
ரஜினியின் ஆன்மீக நாட்டம் உலகறிந்தது. ஆனால் யாருக்கும் தெரியாத விஷயம் அவரது ஒரு படத்தைப் பற்றியது. சுவாமி பரமஹம்ச யோகானந்தர் என்பவர் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமரிக்கா உட்பட பலநாடுகளில் கிரியா யோகத்தை பரப்பியவர். ' ஒரு யோகியின் சுயசரிதம் ' என்ற புகழ்பெற்ற ஆன்மீக நூலை எழுதியவர். திகைப்பு, பரவசம் என மாறி மாறி பலவித சிலிர்ப்பூட்டும் தகவல்கள் நிறைந்த நூல் அது. இன்றும் பரவலாக விற்பனையாகும் அந்நூல் உலகின் அனேக மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆன்மாவின் அடித்தளத்தை ஊடுருவும் வாசிப்பு என்று புகழுரை சூட்டப்பட்டது. சுவாமி யோகானந்தரின் வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து தனது இமேஜிற்கு ஏற்ப ஆங்காங்கு அலங்காரம் செய்து, கிளைமாக்சில் தன் சொந்தக்கதையையும் சேர்த்து, ரஜினி ஒரு படமாக எடுத்து நடித்தார். அந்தப் படம்தான் பாபா...! படம் வெற்றிகரமாக பிளாப் ஆனது.
கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தன் நூலகத்தில் சித்தர்கள் இருப்பதாக கூறினார். அதாவது சித்தர்களின் நூல்கள். கமலின் ரசிகனாகவும், சித்தர்கள் தத்துவத்தின் மீது பற்றுள்ளவனாகவும் இருக்கும் எனக்கு அவரின் இந்த ஒரு வாக்கியம் போதுமானதாக இருந்தது. கமல் தன்னுடையை பல படங்களில் சித்தர் பாடல்களை பயன்படுத்துவதாக தெரிந்தது. ஆளவந்தான் படத்தில் ' அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே....' என்ற பட்டினத்தார் பாடலையும், ' அன்பே சிவம் ' என்ற புகழ்பெற்ற திருமூலரின் வரிகளை ஒரு படத்தின் தலைப்பாகவும், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக ' தாயுமானவன் ' என்றும் பயன்படுத்தியுள்ளார். குணா படம் கூட 'அபிராமி அந்தாதியை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என நண்பர் சரவணா ஒருமுறை கூறினார்.
' ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
நான் என்றிருந்து நலம் அழிந்தேன் பூரணமே. ' - என்று பட்டினத்தடிகளும்,
'அன்பே சிவம்' - என்று திருமூலரும், ' சுத்த அறிவான என் தெய்வமே ' என்று தாயுமானவரும் பாடியுள்ளார்கள். திருவள்ளுவர் ' அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள்...' என்கிறார். அன்பு என்பது ஒரு தூய உணர்வு. களங்கம் இல்லாதது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இசைந்து, அன்பு செலுத்தி வாழும்போது ' கடவுளெனும் எல்லையற்ற உணர்வுக்கடலோடு ஒன்றுபடுகிறார்கள். ' தெய்வம் என்பது எங்கோ தனியாக இல்லை. மனிதனில்தான் தெய்வம் அன்பாகவும், அறிவாகவும் உறைந்துள்ள்ளது. இவ்வாறு மனிதனில் தெய்வீகத் தன்மையை கண்டுணர்ந்து, மனிதனை மனிதனாக மதித்து வாழ வலியுறுத்தும் சித்தர்களின் தத்துவமே கமல்ஹாசனை கவர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
நல்ல விசயங்களைச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDelete