இயற்கை மருத்துவம் - ஓர் ஒப்பற்ற மருத்துவம்.




உலகம் முழுவதும் பரவலாக ஐந்துவித மருத்துவமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்றவையே அவை. சித்த ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவிலும், யுனானி குறிப்பாக அரேபிய நாடுகளிலும், ஹோமியோபதி ஓரளவு உலகம் முழுக்கவும் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில மருத்துவம் உலகப்பொதுவானது. ஒவ்வொரு வைத்திய முறைக்கும் தனி சிறப்புகளும் உண்டு ; சில குறைபாடுகளும் உண்டு.


என் அப்பாவுக்கு நான்கைந்து வருடங்களாக ஒருவித சிறுநீர் இயல் பிரச்சினை இருந்து வந்தது. அதன் காரணமாக , சிறுநீர்ப்பாதை தொற்று (யு.டி.ஐ.) அடிக்கடி ஏற்பட்டு தொந்திரவு அளித்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஆங்கில மருத்துவரிடம் அழைத்து செல்வேன் என் அப்பாவை, மருத்துவரும் சிலபல மருந்துகளை தருவார். தொற்று உடனே சரியாகி விடும். ஆனால் மீண்டும் சில மாதங்களில் அதே உபாதை வந்துவிடும். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்து வந்தது. அப்பாவும் மிகவும் உடல் நலிவுற்று சிரமப்பட்டார். அந்த சமயத்தில், சித்த- ஆயுர்வேத வைத்திய முறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே என்று எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு சித்த மருத்துவரிடம் அவரை அழைத்து சென்றேன். சித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளால் என் தந்தை நல்ல உடல் திடம் பெற்ற போதிலும், சிறுநீர் தொற்று தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. எனக்கு இதன் காரணம் புரியாத புதிராகவே இருந்தது மேலும் மன உளைச்சலை அதிகரித்தது. ஹோமியோபதியும் வயதானவர்களின் நலிந்த உடல்வாகுக்கு ஒத்துவராது என்றே தோன்றியது. அது போன்ற ஒரு இக்கட்டான தருணத்தில், தெய்வாதினமாக, இயற்கை மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளையும் புத்தகங்களையும் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் என் அப்பாவுக்கு ஏன் அடிக்கடி சிறுநீர் தொற்று உண்டாகிறது என்பதையும், நோய்கள் எவ்வாறு ஒரு மனிதனுக்கு உண்டாகின்றன என்பதையும் , அவற்றை எப்படி சில எளிமையான இயற்கை வைத்திய உபாயங்கள் மூலமாக குணமாக்கி கொள்வது என்பதையும் அறிந்துகொண்டேன். ஏற்கனவே நான் பெற்றிருந்த ஆன்மீக அறிவும், அறிவியல் அறிவும் ஒருசேர உதவின இயற்கை மருத்துவ தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு.


இயற்கை மருத்துவத்தை ஒரு முழுமையான மருத்துவமுறை என்றால் அது மிகையில்லை. எளிமையான, சிக்கனமான, பக்கவிளைவுகளே இல்லாத....ஏன் மருந்துகளே இல்லாத ஒரு தெய்வீக மருத்துவம்தான் இயற்கை மருத்துவமாகும். சொல்லப்போனால், இயற்கை மருத்துவம் ஒரு மருத்துவமுறையே அல்ல. மாறாக , அது இயற்கையோடு இசைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். தடைகளே சாதனைகளுக்கு உந்துசக்தியாக அமைவது போல, தோல்வியே வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைவது போல, நோயே நல்ல உடல்நலனை பெறுவதற்கு வழியாக அமைகிறது. இயற்கை வைத்தியத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. ஒவ்வொருவரும் தனக்குத்தானே மருத்துவர்.


விதவிதமான நோய்களால் உலகம் முழுவதுவமே மனிதகுலம் தனிநபர்- குடும்பம்-தேசம் ஆகிய பல்வேறு தளங்களில் தாங்கமுடியாத அல்லலுற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவம் மனதிற்கு மிகவும் ஆறுதலளிக்கும் விஷயமாகும். ஆங்கில மருத்துவ முறையின் அச்சுறுத்தும் மருத்துவமனை சூழல், லாபத்தையே முன்னிறுத்தும் வணிக போக்கு, பொருளாதார நெருக்கடியால் தினமும் உயரும் மருந்துகளின் விலை - இவற்றிலிருந்து தப்பிக்க ஒரே சுலபவழி இயற்கைத் தாயிடம் சரணடைந்து விடுவதுதான்.


நோய்கள் உண்டாகும் விதம், அவற்றை போக்கி கொள்ளும் சிகிச்சைகள் , நோய்கள் வராமல் தடுக்கும் வழி - இவற்றை பற்றி இயற்கை மருத்துவம் என்ன கூறுகிறது என்பதை சுருக்கமாக அடுத்த ஓரிரு கட்டுரைகளில் எழுதிவிடுகிறேன். பிறகு நீங்களே, புத்தகங்களை படித்தும் சிந்தித்தும் அறிவை விருத்தி செய்துகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பது என் விருப்பம்.

Comments

  1. நோய்கள் உண்டாகும் விதம், அவற்றை போக்கி கொள்ளும் சிகிச்சைகள் , நோய்கள் வராமல் தடுக்கும் வழி

    ...Holistic medicine.

    ..... very informative post. Thank you.

    ReplyDelete
  2. இயற்கை என்றும் சிறப்பு தானே நண்பா

    ReplyDelete

Post a Comment