
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத்தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு..
பூவைச்சூடிப்......மாமன் உண்டு மானே...மானே..
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே... நானே...
உன்னோடுதான் என் ஜீவன்....
ஒன்றாக்கினான் நம் தேவன்...
நீதானம்மா என் தாரம்...
மாறாதம்மா எந்நாளும்...
தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் வரும் தென்மதுரை வைகை நதி என்ற பாடலில் இடையில் வரும் வரிகள் இவை. மு.மேத்தாவின் உயிரோட்டமுள்ள வரிகளும், இளையராஜாவின் அற்புதமான மெட்டும், ரஜினியின் மிக இயல்பான நடிப்பும் சேர்ந்து- சமையலில் அத்தனை சரக்குகளும் மிகச்சரியாக சேரும்போது எப்படி ஒரு சமையல் வாசம் வீசுமோ- அதேபோல் கேட்கும்போது மனதில் ஒரு இனிமையான உணர்வை உண்டாக்கும் பாடல் இது. என்னைப் பொறுத்த வரையில், தமிழில் வெளிவந்த உலகத்தரமான பாடல் இது. ஏன் என்று கூறுகிறேன்.
மேலே உள்ள வரிகளை எந்த ஆண்மகனும் உற்று கேட்டால் , அப்படியே மனதை கவ்விவிடும். குறிப்பாக காதலிப்பவர்களுக்கு. வரிகளும் இசையும் அப்படிப்பட்டவை. நான் கல்லூரியில் படித்த நேரத்தில், இந்த பாடலை ஒரு கேசட்டில் பலபாடல்களோடு சேர்த்து பதிவு செய்து வைத்திருந்தேன். என் ரூமில் இந்த பாடல் ஒலிப்பதை கேட்டு, என் நண்பர்களும் கேசட்டை வாங்கி சென்று கேட்டு ரசிப்பார்கள். அப்போது எங்கள் ஹாஸ்டலில் இந்த பாடல் ஒலிக்காத ரூமே இல்லை. ஒவ்வொருவருக்கும் அவ்வளவு பிடித்து விட்டது. அச்சமயம் ஒருநாள் நானும், கார்த்தி என்ற நண்பன் ஒருவனும் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவன் பாடலை ரசித்து கேட்டுவிட்டு பின்வருமாறு கூறினான். " இந்தப்பாட்டில் முதல் பாராவை விட , இராண்டாவது பாராதான் நன்றாக இருக்கிறது" என்றான்.
நான் உடனே, உனக்கு தம்பி இருக்கிறானா என்று கேட்டேன். இல்லை எனக்கு அண்ணன்தான் இருக்கிறார் என்றான். அதற்கு நான், அண்ணனும் தம்பியும் ஒன்றுதான்......நமக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்ற
ஞாபகத்தோடு இந்த பாடலைக் கேட்டு பார்......பாடல் முழுவதும் பிடித்து விடும் என்றேன். அவன் பதிலேதும் கூறாமல் என்னை சில வினாடிகள் முழித்து பார்த்தான். பின் அங்கிருந்து சென்று விட்டான். அதன் பின் சில நண்பர்களும் இதேபோல் இராண்டாவது பாராதான் அருமையாக உள்ளது என்றார்கள்.
எஸ்.பி.பி. இன் குழைவான குரலில் தடையில்லாமல் ஓடும் ஆறுபோல் ஒலிக்கும் இப்பாடலில் இளையராஜா ஒரே ராகத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் இதன் சிறப்பம்சம், ஒரே ராகத்தில் - சகோதரன் மீதான பாசத்தையும், காதலியின் மீதான நேசத்தையும் - அழகாக பொருந்தி போகச் செய்திருக்கிறார். இது போன்ற பாடல்கள் மிக அரிதானவை. அப்போதெல்லாம் பாடலை கேட்கும்போது என் தம்பியின் நினைவும், என் காதலியின் நினைவும் ஒருசேர மனதில் படர்ந்து மனதை மெய்மறக்க வைத்துவிடும். நீங்களும் தரமான அந்த பாடலை ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்.....தம்பியின் மீது தனிப்பாசமே வந்துவிடும். காதலியின் மீது பாசம் வருவதைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதெல்லாம், காதலிக்கும் நண்பர்கள் மொபைல் போனிலேயே காதலியிடம் உருகி விடுகிறார்கள். சகோதரனை சிலாகித்து ரஜினி பாடும் வரிகள் இதோ:
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை...
தன்னை போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர்தாய் பிள்ளை.
தம்பி....உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை.
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை....
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்...
தென்மதுரை வைகைநதி
தினம்பாடும் தமிழ் பாட்டு......
Lovely song....
ReplyDeleteநல்ல பாடல்...
ReplyDeleteஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..