வேதாத்திரி மகரிஷிக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை...?



உலக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கும் சமயத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கு, நேரு, நேதாஜி, வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட உலகப் பெருந்தலைவர்கள் ஏராளமான பேர் நோபல் கமிட்டிக்கு சிபாரிசு கடிதம் அனுப்பினார்களாம். தாகூர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கே உலக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாகூர் ஒரு மகாகவி என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நேரத்தில் மதுரை அரசடியில் பாரதியார் புலம்பிக் கொண்டிருந்தாராம். பாரதியாருக்காக பரிந்துரைக்க ஒரு ஆள் கூட இல்லை. ஆனால் பாரதியை போல ஒருவர் கவி எழுத முடியுமா எனத்தெரியவில்லை. பாரதியாரின் கவிதைகளை மடைதிறந்த வெள்ளம் என்று கூட சொல்லமுடியாது. காட்டாற்று வெள்ளம் என்றுதான் சொல்லவேண்டும். பாரதியாரின் இளையமகள் திருமதி. சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை எனும் அபூர்வ புத்தகம் என்னிடம் உள்ளது. அதைப்படித்தால், பாரதியார் வாழ்க்கை முழுவதுமே மிகுந்த சிரமத்திற்கிடையே தான் வாழ்ந்திருக்கிறார் எனத்தெரிகிறது. ரத்தக்கொதிப்பு போன்ற உடல் உபாதைகளாலும், மனக்கொதிப்பிலும், வெள்ளையர்களின் நெருக்கடிகளுக்கு இடையேயும்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். அதுபோன்ற நிலையிலும் அவர்...... ' எத்தனை கோடி இன்பம் வைத்தாய்.....எங்கள் இறைவா.....! ' என்று பாடியிருக்கிறார். இந்த ஒற்றைவரியில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன என யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பாரதியார் எந்த யோகமும் பழகியதில்லை.
ஆனாலும் உள்ளுணர்வு நிலையில் அவர் வடித்த கவிதைகள் விரைந்தோடும் ஆறு போல் பாய்ந்தாலும் கச்சிதமாகவே அமைந்திருக்கின்றன. உலக சமுதாயமானது, சமகாலத்தில் வாழும் கர்மவீரர்களையும், ஞானிகளையும், மகாகவிகளையும் என்றுமே அடையாளம் கண்டுகொண்டதில்லை; அங்கீகரித்ததில்லை.


வேதாத்திரி மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவுத்திருகோயிலில் ஒரு இரவு நேரத்தில் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது அவருக்குமுன் ஒரு ஒருவம் நிற்பதை உணர்ந்திருக்கிறார். இவர் யாரோ என மகரிஷிக்கு மனதிற்குள் ஒரு கேள்வி. நான் போகர் என பதில் வந்திருக்கிறது. போகர் மகரிஷியிடம், நான் உனக்கு நான்கு வரங்கள் தருகிறேன்.....நீண்ட நாட்களாக உன்னை வருத்தும் வயிற்றுப்புண் குணமாதல், அறிவுத்திருக்கோயிலை விரைவில் கட்டிமுடித்தல், உனது மனவளக்கலையை உலகம் முழுவதும் பரப்ப வழி செய்தல், உலகத்துக்கே தொண்டு செய்யும் உனக்கு உலகப்பரிசு கிடைக்க உதவி செய்தல் என்பவையே அவை எனக்கூறி கணப்பொழுதில் போகர் மறைந்து விட்டாராம். இந்நிகழ்வை மகரிஷி ஒரு நூலில் கவியாக குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தவுடன் எல்லோருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. வேதாத்திரி மகரிஷிக்கு, உலக அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் நன்னாளை எதிர்பார்த்து காத்திருந்தோம். போகரே சொல்லிவிட்டார் அல்லவா? மேலும் மகரிஷியின் வயிற்றுபுண் சிலநாட்களிலேயே சரியாகிவிட்டது, கட்டிமுடிக்காமல் இருந்த அறிவுத்திருக்கோயிலும் தடங்கலின்றி கட்டி முடிக்கப்பட்டது. அவரது மனவளக்கலையும் விரைவாக உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. தற்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைத்து பல்கலைகழகங்களும் மனவளக்கலையை அங்கீகரித்து டிப்ளமா, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளாக தனியாகவே வழங்கிவருகின்றன. இந்தநிலையில் மகரிஷி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி இடி போன்று இறங்கியது. மனவளக்கலை அனபர்கள் எல்லோரும் மிகுந்த துயர் அடைந்தனர்.


