என் ஞாபக அலமாரியில் போகர்...




தோழி என்ற பெயரில் எழுதி வரும் இலங்கை சிநேகிதி ஒருவருக்காக ஈழத்து சித்தர்களை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் எனக்கூறிவிட்டு அப்படியே மறந்து விட்டேன். உண்மையில் மறக்கவில்லை. என் ஞாபக அலமாரியில் குவிந்து கிடக்கும் ஏராளமான தகவல்களில் தோழிக்கான பதிவுகள் பத்திரமாகவே இருந்தன.


எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. மேலாண்மை படிக்கும் நானே நேரத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பொழுது , மருத்துவம் பயிலும் மாணவியான தோழி எப்படி தினமும் ஒரு பதிவை எழுதி வெளியிடுகிறார் என்று. நல்லவேளை அந்த ரகசியத்தை அவரே சொல்லிவிட்டார். வாரயிறுதியில் ஒருநாளில் பல புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து அடுத்த நாள் பிளாக்கரில் ஒரே மூச்சில் உள்ளிட்டுவிட்டால், பிளாக்கரே அந்தந்த நாளில் ஒரு பதிவை வெளியிட்டு விடுமாம். அசாத்தியமான செயல்...! சாதாரணமாக ஒருவரால் முடிகிற காரியமா இது? எனக்கு இருப்பதோ ஒரு நாளோ ரெண்டு நாளோ விடுமுறை. கொஞ்சமாவது ரிலாக்ஸ் செய்யாவிட்டால் மண்டை காய்ந்து விடும். அதுவும் ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதும் பொழுது ஆயாசமும், சோர்வும் ஏற்பட்டு விடும். அதனால்தான் நான் மாற்றி மாற்றி எழுதுகிறேன். ஆனால் இத்தடைகளை எல்லாம் மீறி தோழி எழுதுகிறார் என்றால் அதற்கு காரணம் சித்தகளின் ஆசி பரிபூரணமாக அவருக்கு இருப்பதுதான். ஒருவர் எந்த தத்துவம் அல்லது நபரை பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறாரோ அந்த அளவிற்கு மிகத்துல்லியமாக சிந்திப்பவரின் மன அலை சுழல் மாற்றமும், பண்பேற்றமும் பெறுகிறது. சிந்திக்கப்படும் பொருள் அல்லது நபரின் தன்மைகளை தானாகவே சிந்திப்பவர் பெறுகிறார். இந்த இயற்கை- மனோதத்துவ நியதிப்படி பார்த்தால் வான வெளியில் அரூபமாக இயங்கும் எண்ணற்ற சித்தர்களின் அருள்மழை தோழிக்கு தடையில்லாமல் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த அருள்மழை அவருக்கு வழிநடத்துவதாகவும், பாதுகாப்பாகவும், ஆசீர்வாதமாகவும் அமையும். ஞானயோகம், கர்மயோகம், குண்டலினியோகம், ராஜயோகம் என அனைத்து யோகங்களையும் ஒன்றுகூட்டி பரபரப்பான தற்கால வாழ்க்கை ஒத்தபடியும், விஞ்ஞான யுகத்திற்கு ஒத்தபடியும் மனவளக்கலை யோகம் என்ற பெயரில் மிக எளிய முறையில் உலகிற்கு வழங்கிய என் குருநாதர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆசியும் இலங்கை சிநேகிதிக்கு கிடைக்குமாக. வேதாத்திரி மகரிஷி ஒரு முறை ஆழ்ந்த தவத்தில் இருந்த நேரத்தில் போகர் அவருக்கு உணர்வாக காட்சியளித்ததாக மகரிஷி ஒரு கவியில் குறிப்பிட்டுள்ளார்.


நேரமில்லாததால் ஈழ சித்தர்கள் என்ற தலைப்பில் நான் கூற நினைத்ததை மிகசுருக்கி எழுதிவிடுகிறேன். தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர் நாகராஜ். இந்த நாகராஜ் சித்தர் என்பவரே பிற்காலத்தில் மகா அவதார் பாபாஜி என அறியப்பட்டார். நாகராஜ் சித்தர் போகரை இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற ஊரில் (பாபாஜியின் இளவயதில்) சந்தித்ததாகவும், போகர் அவருக்கு குண்டலினி யோகம், கிரியா யோகம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்து கடுமையான பயிற்சிகளுக்கு பின், குற்றால மலைக்கு சென்று அகத்தியரை சந்திக்குமாறு பணித்ததாகவும் என்னிடம் உள்ள ஒரு பழைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அகத்தியர் நாகராஜ் சித்தருக்கு சில ரகசிய உபதேசம் செய்து பிறகு இமயமலைக்கு அனுப்பி வைத்ததாகவும் அதன்பிறகே நாகராஜ் சித்தர் மகா அவதார் பாபாஜி என உலகம் முழுவதும் அறியப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. பாபாஜியைப் பற்றி எந்த வரலாற்று ஆவணமும் இதுவரை கிடைக்காததால் அவரைபற்றிய எந்த தகவலையும் உறுதி செய்ய முடியவில்லை. உண்மை பொய் என பிரித்தறிய முடியாத அளவிற்கு பலதகவல் காணக்கிடக்கின்றன. ஒரு மூத்த யோகா ஆசிரியர் ஒருவர் என்னிடம் பாபாஜியும் ஏசுநாதரும் இமயமலை சாரலில் ஒன்றாக யோகம் பயின்றவர்கள் என்றும் கூறினார். ஆனால் இவையெல்லாம் எந்த அளவு உண்மையென தெரியவில்லை. எல்லாம் அனுமானத்தின் அடிப்படையிலேயே பரவும் செய்திகளாக இருக்கின்றன. உலகம் முழுவதும் ஆன்மீக ஏக்கம் கொண்ட மனித ஆன்மாக்களின் தேவையை பூர்த்தி செய்வதே பாபாஜியின் நோக்கமாக கருதப்படுகிறது.


இன்னும் பெரியானைக் குட்டி சுவாமிகள், சித்தானைக் குட்டி சுவாமிகள் ஆகியோரை குறித்த சில செய்திகளும், போகர் கதிர்காமம் முருகன் கோயிலில் நிறுவிய பூஜா எந்திரம் குறித்த ஒரு செய்தியும் பாக்கி இருக்கிறது. அவற்றை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

Comments

  1. நிறைய புது தகவல்கள். விரிவாக எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
    இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஒரு யோகியின் சுய சரிதத்தில் இது பற்றிய தகவல் இருக்கு

    ReplyDelete

Post a Comment