
மனித மூளையானது உலகிலேயே மிகச் சிறந்த கருவியாகும். மணித் உடல் செல்களால் ஆனதைப்போல, மூளையானது நியுரான்கள்(Neurons) எனப்படும் நரம்பு செல்களால் ஆனது. மூளையில் ஏராளமான ரசாயன நீர்கள் உற்பத்தியாகின்றன. அவற்றை Neurotransmitters என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாம் வசதிக்காக ஹார்மோன்கள் என வைத்துக் கொள்ளலாம். டோப்பமைன், செரட்டோனோனின், மெலனின் போன்றவை அவற்றுள் சிலவாகும். இன்னும் ஏராளமான ஹார்மோன்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பெயர் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு ஹார்மோனும் ஒருவித உடல் மற்றும் மன இயக்கங்களை கட்டுபடுத்துகிறது; ஒழுங்குபடுத்துகிறது.
தனித்தனியாக பெயரிடப்பட்டிருந்தாலும் மூளையில் சுரக்கும் Neurotransmitter எனப்படும் இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடயவைதாகவே இயங்குகின்றன. ஒன்றின் கூடுதல் குறைவு மற்றொரு ஹார்மோனையும் பாதிக்கவே செய்யும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மூளையில் சுரக்கும் ஹார்மோன்களில் மிக முக்கியமான ஒன்று டோப்பமைன் (Dopamine) என்ற ஹார்மொனாகும். ஏனெனில் மனிதர்களில் நேக நடத்தை மற்றும் சிந்தனை (Cognition and Behavior) சார்ந்த செயல்களை இஹ்ஹார்மோனே கட்டுபடுத்துகிறது; ஒழுங்குபடுத்துகிறது. உறக்கம், மனநிலை (Mood), செக்ஸ், மனதை ஒருமுகபடுத்தி சிந்தித்தல் (Attention), கற்றல், ஞாபக திறன், முனைப்போடு செயலாற்றல் (Motivation), இன்பத்தை துய்த்தல்-மீண்டும் அதே இன்பத்தை நாடுதல் (Behavior and Reinforcement), போன்ற பலபல செயல்கள் சீராக இயங்குவதில் டோபமைன் பெரும் பங்கு வகிக்கிறது. ஆங்கிலத்தில் இதை Pleasure Center என அழைக்கிறார்கள்.
டோப்பமைனானது அளவோடு சுரக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எக்காரணத்தினாலோ டோபமைன் அளவானது கூடுதலாகவோ, குறைவாகவோ சுரந்தால் அங்குதான் பிரச்சினையே துவங்குகிறது.
டோபமைன் குறைவாக சுரந்தால் உடல் சோர்வு, சுறுசுறுப்பாக செயலாற்ற முடியாமை, மனச்சோர்வு (Depression), எதிலும் ஆர்வமின்மை (Loss of Interest and Satisfaction), செக்சில் நாட்டமின்மை, கவனக்குறைவு, ஞாபகத்திறன் குறைவு, தடுமாற்றம் போன்றவை ஏற்படும். டோபமைன் குறைவுபட்டவர்களுக்கு Addiction வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ADHD எனப்படும் ஒரு மனக்குறைபாடு குழந்தைகளிடம் அதிகம் தென்படுகிறது. Attention Deficit Hyperactivity Disorder ( அதீத சுறுசுறுப்பு & கவனசிதறல் ) என்ற இந்நோயானது குறைவான டோபமைன் அளவால் உண்டாகலாம் என்கிறார்கள். முதியவர்களுக்கு Parkinson எனப்படும் உடல் நடுக்கநோய் ஏற்படுகிறது.
ஒரு ஆற்றில் கரையை உடைத்துக்கொண்டு பெருகும் வெள்ளமானது வழியில் தட்டுப்படும் ஆடு, மாடு, கோழிகள், மனிதர்கள் என கணக்கில்லாமல் மானாவாரியாக அனைவரையும் மிதக்கவிடுகிறது. அதைப்போலவே, அதிகமாகவும் தாறுமாறாகவும் உற்பத்தியாகவும் டோபமைன் ஹார்மொனானது எந்தவித உடல்- மனக் கோளாறாகவும் உருவெடுக்கலாம். மனப்பதட்டம், தூக்கமின்மை, சோர்வில்லாமல் அலைந்துகொண்டே இருத்தல், அதீத செக்ஸ் வெறி, இளித்துகொண்டே இருப்பது, வினோதமான செய்கைகள், அகங்காரம், அர்த்தமற்ற மீண்டும் மீண்டும் மனதை துளைக்கும் சந்தேகங்கள், ஆவேசம்-அமைதி இரண்டும் மாறிமாறி வருதல் (Bipolar Mood) போன்ற கோளாறுகள் உருவாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் போன்றவையும் நோயாளிக்கு காட்சியளிக்கலாம்; கேட்கலாம். எழுத்தாளர் சுஜாதா, ஒரு மனநோயாளிக்கு கேட்கும் மாய ஒலிகளை அடிநாதமாக வைத்து 'ஆ' என்ற ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.
