
என்னுடைய வலைப்பூவில் எழுதத்துவங்கிய முதல் சிலமாதங்களில் உளவியல் பேரறிஞர் சிக்மன்ட் பிராய்ட் பற்றி ஒரு அறிமுகக்கட்டுரை ஒன்றை எழுதினேன். முதல் வாசிப்பில் புரியாவிட்டாலும் சிலமுறை படித்தால் நன்றாக புரியக்கூடிய கட்டுரைதானது. பிராய்டின் அரிய உளவியல் கருத்துக்களை உலகம் அறியும்வண்ணம் தமிழில் எழுதவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் அவா. அந்த வரிசையில் முதல் கட்டுரை - லிபிடோ.
குழந்தைபருவத்திலிருந்து ஒரு மனிதன் மரிக்கும்வரை அவனது/அவளது உணர்வுநிலை (மனோநிலை) தொடர்ந்து மாற்றம் பெற்றுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு மனிதனும் பருவவயதடையும்போது உணர்வுநிலையில் ஒரு முக்கியமான குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழுகிறது. அதாவது உணர்வுகள் எழுச்சியும், கிளர்ச்சியும் பெறுகின்றன. எழுச்சியும் கிளர்ச்சியும் ( Aggravation, Drive, Urge or Energy ) இந்த உணர்வுநிலையை பிராய்ட் லிபிடோ என்று பெயரிட்டு அழைக்கிறார். லிபிடோ என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். இதற்கு இணையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் பல்வேறுவிதமான ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன.
பிராய்டின் உளவியல் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. ஆழ்ந்த ஆராய்ச்சி, சிந்தனை, அனுபவம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து திட்டவட்டமாகவே தன் கருத்துக்களை விளக்கினார். பிராய்டின் கோட்பாடுகளிலேயே அவர் கூறிய ' லிபிடோ' என்ற (Libido) கோட்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதனின் ஆளுமையில் (Personality) பெரும்பகுதியை கட்டுப்படுத்துவதும், ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதும் இந்த லிபிடோ என்ற உணர்வர்வேயாகும்.
மன எழுச்சி பெற்ற ஒரு ஆண் (சிறுவன்/இளைஞன்) ஒரு துணையை நாடுகிறான். பெண் ஒரு ஆண் துணையை நாடுகிறாள். அதாவது ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் அரவணைப்பையும், பெண் ஒரு ஆணின் அரவணைப்பையும் நாடுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் Emotional warmth எனலாம். ஓங்கி எழுச்சி பெறும் உணர்வை சமப்படுத்திக் கொள்வதற்காகவே அவ்வாறு துணையை நாடுகிறார்கள். பிராய்டின் புத்தகங்களை படிப்பவர்கள் பெரும்பாலும் லிபிடோ என்பதை உடலுறவு என்ற பொருளிலேயே புரிந்துகொள்கிறார்கள். மாறாக- பெண்களுடன் உரையாடுதல், அருகருகே ஆணும் பெண்ணும் உக்கார்ந்து பேசுதல், பெண்ணின் ஸ்பரிசம், பெண்களின் தோழமை, காதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பொருளிலேயே பிராய்ட் லிபிடோ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். மனித நாகரீக வளர்ச்சியில், லிபிடோவை- சமூக நெறிக்கும் , அறநெறிக்கும் உட்பட்டு - தணித்துக்கொள்ளும் ஒரு அழகான வடிவம்தான், மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட காதல் என்பதாகும்.
வீறு கொண்டெழும் உணர்வை சமப்படுத்திக் கொள்ள இயல்பாகவே மனிதன் ஒருதுணையை, அரவணைப்பை நாடுகிறான். அது காதலாகவோ, நட்பாகவோ, சகோதரியாகவோ எப்படி வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப அமையலாம். லிபிடோ தணிவது என்பதை ஒரு அளவுகோல்போல வைத்துகொண்டால் அதில் உள்ள பல்வேறு நிலைகள்தான் தாய், சகோதரி , தோழி, காதலி, மனைவி என்பதெல்லாம். எப்படிஎன்றாலும் கணவன்/மனைவி என்ற முறையில் அமையும் வாழ்க்கைத்துணை நட்பே லிபிடோவிற்கு முறையான வடிகாலாகும். சமூகக் கோட்பாடுகள், அறநெறி, எப்போதும் விழித்துக்கொண்டே இருந்து நம்மை கண்காணிக்கும் மனசாட்சி இவற்றிற்கு முரணில்லாத இயற்கை வழியும் அதுவேயாகும்.
