இசைஞானி இளையராஜா.

இளையராஜா இசையின் அருமை பெருமைகளை நான் சொல்ல வேண்டியதில்லை. பலபேர் அவர் இசையை டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இருந்தாலும் , இளையராஜா ரசிகன் என்ற முறையில் ஓரிரு சிறப்புகளை கூறி முடிக்கிறேன்.

ஒரு படத்தில் ஒரு காட்சி அல்லது ஒரு சூழ்நிலை உருவாகிறது. அதில் ஒரு
உணர்வு வெளிப்படுகிறது. அந்த உணர்வை அப்படியே இசையாக மாற்றம் செய்தால்- வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வேலையை நூற்றுக்கு நூறு கச்சிதமாக செய்பவர்தான் இசைஞானி இளையராஜா.
உதாரணமாக ஓராயிரம் பாடல்களை கூறலாம்.

மற்றுமொரு சிறப்பு என்னவெனில், ஒரே பாடலில் இருவித உணர்வுகளை அழகாக, உறுத்தாமல் சேர்த்து உருவாக்குவதில் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.

உதாரணமாக, தர்மத்தின் தலைவன் படத்தில் வரும் 'தென்மதுரை வைகை நதி...'
பாடலில் ஒரே ராகத்தில் சகோதர உணர்வும், காதலியை நோக்கி பாடும் உணர்வும் அழகாக பொருந்தி வரும். அந்த பாடலை சற்று கவனித்து
கேட்கும் அனைவரையும் கவரும் பாடல் அது.

அதேபோல், கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ,' பாசமுள்ள பாண்டியரே....'
பாடல் நாட்டுபுற பாடல் போல் துவங்கி இடையில் ரம்யாக்ரிஷ்ணன்-சரத்குமார் காதலை அப்படியே தொட்டுத்தவழ்ந்து கடைசியில் நாட்டுபுற பாடலாகவே முடியும். அதே படத்தில் , 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் அடுத்து நேரப்போகும் விபரீத்தயையும் , ரம்யாக்ரிஷ்ணனின் சோகத்தையும் சேர்ந்தே வெளிப்பத்தும்.

வருஷம் பதினாறு படத்தில் வரும் 'பொங்கலு பொங்கலு....' என்ற பாடலும் மேற்கண்ட பாடலை போன்றதே.

நிறைய பாடல்கள் இதேபோல் உள்ளன. சட்டென நினைவுக்கு வந்த பாடல்களை கூறியுள்ளேன். நண்பர்கள் கண்டறிந்து , இளையராஜா இசையில் மூழ்கி திளைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக முதல்வர் கலைஞர் , இளையராஜாவுக்கு வழங்கிய இசைஞானி என்ற பட்டம் எவ்வளவு பொருத்தமானது.

Comments