வேதாத்திரி மகரிஷிக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்க வேண்டும்? அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என சிலர் நினைக்கிறார்கள்? வேதாத்திரி மகரிஷியின் சீடனான நான் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சுருக்கமாகவே கூறுகிறேன். வேதாத்திரி மகரிஷி ' எளியமுறை உடற்பயிற்சி ' என ஒரு உடற்பயிற்சி தொகுப்பை உருவாக்கியுள்ளார். பார்ப்பதற்கு சாதரணமாக , எளிமையாக தோன்றும். சும்மா கை, காலை சுத்துவதுபோல இருக்கும். ஆனால் நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு திறமையான மருத்துவரும், ஒரு அறிவியல் நிபுணரும் சேர்ந்துதான் அப்பயிற்ச்சியை வடிவமைக்கமுடியும் எனப்புரியும். ஏராளமான நோய்களை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் கூடிய வல்லமை படைத்தது எளியமுறை உடற்பயிற்சி. பலன் பெற்றோர், பெற்றுக்கொண்டிருப்போர் லட்சக்கணக்கான பேர்.


அடுத்தது காயகல்ப பயிற்சி. பெயர்தான் ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆனால் கீர்த்தி மிகப்பெரியது. முறையான கால இடைவெளியில்லாமல் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு ஈடுபட்டு விந்தை செலவழித்து ஓட்டாண்டி ஆனவர்கள் உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள் . முறைகேடான உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டு நரம்புகள் தளர்ந்து, மூளை மழுங்கி போனவர்களுக்கும் குறைவில்லை. இதுபோன்ற இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்தில் உடல்நலனை மீட்டு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை அளிக்க கூடியது காயகல்ப யோகம். காயகல்பம் என்பது மருந்தல்ல. ஒரு எளிமையான மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றதுதான். காயகல்ப யோகம் என்பது ஒருவரின் வாழ்க்கையே மாற்ற கூடிய வரம் போன்றது.


அடுத்தது தற்சோதனை என்ற மனப்பயிற்சி. வேதங்கள் 'அகம் பிரமமாம் ஸ்மி ' என்கின்றன. ஜீசஸ் கிறிஸ்ட் ' தேவனின் அரசாட்சி உங்களுக்குள்ளேயே உள்ளது ' என்கிறார் ' புனித நூலான பைபிளில். ஆனால் ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற எண்ணங்கள், பொறாமை, பேராசை, வெறுப்பு, முறையற்ற ஆசைகள், கற்பனையான எதிர்பார்ப்புகள், கவலைகள், சினம் இவற்றால் தங்களது மனதில் தாங்களே ஒரு திரையை போட்டுக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒவ்வாத எண்ணங்களை தானாகவே ஆராய்ந்து படிப்படியாக மனதை விட்டு நீக்கிகொண்டு சாந்தமான மனதையும், நிம்மதியான வாழ்வையும் அடைய உதவுவதே தற்சோதனை பயிற்சி. நவீன மொழியில் கூறினால் ' தனக்குத் தானே செய்துகொள்ளும் சைக்கோதெரபி ' என்று நான் தற்சோதனையை கூறுவேன். ஒரு தேர்ந்த உளவியல் மேதையால்தான் தற்சோதனை பயிற்ச்சியை உருவாக்க முடியும்.


குண்டலினி யோகம் எனும் தியானமும் மனவளக்கலையில் கற்றுத்தரப்படுகிறது. இதைப்பற்றி தனியாக ஒரு பதிவே எழுத வேண்டும். அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை ஒரு அமைதியான நிலைக்கு கொண்டு வந்து, மனதின் இறுக்கத்தை தளர்த்தும் பயிற்சியே குண்டலினி யோகமாகும். இதில் மந்திரங்களோ, சிலை வணக்கமோ எதுவும் கிடையாது.