வாய்ப்பு வசதியில்லாமல், தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் லிபிடோவை தணித்துக்கொள்ள வழியில்ல்லாமல் சமாளித்து மனதிற்குள்ளாகவே அடக்கி கொள்கிறார் அல்லது மனதில் அமுங்கிவிடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்மனதில் அமுங்கிய உணர்வுகள் சும்மா தூங்கி விடாது. பிதுங்கிக்கொண்டு வேறு வழியில் வெளிப்படும். எப்படி வெளிப்படும்? பெரும்பாலும் பாலியல் வக்கிரங்களாகவே வெளிப்படும். குழந்தைகளை கற்பழித்தல், பிறன்மனை நோக்குதல் போன்றவை இந்த அடிப்படையிலே நடக்கின்றன. சுய இன்பபழக்கம் கூட லிபிடோவை கட்டுப்படுத்திக்கொள்ளும் ஒரு வழிதான்.
ஆனால் எல்லாம்வல்ல இறைவனின் படைப்பும், அமைப்பும் மனிதனுக்கு உதவியாகவே அமைந்திருக்கின்றன. சந்தர்ப்ப சூழ்நிலையும், வாய்ப்பும் இல்லாமல்- பொங்கி உணர்வுகளுக்கு வடிகால் இல்லாமல் ஒருமனிதன் திணறும்போது - அடிமனமாக விளங்கும் இறையாற்றல் மனிதனின் உணர்வு வேகத்தை மடைமாற்றம் செய்கிறது. விளைவாக, மடைமாற்றம் பெற்ற உணர்வுகள் தக்க வடிவம் பெற்று அரும்பெரும் படைப்புகளாக (Creations) உருவாகின்றன. மிகச்சிறந்த இசை, ஓவியம், எழுத்து, இலக்கியம் போன்றவைகள் அடிமனத்தின் மடைமாற்ற விளைவுகளாக இருக்க கூடும் என பிராய்ட் சுட்டிக்காட்டுகிறார். பிராய்ட் இதனை ஆங்கிலத்தில் Sublimation என்கிறார்.
லிபிடோ என்ற உணர்வெழுச்சி ஒருவருக்கு துவங்கிய வயதிலிருந்து எதிர்பாலினரின் துணையோ, அரவணைப்போ ஏதோ ஒரு வகையில் கிடைத்துக்கொண்டே இருந்தால் அவரது மனமானது குழப்பமும் கலக்கமும் இல்லாமல் - சிக்கல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு திடமாகவும், உடல் நலமாகவும் இருக்கும்.வாழ்வில் முன்னேறிக்கொண்டே செல்வார். மாறாக, லிபிடோ தணிய வாய்ப்பில்லை என்றால் ஒருவரது மனமானது ( வாழ்க்கை) தடுமாற்றமும், தடமாற்றமும் பெற்று வாழ்வில் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாவார். அமுக்கப்பட்ட உணர்வு வேகமானது பதட்டம், நரம்புத்தளர்ச்சி, வயிற்று கோளாறு, ஆவேசம் மற்றும் கோபம் போன்ற உடல்-மன உபாதைகளாக உருவெடுப்பது உறுதி.
லிபிடோ என்பதெல்லாம் இல்லவே இல்லை; மிகைபடுத்தி கூறப்படுவது, கட்டுக்கதை எனக்கூறுவாரும் உண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்வை சிறுவயதிலிருந்து பாரபட்சமின்றி கூர்ந்து நோக்கினால் பிராய்ட் அவர்கள் கூறியது எந்த அளவிற்கு உண்மை என விளங்கும்.
Already i told can control with the help of god
ReplyDeleteReally, It's nice.
ReplyDeleteஆரம்பத்தில் நல்லதை யாரும் கேட்பதில்லை, ஒரு அசம்பாவிதம் நடந்தபின்புதான் உணர்வார்கள். அதுவரை அது எழுத்தாகவே இருக்கும்.