
எனக்கு பிடித்த திரையுல நடிகைகளின் பெயர்களை சொல்லும்போது என் நண்பர்களுக்கெல்லாம் பெரும்வியப்பாக இருக்கும். இப்படி ஒரு ரசனையா என நினைப்பார்கள். சிலர் கேட்டும் விடுவார்கள். அந்த நடிகைகளின் பட்டியல் இதுதான்: சரிதா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, அர்ச்சனா, ரேகா, சுவலட்சுமி. இதில் ரேகாவை தவிர்த்து மற்றவர்களை கவனித்தால் ஒருவித சாயல் ஒற்றுமை Resemblance தெரியும்.
ரேகா நடித்த புன்னகை மன்னன், கடலோர கவிதைகள் மற்றும் அவர் வரும் சில பாடல்களை பார்க்க நேர்ந்தால் அப்படியே நின்றுவிடுவேன். எனக்கு ரேகாவை ஏன் மிகவும் பிடித்திருந்தது என்று நான் யோசித்ததே இல்லை.
பிறகு ஒரு காலத்தில் உளவியல் பேரறிஞர் சிக்மண்டு பிராய்ட் அவர்களின் கருத்துக்களை படித்தபோதுதான் எனக்கு ஏன் ரேகாவின் மேல் ஈர்ப்பு வந்ததென அறிந்துகொண்டேன். குழந்தைபருவம் முதல் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், பெறும் அனுபவங்கள் எல்லாம் ஒரு மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் (Development of Personality) தாக்கத்தையும், பாதிப்பையும் உண்டாக்குகின்றன எனப்தே அவரது கருத்து.
நான் எல்.கேஜி மற்றும் யு.கேஜி -ஐ செல்லம்மாள் நர்சரி பள்ளியில் படித்தேன். அங்கு அப்போது எங்களுக்கு ஒரு டீச்சர் இருந்தார். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தர உடல்வாகுடன் மாநிறத்தில் இருப்பார். அளவான பவுடர் அடித்த அவர் முகம், கருநிற கூந்தல், அழகான கண்கள் என பார்த்த உடனே மனதில் பதியும் உருவம் அந்த டீச்சருடையது. நானும், கண்ணனும் அங்கு படித்தோம். வாஞ்சையுடன் எங்களை கவனித்துக் கொள்வார். மெலிதான குரலில் பேசுவார். பிஞ்சு வயதில் அவர் என் மனதில் பதிந்ததில் ஆச்சரியமே இல்லை. சாயலில் நடிகை ரேகாவை போலவே இருப்பார்.
என்னுடைய வீடு, டீச்சருடைய வீடு, எங்கள் பள்ளி எல்லாம் அருகருகில்தான் இருந்தது. ஒருதடவை என் வீட்டருகே ஒரு பெரிய வட்ட பட்டியில் கலர் கலராக சாயமிட்ட கோழிக் குஞ்சுகளை விற்றுக்கொண்டு இருந்தார்கள். பலவண்ணங்களில் அந்த கோழிக்குஞ்சுகள் அவ்வளவு அழகாக இருக்கும். என் அப்பாவிடம் இரண்டு கோழிகள் வாங்கி குடுப்பா....வளர்க்கலாம் என் கெஞ்சினேன். என் அப்பா வாங்கித்தரவே இல்லை. அதை பார்த்துக்கொண்டிருந்த டீச்சர்...அழுகாதப்பா.....நான் வாங்கித்தர்றேன் என்று கூறிக்கொண்டே அருகில் வந்தார். எனக்கு சந்தோசத்திற்கு அளவே இல்லை. திடீரென என் அப்பா.....அதெல்லாம் வேணாங்க.....டேய்.....சும்மா இருக்க மாட்ட .....என திட்டிக்கொண்டே என்னை அழைத்து சென்று விட்டார். எனக்கு செம கடுப்பாக இருந்தது.
யு.கேஜி முடிந்தவுடன் அந்த பள்ளியிலிருந்து விலகி வேறுபள்ளியில் ஒண்ணாம் வகுப்பு சேர்க்க என் அம்மா முனைந்தார்கள். பள்ளியில் இருந்து கிளம்பும் போது....என் அம்மாவிடம் பையன நல்லா பாத்துக்கங்க....என் அன்போடு கூறினார். நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன். பாலு மகேந்திராவை போல் காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ரேகா டீச்சர் மேல் எனக்கு ஒரு பிரியம் இருந்தது. அதன்பிறகு ரேகா டீச்சரை எங்குமே பார்க்கவில்லை.
இதுநடந்தது 1986-87வருடங்களில் . ஒரு பத்து வருடங்களுக்கு முன் என்னுடைய சின்னம்மாவின் ஹாஸ்பிட்டலில் நானும் என் அம்மாவும் உக்காந்திருந்தபோது ரேகா டீச்சர் வந்தார். அப்போது அவருக்கு முப்பைந்து வயதிருக்கும். நான் அடையாளம் கண்டுவிட்டேன். என் அம்மாவும், ரேகா டீச்சரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.....டீச்சர்....நான் உங்களிடம் படித்தேனே நினைவில்லையா.....நான் இப்போது பொறியியல் படிக்கிறேன்....என்ற வார்த்தைகள் தொண்டை வரைவந்து அப்படியே நின்றுவிட்டன.
mm mm, nadkatum nadkatum..................
ReplyDelete