அதிகப்படியான டோபமைன் உற்பத்தியால் மூளையில் எண்ணங்களும் , கற்பனைகளும் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கும்; மூளை கொதிப்பேறி நோயாளிகள் தனிமையில் சுருண்டு அசைவற்று அப்படியே உட்கார்ந்து விடுவார்கள். இது ஒரு வகை.
மனிதர்களாகிய நாம் ஐம்புலன்கள் மூலமாக புற உலகோடு தொடர்புகொண்டு அனுபவங்களை பெறுகிறோம். இது நல்லது, இது கேட்டது என பிரித்தறியும் திறனையும், சுற்றாத்தாரோடு உறவாடும் திறனையும் பெறுகிறோம். ஆனால் டோபமைன் மிகையாக உற்பத்தியாகும் மூளையில் இடைவிடாத எண்ணங்களின் சுழற்சியால் கற்பனை தோற்றங்களாக உருவாகி உருவாகி இந்நோயாளிகள் ஐம்புலன்கள் வழியாக உலகோடு தொடர்பு கொள்ளும் திறனை படிப்படியாக இழந்து, சிந்தனையாற்றலையும் இழந்து - இறுதியில் மனமானது சிதைந்து விடுகிறது. இதுவே Schizophrenia எனப்படும் மனச்சிதைவு நோயாகும். மனச்சிதைவு நோயில் பலவகைகள் உண்டு. மிகையான டோபமைனால் மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ பலவோ நோயாளிக்கு காணப்படும்.
ஒருவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவரை பதவிசாக ஆங்கில மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றிட வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் Anti-Psychotic வகை மருந்துகள் சிறந்த முறையில் மனச்சிதைவு நோய்க்குறிகளை கட்டுப்படுத்துவதாக தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றால் குறைவான Anti-Psychotic மருந்துகள் மூலமே மனச்சிதைவு நோயாளியை நல்லமுறையில் வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம். சித்த-ஆயர்வேத மருத்துவம், ஹோமியோபதி, சைக்கோதெரபி, கவுன்சிலிங் ஆகியவறை துணைசிகிச்சைகளாக தாராளமாக நாடலாம். மனச்சிதைவு நோய் என அறிந்த பின்னும் சிகிச்சை பெறாமலிருப்பது விஷப்பரிட்சையாகும். நூறில் ஒருவருக்கு இந்நோய் வரும் என்கிறார்கள். வம்சாவளியாக மனச்சிதைவு நோய் வரக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சிறந்த படைப்பாளிகளாக இருப்பார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் தகவலாகும். ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோரில் சிலரை இதற்கு உதாரணமாக காட்டுகிறார்கள்.
ஆளவந்தான் திரைப்படத்தில் வரும் மொட்டை கமல் கதாபாத்திரம் மனச்சிதைவு நோய்க்கு மிகச்சிறந்த உதாரணமாகும். கமல் நன்றாக Research செய்தே அப்பாத்திரத்தை தவறில்லாமல் கச்சிதமாக உருவாக்கி உள்ளார். கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதே கொடுத்திருக்கலாம். எங்கே அதெல்லாம். கமல் படம் வெளியாகி, ஓடாமல் பெட்டிக்குள் போனபின்புதான் அவருடைய கடுமையான உழைப்பும் முயற்சிகளும் நமக்கு தெரிகிறது. தமிழ் ரசிகர்கள் வட்டாரம் இன்னும் அந்த அளவு விழிப்படையவில்லை. கமல் தன்னுடைய இளம்வயது முதலே தொடர்ந்து ஒரு முயற்சியை இடைவிடாது செய்து வருகிறார். அது என்னவென்றால், தமிழ் ரசிகர்களின் ரசனையை எப்படியாவது உயர்த்திவிட வேண்டும் என்பதுதான் அது. அறுபது வயதை நெருங்கியும் , கமலும் தன் முயற்சியில் மனம் தளரவில்லை.....ரசிகர்களும் மனம் தளரவில்லை....!
This content is very informative. Good explanation about schizophrenia for a layman. Kamalahasan established very well in Alavandhan by his acting about the characteristics and problems of a Schizophrenic person. Our society and government is not supporting well affected persons of this disease.
ReplyDeleteThanks for ur valuable reply . .
Delete