இதயம்...


நடிகர் முரளி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. நாம் பிரியம் வைத்திருப்பவர்கள், நம்முன் உயிர் உடல்களாக நிஜமாக உலாவி வந்தவர்கள் திடீரென இல்லை எனும்போது அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே பலநாட்களாகி விடுகிறது. வேதாத்திரி மகரிஷி, சுஜாதா, தென்கச்சி.கோ. சுவாமிநாதன் இவர்களின் மரணங்கள் எல்லாம் என்னை நேரடியாக தாக்கின. கல்லூரியில் படிக்கும்போது எங்கள் நெருங்கிய நண்பரின் தாயார் கடுமையான நோயால் தாக்கப்பட்டு காலமாகிவிட்டார். இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு இரவு ரூமில் அமர்ந்திருந்தோம். மாரியப்பனும் நானும் என் ரூமில் இருந்தோம். இருவரும் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தோம். திடீரென தன்னிச்சியாக என் மனதில் உதித்த ஒரு வாக்கியத்தை நான் கூறினேன். அது இதுதான்: ' இவ்வாறு நாம் அடிக்கடி சந்திக்கும் மரணங்கள்தான் வாழ்வின் நிலையாமையை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன...'.
சிந்திக்காமல் உள்ளுணர்வில் எழுந்த வார்த்தைகள் அவை. மாரியப்பன் மிகுந்த ஆமோதிப்புடன் ஆமாம் ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.
திருவள்ளுவர் நிலையாமையை பற்றி :
' நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. '
நேற்று சிறப்பாக வாழ்ந்தவன் இன்றில்லை எனும் பெருமை உடைய உலகிது என்பது பொருள்.
இன்னொரு திருக்குறள்:
' உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பதும் போலும் பிறப்பு.'
சாக்காடு என்றால் சாவு.
பிறக்கும் சமயம் எதுவும் யாரும் கொண்டு வருவதில்லை. போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. வாழ்வு முடியும்போது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்ல வேண்டியதுதான். வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிறருடைய ஒத்தாசையும், உதவியும், உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த உண்மைகளெல்லாம் யாருக்கும் தெரியாததல்ல. ஆனாலும் பெரும்பாலும் அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஏனெனில் மரணம் நெருங்கும் தருணம், நாம் உருவாக்கிக் கொண்ட அர்த்தங்கள், கொள்கைகள், பிடிவாதங்கள் அனைத்தும் தகர்ந்து விடுகின்றன. இவையெல்லாம் விரக்தியில் பேசுபவை அல்ல. இயற்கையாக நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகள். என்னைப் பொறுத்த வரையில், மரணத்தை ஒட்டி சிந்திக்கும்போதுதான் ஒரு மனிதன் மனதில் விழிப்புநிலை பெறுகிறான். நிலையாமையை சிந்திக்கும்போது, நுகர்பொருட்களின் மீதும் , உறவினர்களின் மீதும் நாம் வைத்திருக்கும் கடும்பற்று , மனதின் இறுக்கம் குறைகிறது. மனம் லேசாகிறது.
பரந்த மனப்பான்மை, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, விட்டு கொடுத்தல் போன்ற நற்குணங்கள் இயல்பாகவே மனித மனத்தில் மலர்கின்றன.
ஒருமுறை என் வீட்டின் முன்புறமுள்ள ரோட்டைக் கடந்து வர முயலும்போது, அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. வருகிறார்....வருகிறார் என்று சத்தம் கேட்டது. நான் ஓரமாக நின்றேன். சில நொடிகளில், ஒரு வேகமாக வந்து நின்றது. நடிகர் முரளி அந்த ஜீப்பில் சிலருடன் நின்று கொண்டிருந்தார். கடந்த லோக் சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். தமிழின துரோகி..........என்று தமிழக அரசியல் தலைவர் ஒருவரை வசைபாடினார். நான் மிக அருகில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை.
முரளி நன்றாக தமிழ் பேசக்கூடியவர். ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இவர்களை போலல்லாமல் ஒழுங்காக தமிழ் பேசுவார். முரளி பெங்களுரை சேர்ந்தவர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். இதயம் படம் வெளிவந்தபோது நான் சிறுவன். ஆனால் படம் முழுக்க சோகம் என்றும், படம் நன்றாக ஓடுகிறது என்றும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டது நினைவில் இருக்கிறது. வளர்ந்து வாலிபனான பிறகு, எங்களுக்கு இதயம் படத்தை மிகவும் பிடிக்க போதுமான காரணங்கள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவனுக்கும், ஒரு அழகான (ஹீரா) பெண்ணுக்கும் இடையிலான காதல், இளையராஜாவின் இசையில் முத்தான மூன்று மேலடிக்கள் பிளஸ் இரண்டு உற்சாக பாடல்கள். இவை போதாதா?
அதர்மம் படத்தில் வரும், 'முத்து மணி.....முத்துமணி.....' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. வசீகரமான ராகத்தில் அமைந்த பாடல் அது.
முரளி ஒரு பேட்டியில் தான் காதலித்து மணந்த மனைவியுடன், திருமணத்திற்கு முன் பெங்களுரு தெருக்களில் பைக்கில் சுற்றியதாக கூறியிருந்தார். மலரும் நினைவுகள் போல், மகிழ்வோடு அதை பகிர்ந்து கொண்டிருந்தார். நான் பெங்களுரு செல்லும் போதெல்லாம் தனியாக தெருக்களில் நடந்து திரிவது வழக்கம். அப்போது முரளி இந்த தெருக்களில் தானே சுற்றியிருப்பார் என கட்டாயம் நினைவுக்கு வரும்.
வினாத் தாள் போல் இங்கே
கனாக் காணும் உள்ளம்.
விடை போல அங்கே
நடை போடும் காதல்.
மௌனம் பாதி...
மோகம் பாதி... - என்ற முரளியின் இனிய கானம் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Comments

  1. the shock and denial phase of grief of loss of murali is not yet over for me also.the death should be analysed both in psychological and philosophical way that will help for stability of mind.

    ReplyDelete
  2. well... this is partly covered yet nice tamil article

    ReplyDelete

Post a Comment