வேதாத்திரி மகரிஷி விடுவித்த எஞ்சின் புதிர்...!





நான் பி.இ. படிக்கும்போது எங்களுக்கு ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் என்ற சப்ஜக்ட் ஒரு ஆன்சிலரி பாடமாக இருந்தது. நான் படித்த பொறியியல் பிரிவு பெரும்பாலும் மேலாண்மை தொடர்பாகவே இருந்ததால் ஆட்டோமொபைலை நான் கண்டுகொள்ளவே இல்லை. அந்த பாடத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்றுதான் பாஸ் ஆனேன். மார்க் கூட வெறும் ஐம்பத்தி ஐந்துதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என் திறமையை. இது நடந்தது பைனல் இயர் பைனல் செமேஸ்டேரில். கடைசியில் தியரி பரீட்சைகளுக்கு முன் வைவா-வாய்ஸ் என ஒன்று நடக்கும். அதாவது நான்கு ஜாம்பவான்கள் (முனைவர்கள்) உக்காந்து கொண்டு கேள்வி கேட்டு மார்க் போவார்கள். அதில் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். ஏனென்றால் எனக்கு முன் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் சொந்த பாடத்திலிருந்தே கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தவர்கள் என்னுடைய முறை வரும்போது, அவர்களுக்கு போரடித்ததோ என்னவோ, ஆட்டோமொபைலிருந்து ஒரு கேள்வியை கேட்டு விட்டார்கள். கேள்வி மிகவும் எளிதானதுதான். நான்கு பேர்களில் ஒருவரான என் பேராசிரியர் ஒருவர்....அதான் மிகவும் ஈசியான கேள்விதானே.....சொல்லிவிட்டு போப்பா.....என்பதுபோல என்னைப் பார்த்துக் கொண்டே பின்னால் சாய்ந்து உட்கார்ந்தார். கேள்வி இதுதான்: டூ ஸ்ட்ரோக் எஞ்சினுக்கும் , போர் ஸ்ட்ரோக் எஞ்சினுக்கும் என்ன வித்யாசம்?.....நான் சிலநொடிகள் யோசித்து விட்டு.....தெரியல சார் என்றேன். அவ்வளவுதான்....நால்வரும் நிமிர்ந்து உட்காந்தார்கள். என்னப்பா இது தெரியலன்கிற? என்றார்கள். சார்....உண்மைலயே தெரியல சார் என்றேன். ஒருவர், எ காமன் மேன் வில் நோ இட்.....யு சே யு டோன்ட் நோ....என்றார். சரி....யு கேன் கோ என்றார்கள். எப்படியோ பிழைத்துப்போகிறான் என பாஸ் போட்டுவிட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அந்த கேள்வி மிக மிக அடிப்படையான கேள்வி என்றும், காமன் மேன் என்றால் பாமரன் என்று அர்த்தம் என்றும். எனக்கு ரொம்பக் கேவலமாக இருந்தது.



அதன் பிறகு பலபல புத்தகங்களை வாங்கிப்படித்து என் ஆட்டோமொபைல் அறிவை (!) பெருக்கிக் கொள்ள முயன்றேன். எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. கடைசி முயற்சியாக ஆட்டோமொபைலின் அடிப்படைகள் என்ற எளிமையான புத்தகத்தை வாங்கினேன். சத்தியமாக அந்த புத்தகமும் எனக்கு விளங்கவில்லை. இறுதியில் எனக்கு நானே கூறிக் கொண்டேன். நமக்கு ஆட்டோமொபைல் துறையின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு மூளை இல்லை அல்லது அந்த துறையில் நமக்கு ஆர்வமும் ஈடுபாடும் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் உண்மை மிக ஆச்சர்யகரமாக வேறுவிதம் இருந்தது.



வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். மகரிஷி உலகம் முழுவதும் தத்துவஞானியாகவே அறியப்படுகிறார். பொதுவாக எனக்கு எந்த சாமியார்களையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் பழக்கம் இல்லை. ஆனால் மகரிஷியை ஒரு ஏமாற்றுக்கார சாமியார் என்று என்னால் கூறிவிட முடியவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஏனெனில் அவரது புத்தகங்கள் அனைத்திலும் எலக்ட்ரான், நியுட்ரான், புரோட்டான், ஆற்றல், கிராவிட்டி, காந்த அலை இதுபோன்ற வார்த்தைகள் அடிக்கடி வந்துகொண்டே இருந்தன. ஒரு ஆன்மீகவாதி இவ்வாறு எழுதுவது எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள நான் எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகம் முதல் பி.எஸ்.சி., பொறியியல் புத்தகங்கள் வரை நான் ரெபர் செய்ய வேண்டியதாயிற்று. வேதாத்திரி மகரிஷி முறையாக எந்த படிப்பும் படித்தவர் கிடையாது. ஆனால் அவர் எழுதிய தத்துவ நூல்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள ஒருவர் சிறிதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வான சாஸ்திரம் மற்றும் உளவியலை போன்ற பல இயல்களின் அடிப்படைகளை தெரிந்திருக் வேண்டும். அந்த வகையில் நான் மிகவும் சிரமப்பட்டுத்தான் மகரிஷியின் தத்துவங்களை ஓரளவு புரிந்து கொண்டேன். எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு மனக்குறை இருந்தது. அது என்னவென்றால், அறிவியல் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளும் திறமை நமக்கில்லையோ எனபதுதான் அது. அந்தக் குறையை மகரிஷிதான் தீர்த்து வைத்தார். பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்த கல்லூரி பேராசிரியர்களும் விளங்கவைக்கத் திணறும் அறிவியல், பொறியியல், உயிரியல் கருத்துக்களைஎல்லாம் அவர்தான் எங்கேயோ இருந்து கொண்டு எனக்கு கற்று கொடுத்தார். இத்தனைக்கும் அவரை ஒருமுறை கூட நான் நேரில் கண்டதில்லை. என் வாழ்க்கையே வேதாத்திரி மகரிஷி அவர்களின் எண்ணங்கள் தான் என்றால்கூட அது மிகையாகாது. சிறுவயதிலிருந்து கல்லூரி வரை நான் மிரண்டு போயிருந்த அறிவியல் கருத்துக்களெல்லாம் சிறிது சிறிதாக எனக்கு பிடிபட துவங்கின. அவ்வாறு வந்து கொண்டிருக்கும்போது ஆட்டோமொபைல் எஞ்சின் எப்படி இயங்குகிறது என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த புதிரும் விடுபட்டுவிட்டது.