வேதாத்திரி மகரிஷி தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகள் உலக அமைதிக்கு பாடுபட்டார். அவர் வெறுமனே உலக அமைதி உலக அமைதி என கூவிக்கொண்டிருக்க்வில்லை. தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று தளங்களிலும் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கமாக ஆராய்ந்து அவற்றை நிரந்தரமாக தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கினார். தனது மனவளக்கலை பயிற்ச்சிகள், உலக அமைதிக்கான கொள்கை கோட்பாடுகள், விஞ்ஞான கருத்துகள் இவற்றை உலகம் முழுவதும் பயணம் செய்து- பல்கலைகழகங்கள், அறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் இவற்றின் மூலமாக தொண்டாற்றினார். ஐ.நா. சபையில் கூட ஒருமுறை உரையாற்றியிருக்கிறார். வேதாத்திரி மகரிஷியின் எந்த ஒரு கருத்தோ, பயிற்சி முறையோ பகுத்தறிவுக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் புறம்பானது அன்று என்பது குறிப்பிடத்தக்கது. மனவளக்கலை என்பதை அனைத்து மதத்திற்கும் பொதுவாகவே மகரிஷி வடிவமைத்துள்ளார் எனபது மிகவும் சிறப்பாகும். தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்த்து ஏறக்குறைய என்பது நூல்களை மகரிஷி எழுதியுள்ளார். அவர் தனது மறைவிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக ஒரு நூலை எழுதி முடித்தார் என்ற செய்தி நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை.


வேதாத்திரி மகரிஷிக்கு நோபல் பரிசு கடைசிவரை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் அதுவும் ஒருநாள் தீர்ந்துவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு (!) கொடுத்தார்களே......அப்போதுதான் அது.....நல்லவேளை வேதாத்திரி மகரிஷிக்கு நோபல் பரிசு கொடுக்காமல் விட்டார்கள்......!!!

Comments

  1. மகரிஷி பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. அவருடைய கருத்துக்கள் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படக் கூடியவையாக இருக்கும். அவருடைய புத்தகங்கள் சில படித்துள்ளேன். அறிவுத்திருக்கோயில் அமைந்துள்ள இடமும், அந்த அமைதியும் எனக்கு மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  3. ஒன்றுக்கு இரண்டாக மிகைபடுத்தி சொல்லப்படும் இது போன்ற கதைகளை யாரும் நம்ப வேண்டாம்.

    ஒபாமாவை கிண்டல் செய்கிறீர்களே, ஏன் ! நரகலை நடையில் தமிழ் கவிதைகள் எழுதி, கலைஞன் என்று தனக்கு தான்றோன்றித்தனமாக பட்டம் சூட்டி வாழும் திருக்குவளை தீயசக்தி. கருணாநிதி பற்றி கூறுவதற்கு யாருக்காவது தைரியம் உண்டா ?

    ReplyDelete
  4. உங்கள் ஆதங்கத்தை மதிக்கிறேன் .1990 ஆண்டுகளில் எனது மன வளக்கலை ஆசிரியர் (இப்போது பேராசிரியர் ) தாமோதரன் அய்யா வீட்டூக்கு நேர் தெருவில் குடியிருந்தேன் அப்போது நான் பயிற்சியில் சேர்ந்து அருள்நிதி பயிற்சி முடித்த சமயம் .ஸ்வாமிஜி தாமோதரன் வீட்டிலிருந்து காரில் ஏறுவதை பார்ப்பேன் .அவ்வளவு சாதரணமான ஆத்மாவின் அறிவை உணர்ந்து கொண்ட இந்த உலகத்தின் ஆன்மீக குரு நமது ஸ்வாமிஜிக்கு 'நோபல் பரிசு முக்கியமல்ல அவரின் நோக்கத்தை நிறைவேற்றும் நாம்தான் முக்கியம் .

    ReplyDelete
  5. நோபல் பரிசு மனிதனால் அமைக்கப்பட்டது. மனிதனால் அமைக்கப்பட்ட எந்த ஒன்றிலும் நூறுசதம் துல்லியம் இருப்பதில்லை. 1990களில் பெரும்பாலான மனவளக்கலை மன்ற அன்பர்கள் அப்பொழுதெல்லாம் அதை ஒரு பெரிய கவலையாகவே எண்ணினர். ஆனால் அப்பொழுது அதைப்பற்றி மகரிஷியேகூட சிறிதும் கவலைப்பட்டதில்லை. அப்பொழுது அவருடைய ஆசையெல்லாம் உலகம் உய்யவேண்டும் ஒவ்வொரு தனிமனிதனும் அமைதி பெற வேண்டும் என்பது மட்டுமே இருந்தது. இறைநிலையைவிட எந்த ஒன்றுமே உயர்ந்ததில்லை.

    ReplyDelete
  6. He is present in the hearts of millions of people thats the biggest noble prize

    ReplyDelete

Post a Comment