

முதல் ஒற்றுமை திருச்சி. திருச்சி எனக்கு எப்போதும் ஆதர்சனமான ஊர். நான்கு வருடங்கள் திருச்சியில் படித்ததுதான் காரணம். சத்திரம் பஸ் நிலையம் அருகிலும், மலைக்கோட்டையை சுற்றியும் அலைவது அலாதியான விஷயங்கள். இப்போதும் திருச்சியை திரைப்படங்களில் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். அந்த பஸ் ஸ்டாப்புகள், டவுன் பஸ்கள், ஏரியாக்கள் இவற்றை பார்க்கும்போது பெயரை பார்க்காமலே திருச்சிதான் இது என்று கூறிவிடுவேன். எங்கேயும் எப்போதுமில் ஜெய்-அஞ்சலி காதல் காட்சிகள் வருகின்றன. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பிருந்த, ஆனால் இப்போது நிஜ வாழ்விலிருந்து மறைந்தே போய்விட்ட காதல் காட்சிகள் அவை. அஞ்சலியை போன்றே உடல்வாகுடனும், நிறத்துடனும் இருந்த ஒரு பெண்ணுடன் (என் காதலிதான்- இப்போதல்ல அப்போது) திருச்சியில் ஏராளமான தடவை சுற்றியிருக்கிறேன். ஒரு காட்சியில் அஞ்சலி ஜெய்யை பார்த்து, ' ஆனால் பால் மட்டும் குடிப்ப.....? ' என்று கலாய்க்கிறார். என் காதலியும் என்னிடம் , ' இதை மட்டும் ஒழுங்கா செய்யுங்க....' என் கடிந்து கொள்வாள். மலைக்கோட்டையில் உட்கார்ந்து ஒரே ஒரு தடவை பேசியதாக ஞாபகம். அவளால் படியேற முடியவில்லை. ஸ்ரீரங்கம், திருவானைகோயில் எல்லாம் பலமுறை போயிருக்கிறோம். கோயிலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவோம். அவள் பேசிக்கொண்டே இருப்பாள்; நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
படத்தில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு விபத்துக் காட்சி வருகிறது. இவ்வளவு விலாவாரியாக, நுணுக்கமாக ஒரு விபத்தை இதுவரை தமிழ்சினிமாவில் காட்டியதே இல்லை. விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போகுபவர்கள் ஒவ்வொருவர் பின்னணியிலும் நடக்கும் நிகழ்வுல்கள்தான் மனதை முதலில் மகிழவும், பிறகு நெகிழவும், இறுதியில் வருத்தத்தில் ஆழ்த்தவும் செய்கின்றன. ஒவ்வொரு கேரக்டரையும் படு சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லையென்றாலும், நானும் ஒருமுறை விபத்தில் சிக்கி மீண்டேன். மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற எங்கள் பேருந்து பயங்கர வேகத்தில் இன்னொரு பேருந்தின் பின்புறம் மோதியது. கண்ணாடிகள் சிதறித் தெறித்தன. எனக்கு மண்டையில் சரியான அடி. எங்கே இருக்கிறேன் என்ற சுயநினைவே சிலநிமிடங்களுக்கு இல்லை. எல்லோரும் பதறியடித்தபடி கிழே இறங்கினார்கள். இரண்டு நிமிடங்களுக்கு பிறகே எனக்கு நிதானம் வந்தது. தெய்வாதினமாக, யாருக்கும் பெரிய அடி இல்லை. சிற்சில அடிகளுடனும், உடைந்த கண்ணாடிகளுடனும் எங்கள் வண்டி கிளம்பியது. அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. பேருந்து கிளம்பும்முன் ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருந்தோமே எங்கே என்று. தேடித் பார்த்தால், டிரைவர் சீட் அருகே உள்ள டிவி பெட்டியில் விகடன் செருகி தொங்கிக் கொண்டிருந்த்தது. நான் உட்கார்ந்திருந்தது கடைசி சீட்டில். பஸ் மோதிய வேகத்தில் ஆனந்த விகடன் பறந்து போய் அங்கே மாட்டியிருந்தது.
ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு அதன் திரைக்கதைக்கே உண்டு. திரைக்கதைதான் ஒரு படத்தின் அச்சாணியாகும். இயக்குனர்கள் இந்த உண்மையை நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். கதை என்பது பலபக்கங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றை வரி கதையே போதுமானது. கதை என்பது வேறு, திரைக்கதை என்பது வேறு. கதை சம்பவங்களை திரையில் கோர்வையாக, நடப்பதுபோல, சுவாரஸ்யமாக காட்டுவதுதான் திரைக்கதையாகும். கதையை திரையில் கொண்டு வருவதுதான் திரைக்கதை. திரைக்கதையை தெளிவாகவும், சரியாகவும் எழுதிவிட்டாலே ஏறக்குறைய வெற்றியை நெருங்கி விடலாம். எனினும், திரைக்கதை இப்படித்தான் எழுத வேண்டும் என சட்டம் எதுவுமில்லை. பலபல திரைக்கதை உத்திகள் உள்ளன. எனக்குதெரிந்தவரை, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் தமிழ் சினிமாவின் சிறந்த திரைகதை ஆசிரியர்கள் ஆவார்.
எங்கேயும் எப்போதும் படம் Non-linear எனப்படும் திரைக்கதை உத்தியாகும். Linear எனப்படுவது சீராக முன்னோக்கிய திசையில் அல்லது பின்னோக்கிய (Flash back) கதை சொல்லும் முறையாகும். Non-linear எனப்படுவது ஒழுங்கற்ற முறையில் ( அதில் ஒரு ஒழுங்கு) கதை சொல்லும் உத்தியாகும். உன்னைப்போல் ஒருவன், ஆய்த எழுத்து ஆகிய படங்கள் Non-linear story telling க்கு உதாரணங்களாகும். Linear திரைக்கதை வெற்றிக்கு ஓரளவு உத்திரவாதமானது. ஆனால், Non-linear முறையில் படமெடுத்தாலே வெற்றி என்று சொல்வதற்கில்லை; படம் பெரும்பாலும் தோல்வியடைவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், சாமானிய பார்வையாளனுக்கு Non-linear முறை ஆயாசம் அளிக்க கூடியது . கூர்ந்து கவனித்தாலே விளங்க கூடியது. படத்தின் கதை பிடிபடுவதற்குள் படத்தை தியேட்டரை விட்டு தூக்கிவிடுவார்கள். Non-linear முறை என்றால் கதை முன்னும் பின்னும் மாறி மாறி வருவது, ஒரு கதையும் மற்றொரு கதையும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடி வருவது போன்றதாகும்.
எங்கேயும் எப்போதும் திரைப்படம் இரண்டு பேருந்துகள் மோதுவதில் துவங்கி - பின் நான்கு மணி நேரத்திற்கு முன் - பிறகு ஆறு மாதங்களுக்கு முன் என கதை சென்று - பிறகு மீண்டும் விபத்திற்கு வந்து - பிறகு மீண்டும் பின்னோக்கி சென்று - இறுதியில் விபத்திலேயே கதை முடிகிறது. படம் துவங்கும்போதே ஒருவர், என்ன நடக்க போகிறது என்பதை சொல்லிவிடுகிறார். ' இதுக்கு மேல இடமில்ல தம்பி......இனி போகணும்னா மேலதான் போகணும்.....'. படத்தின் இடையில் ஜெய்-அஞ்சலி செல்லும் பேருந்து ரோட்டை விட்டு விலகி, தாறுமாறாக ஓடி திகிலை கூட்டுகிறது. இளையராஜாவின் மூன்று பாடல்களை இயக்குனர் சரியான இடத்தில் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார். பேருந்தில், ஒரு அழகான காதல் ஜோடி பூக்கிறது. மாங்குயிலே பூங்குயிலே பாடலில் வரும் ; முத்து முத்து கண்ணால......' என்ற வரி வரும்போது அந்த மஞ்சள்நிற சல்வார் பெண்ணின் அழகான கரியவிழிகளை காட்டுகிறார்கள்....கவனித்தீர்களா?. அனன்யாவின் அக்காவாக வருகிறாரே ஒருவர், அவரை எங்கோ பார்த்தது போலவே இருக்கிறது. கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு பெண் போலவே அசப்பில் இருக்கிறார். விசாரிக்க வேண்டும், அழகாக இருக்கிறார். புதுமண தம்பதியினர், ஒரு சுட்டி குழந்தை, ஹாக்கி வீராங்கனைகள் என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் செதுக்கி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். பின்னணி இசையை தவிர படத்தில் குறை சொல்ல்வதற்கென்று ஒன்றுமில்லை.
Non-linear திரைக்கதை உத்தியை பயன்படுத்தி எடுக்கபட்டிருந்தாலும் - எளிமையான காட்சி அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள் , கவனத்தை ஈர்க்கும் வசனங்கள், திறமையான நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் இவற்றோடு சேர்த்து இயக்குனர் சரவணன் தமிழில் மறக்க முடியாத ஒரு உலகத்தரமான சினிமாவை தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
Comments
Post a Comment