ஆ.மொபைல் என்ஜின்களில் பொதுவாக டூ ஸ்ட்ரோக் எஞ்சின் என்றும் போர் ஸ்ட்ரோக் எஞ்சின் என இரண்டு வகை உண்டு. மேலும் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் என பலவிதங்களில் வகைபடுத்தி படிப்பார்கள். ஆனாலும் அடிப்படை என்பது ஒன்றுதான். ஒரு ஆ.மொபைல் எஞ்சின் கீழ்க்கண்டவாறு இயங்குகிறது :

ஒரு இரும்பு சிலிண்டருக்குள் தலைகீழாக திரும்பிய டி வடிவிலான பிஸ்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஸ்டன் ஒரு நீண்ட ராடு (கம்பி) மூலமாக பல்சக்கரங்கள் எனப்படும் கியர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நாம் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்காக திறந்து விட்டவுடன் பெட்ரோல் ( அல்லது டீசல் ) சிறிது சிறிதாக பெட்ரோல் டாங்குக்குள் கசியத் துவங்குகிறது. நாம் கிக்கரை உதைக்கும்போது, இயந்திர ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு, ஸ்பார்க் பிளக்கில் ஒரு நெருப்புபொறி உண்டாகிறது. ஸ்பார்க் பிளக்கின் மற்றொரு முனை பெட்ரோல் டாங்குக்குள் இருக்கிறது. நெருப்புபொறி பட்டவுடன் பெட்ரோல் குபுக்கென பற்றி எரிய ஆரம்பிக்கிறது. வெப்பத்தால் விரிவடைந்த பெட்ரோல் அணுக்கள் பிஸ்டனை மேல் நோக்கி தள்ளுகின்றன. பிஸ்டன் மேலே சென்றவுடன் பிஸ்டனின் எடை மீண்டும் கீழே அழுத்துகிறது. இரண்டு தடவைகளில் பெட்ரோல் அணுக்கள் எரிந்து ஆற்றல முழுவதையும் இழந்து விட்டால் அது டூ ஸ்ட்ரோக் எஞ்சின், நான்கு தடவைகள் (ஒரு சுழற்சி எனபது ஒரு தடவை மேலே கீழே சென்று வருவது ) மேலும் கீழும் நகர்ந்து பிஸ்டன் வரும்வரை பெட்ரோல் அணுக்களில் ஆற்றல இருந்தால் அது போர் ஸ்ட்ரோக் எஞ்சின். பிஸ்டனின் மேல்-கீழ் அசைவுகளுக்கேற்ப அதனோடு ராடு மூலம் இணைக்கப்பட்ட கியர்கள் தொடச்சியாக சுழன்று வண்டியை ஓடச்செய்கின்றன. பெட்ரோல் தொடர்ச்சியாக கசிவதும், எரிவதும், ஆற்றலாக மாறுவதும் இடைவிடாமல் நடப்பதால் நாம் வண்டியை அணைக்கும் வரை வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.



போர் ஸ்ட்ரோக் எஞ்சின்கள் அதிக மைலேஜும், டூ ஸ்ட்ரோக் எஞ்சின்கள் குறைவான மைலேஜும் தருபவை. சிலிண்டர், பிஸ்டன் இவைகளின் எடைகளை மாற்றி வடிவமைப்பதின் மூலமாக எஞ்சின்கள் வித்தியாசப்படுகின்றன. நாம் ஓட்டும் டி.வி.எஸ். வண்டிகள் டூ. ஸ்ட்ரோக் எஞ்சின்களையும், கியர் வண்டிகள் போர். ஸ்ட்ரோக் எஞ்சின்களையும் கொண்டவை. இப்போது சொல்லுங்கள்......அறிவியல் என்பது மிக எளிமைதானே......?




Comments

  1. ஆஹா.... நல்ல அறிவியல் ஆசிரியர் ஆகும் எல்லாத் தகுதியும் உங்களுக்கு இருக்குதே.... நீங்க பார்ட் டைம் ஆக மாணவர்களுக்கு சொல்லி தரலாமே....

    ReplyDelete
  2. மகரிஷியின் மாணவனா லிங்கேஸ்?வேதாத்ரியத்தை அறிய,அறிய அறிவியல் நுட்பம் மட்டுமல்ல,அகிலத்து
    நுட்பம் யாவும் புலப்படும்.
    வாழ்த்துக்கள் தம்பி!சிறப்பான இடுகை!

    ReplyDelete

Post a Comment