எடுத்துகொள்ளப்படுகின்றன. ஒரு Authority ஆகவே டிரக்கர் கருதப்படுகிறார். இன்று அவர் உயிருடன் இல்லை. எனினும் உலகின் பல்வேறு மூலைகளில், பி ஸ்கூல்களில் டிரக்கரின் பெயரில் கருத்தரங்களும் , மாநாடுகளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
இன்று பரவலாக பேசப்படும் Outsourcing என்கிற கான்செப்டை அறிமுகப்படுத்தியவர் பீட்டர் டிரக்கர்தான். தனியார்மயமாக்கம் (Privatization), இயந்திரமயமாக்கம் (Mechanization), நிறுவனங்களில் அதிகாரத்தை பரவலாக்குதல் (Decentralization) போன்ற நிகழ்வுகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்தார். Blue collar எனப்படும் உடலுழைப்பு தொழிலாளிகளின் தேவை எதிர்காலத்தில் குறைந்துகொண்டே வரும் என்பதையும் முன்னறிவித்தார். தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் உடல் உழைப்பாளிகளின் தேவை எதிர்காலத்தில் குறையும் என யூகித்தார்.
பீட்டர் டிரக்கர் மேனேஜ்மென்ட் எனபதை ஒரு வரையறைக்குள் அடக்க விரும்பவில்லை. பலதுறை சார்ந்த அறிவை பயன்படுத்தி, சுதந்திரமாக இயங்கும், ஒரு கலையைப் போன்றதே (Liberal art) மேனேஜ்மென்ட் என்றார். எனவே ஒரு மேனேஜெர் அல்லது நிர்வாகி என்பவர் உலகியல் விஷயங்கள் அனைத்திலும் (multi-faceted)ஓரளவாது ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும் என எதிபார்க்கபடுகிறார்.
பீட்டர் டிரக்கர் மேனேஜ்மென்ட் தத்துவ அறிஞர் மட்டுமல்ல; அவர் வரலாறு, உளவியல், மருத்துவம், பொருளாதாரம், மதம் கலாசாரம் என சகலதுறைகளிலும் நுட்பமான அறிவைப் பெற்றிருந்தார். அவற்றிலிருந்தே தனது கருத்துகளையும், பயிற்சிமுறைகளையும் வகுத்தார் (Management concepts and practices).
இன்றைய பிசினஸ் உலகில் , மேனேஜ்மென்ட் என்பது லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொழில்ரீதியான தார்மீக நெறிகள் (Business ethics) என்பதெல்லாம் புத்தகத்தோடு சரி. யார் எக்கேடு கெட்டுபோனால் என்ன நமக்கு வேண்டியது லாபம் என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால் மானிட வாழ்க்கையை நன்கு கற்ற பீட்டர் டிரக்கர் போன்ற மாமேதைகள் ஒருபோதும் அவ்வாறு குறுகிய நோக்குடன் ஆலோசனைகளை வழங்கியதே இல்லை. ஒரு கம்பெனியின் முதன்மையான நோக்கம் லாபம் மட்டும் ஈட்டுவது அல்ல என்றும், கம்பெனி தொடர்ந்து பிசினசில் நிலைத்திருப்பதிற்குதான் (sustaining in the market) லாபம் என்பது தேவை என்றும் தெளிவாக எடுத்துக்கூறினார். ஒவ்வொரு நிறுவனமும், தனக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான தொடர்பை உணர்ந்து சமுதாயத்திற்கு தீங்கிழைக்காத வகையில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொருட்களின் உற்பத்தி செயல்முறைகள் ( Manufacturing process), ஊழியர்களை மதிப்புடன் நடத்துதல் (Management of human resources with respect), நவீன பொருளாதரத்தில் உள்ள குறைபாடுகள், சமுக-பொருளாதார வளர்ச்சியில் சேவை நிறுவனகளின் பங்களிப்பு - என ஏராளமான தலைப்புகளில் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக்குவித்து, நிர்வாக இயலில் தவிர்க்க முடியாத மனிதராக டிரக்கர் விளங்கினார். தன் மறைவுக்கு ஒரு வருடம் முன்பு கூட ஒரு புத்தகத்தை எழுதி முடித்தார்.
General motors, General Electric, Coca-cola, Citicorp, IBM போன்ற உலகின் தலைசிறந்த நிறுவனகளின் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளிலும் (Chairman), கௌரவ ஆலோசகராகவும் (Consultant) டிரக்கர் செயல்பட்டார். அமெரிக்கா, ஜப்பான், கனடா நாடுகளின் அரசாங்கங்கள் அவ்வப்போது டிரக்கரின் ஆலோசனையை பெற்றே செயல்பட்டன. American Red Cross முதலிய சர்வதேச சேவை நிறுவனங்களுக்கும் டிரக்கர் ஆலோசகாரக செயல்பட்டார்.
முப்பது வயதிலேயே சர்வதேச சட்டம் மற்றும் பொது சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற பீட்டர் டிரக்கர் , கல்லூரி படிப்பை முடித்த காலத்தில் ஒரு பஞ்சாலையில் பயிற்சியாளராக வேலை செய்தார். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனத்திலும், பிறகு ஒரு பத்திரிகையில் Chief economist ஆகவும் பணிபுரிந்தார். டிரக்கர் நேரிடையாக கல்வித்துறையில் பணிபுரிந்த காலமே அதிகம். அமெரிக்காவில் பெநிங்க்டன் பல்கலைகழகத்தில் , அரசியல் & தத்துவத்துறையில் பேராசியராகவும் - நியுயார்க் பல்கலைகழத்தில் மேனேஜ்மென்ட் பேராசிரியராகவும் - 1971 இருந்து தன் வாழ்நாளின் கடைசிவரை கிளார்மொன்ட் கிராஜுவேட் பல்கலைகழகத்தில் சமூக அறிவியல் & நிர்வாகத்துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். டிராக்கரின் பெயரில் ஒரு பி ஸ்கூல் அமெரிக்காவில் துவங்கப்பட்டு அவரது வாழ்நாளிலேயே பெருமைபடுத்தப்பட்டார்.
பீட்டர் டிரக்கர் ஆங்கிலத்தில் ஏறக்குறைய நாற்பது நூல்கள் எழுதியுள்ளார். Practices of management, Innovation and Entrepreneurship, Technology & Management & Society, The concept of corporation ஆகியவை ஒருசில நூல்களாகும். நிர்வாக இயல் மாணவர்கள் கட்டாயம் டிரக்கரின் புத்தகங்களை படிக்க வேண்டும். மேனேஜ்மென்ட் சரித்திர புத்தகத்தின் பலபக்கங்களை தனது 95 வயது வரை ஆக்கிரமித்துக்கொண்ட பீட்டர் டிரக்கர் என்ற பேரறிஞர் தன்னுடைய மகத்தான சாதனைகளை உலக நலனுக்காக உலக மக்களிடமே விட்டுவிட்டு 2005 -ல் பூத உடலை நீத்தார்.
Comments
Post a Comment