ஈழத்து சித்தர்கள்...



அருட்செல்வி தோழி, தனது சித்தர்கள் வலைப்பூவில் சித்தர்களைப் பற்றி விடாப்பிடியாக, அயராமல் எழுதி வருகிறார். தொடர்ந்து எழுதிவரும் இவரது பணி நிச்சயம் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. சித்தர்களின் வாழ்க்கை செய்திகள், சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள், சித்த மருந்துகள், சித்தர்களின் காயகற்ப முறைகள், சித்தர்களைப் பற்றிய தனித்தகவல்கள் என தொடர்ந்து அளித்து வருகிறார்.


சித்தர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, சமூகத்திற்கோ சொந்தமானவர்கள் அல்லர்; உலகத்திற்கு பொதுவானவர்கள்; மக்கள் நலனையே இலக்காக கொண்டவர்கள்; உலகம் முழுவதும் பரவலாக பயணம் செய்து தொண்டாற்றியவர்கள்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு.


தோழி சில நாட்களுக்கு முன் தன் வலைப்பூவில் ஈழத்து சித்தர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஈழத்து சித்தர்களின் பாடல்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
என்னிடம் ஈழ சித்தர்களின் பாடல்கள் ஏதும் இல்லை. ஆனால் அது சம்பந்தமான சில தகவல்கள் என்னிடம் உள்ளன. மொத்தமாக அவற்றை எழுதினால் பதிவு நீண்டு விடும் என்பதால் ஒன்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மீதியுள்ளவற்றை இடையிடையே எழுதி விடுகிறேன். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:


பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.


- போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).


ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).


பின்குறிப்பு: மேலே படத்தில் இருப்பவர் மஹா அவதார் பாபாஜி. பாபாஜி வட இந்தியா சென்று தவம் புரியுமுன் அவர் போகரை இலங்கையில் வைத்து சந்தித்த நிகழ்வைப் பற்றியும், அகத்தியரை குற்றால மலையில் சந்தித்த நிகழ்வைப் பற்றியும் அடுத்ததொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

Comments

Post a Comment