எம்பெட்டட் சிஸ்டம்ஸ் - மிகச் சுருக்கமான அறிமுகம்.



ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் நண்பர்கள் குழாமில் ஒருவரான பாரதி எம்.டக் (எம்பெட்டட் சிஸ்டம்ஸ்) படிப்பை முடித்துவிட்டு விப்ரோவில் கைநிறைய சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் அவ்வளவு பிரபலமாகவில்லை ஆனால் தற்போது எம்.இ / எம்.டக் கவுன்சிலிங்கில் முதலில் சீட் தீர்வது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தானாம். அந்த அளவு எ. சிஸ்டமின் பயன்பாடுகள் (அப்ளிகேஷன்ஸ்) விசாலமாகி வருகின்றன. அதனால் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும், படிப்பதற்கு போட்டியும் அதிகரித்துள்ளது.


எலெக்ட்ரானிக்ஸ் இயலின் சமீபத்திய முன்னேற்றங்களில் ஒன்றுதான், வசீகரமான இந்த எம்பெட்டட் சிஸ்டம்ஸ். எலெக்ட்ரானிக்ஸ் துறை முன்னேற்றம் அடைகிறது என்றால் அதன் பொருள், சிப்புகளும் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களும் சிறியதாகவும், பயன்கள் அதிகமாகவும்
ஆகி வருகின்றன என்று பொருளாகும். விலைகளும் கணிசமாக குறைகிறது.


எம்பெட்டட் சிஸ்டம்ஸ் என்பதை பொதுவாக கம்ப்யூட்டர் என்கிறார்கள். ஆனால் இவை பெர்சனல் கம்ப்யுட்டர் போன்றவை அல்ல. ஒரு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யுட்டரை கொண்டு நாம் பற்பல காரியங்களை செய்யலாம். ஒரு விலங்கியல் கட்டுரையை டவுன்லோட் செய்து பார்க்கலாம்; தெரியாத ஒரு சொல்லுக்கு பொருள் காணலாம்; அனுஷ்கா அழகுப் படங்களை கண்டு களிக்கலாம். ஆனால் எம்பெட்டட் சிஸ்டம் என்ற கம்ப்யுட்டர்கள் ஏற்கனவே இடப்பட்ட கட்டளைகளை (ப்ரீ-ப்ரொக்ராம்டு) கொண்டு ஒருசில குறிப்பிட்ட வேலைகளை மட்டும் திரும்ப,திரும்ப செய்யும் திறன் உள்ளவை. ஒருமுறை ப்ரோக்ராம் செய்ததை மாற்றுவது மிகக் கடினம்.


ஒரு மைக்ரோப்ராசசர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் இவற்றில் ஒன்றை தகுந்த சாப்ட்வேர் மூலம் ப்ரோக்ராம் செய்து எலெக்ட்ரிகல் உபகரணம் / எதாவது ஒரு உபகரணத்தில் பதித்து விடுகிறார்கள். அதாவது எம்பெட் செய்கிறார்கள். உதாரணமாக வாஷிங் மெஷின், டிஜிட்டல் கேமெரா, கார்கள் இது போன்ற சாதனங்களில் உள்ளே பொருத்தி விடுகிறார்கள். வெளியே தெரியாது. ஒரு தேர்ந்த வல்லுநர் மட்டுமே எம்பெட்டட் சிஸ்டம் மூலம் ஒரு உபகரணம் இயங்குகிறது எனக் கண்டறிய முடியும்.


எம்பெட்டட் சிஸ்டமில் ரியல் டைம் அப்ளிகேஷன்ஸ் என்று ஒரு விஷயம்
சொல்கிறார்கள். இதற்கு ஒரு அருமையான உதாரணம், ஒரு கார் இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். திடீரென ஒரு பாப்பா குறுக்கே வந்துவிட்டது. சடாரென ப்ரேக் போட்டால் வண்டி தலைகுப்புற கவிழ்ந்து விடும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில், எம்பெட் சிஸ்டம்கள் - கார் இத்தனை கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும்போது ப்ரேக் போட்டால்- என்ற ப்ரோக்ராம் வரிகளை நிஜத்திற்கு கொண்டு வந்து (ரியல் டைம்) செயல்படுத்தி, ஒருநொடியில் சீட்டின் முன்புறம் ஒரு பெரிய பலூனை விடுவித்து முன்சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை காயம் படாமல் காப்பாற்றுகிறது. எம்பெட் சிஸ்டம்களில் ஹார்ட் டிஸ்க் போன்றவை இல்லாததால், உள்ளீடுகள் (இன்புட்) நொடிக்கும் குறைவான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.


விரைவாக செயல்படுதல், பயன்பாட்டில் நம்பகத்தன்மை (ரிலயபிளிட்டி) போன்றவை எம்பெட் சிஸ்டமின் தனிச்சிறப்புகள். மைக்ரோ கண்ட்ரோலர் உள்ளேயே இன்புட்/அவுட்புட் டிவைசெஸ், ரோம், சி.பி.யு. இத்யாதிகள் அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளதால், மைக்ரோ கண்ட்ரோலர் ஓரளவு சிறிய கருவிகளிலும், மைக்ரோ பிராசசர்கள் தொழிற்சாலை அளவில் இயங்கும் சாதனங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.


எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளில் இருந்தே தெளிவாக புரிந்துகொள்ள முடியும். வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன், டிஜிட்டல் கேமரா, வாட்சுகள், கார்கள், போக்குவரத்து சிக்னல்கள், நியுக்ளியர் பவர் ஸ்டேஷன்கள் என எம்பெட்டட் சிஸ்டமின் பயன்பாடுகள் நீள்கிறது. எதிர்காலத்தில் ஏறக்குறைய நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் சிலிக்கான் சிப்புகளை பதித்து எம்பெடட் சிஸ்டம் மூலம் இயங்க வைத்து விடுவார்கள் என நினைக்கிறேன். மனிதனில் பதிக்காமல் விட்டால் சரி.

Comments

Post a Comment