மறதியில் கரைந்த ஒரு மகத்தான பாடகன் !

உயிர்மை மாத இதழை தவறாமல் வாங்கிவிடுவேன். காரணம், சாரு நிவேதிதா அவ்வப்போது வெளியாகும் தமிழ், ஹாலிவுட் சினிமாக்களை போட்டுத்தாக்குவார். தவிர, திரு. ஷாஜி என்பவர் திரையிசை பாடல்களையும், பாடகர்களையும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதுவார். ஷாஜி ஒரு சிறந்த இசை விமர்சகர் ஆவார். மிகத் திறமையாகவும், நுணுக்கமாகவும், நடுநிலைமையோடும், அனுபவ அறிவோடும் ஆய்ந்து கட்டுரை எழுதுபவர். கேரளத்துக்காரர்.
ஆகஸ்ட் மாத இதழை வாங்கியவுடன் அதில், ' மலேசியா வாசுதேவன் - மறதியில் கரைந்த மகத்தான பாடகன் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
எஸ்.பி.பி. தான் எப்போதும் என் மனங்கவர்ந்த பாடகர். குழைவான குரல், நடிகர்களுக்கேற்றபடி குரலை மாற்றிப்பாடும் லாவகம், பாடப்படும் சூழ்நிலையை அப்படியே வெளிப்படுத்தும் குரல் பாவம், எந்தவித பாடலையும் பாடும் திறமை, பாடலின் இடையிடையே எஸ்.பி.பி. வெளிப்படுத்தும் சிரிப்புகள் முனகல்கள் இது போன்ற காரணங்களால் எப்போதும் நான் விரும்பி ரசிக்கும் குரல் எஸ்.பி.பி. யின் குரல்தான்.
காமரசம் சொட்ட சொட்ட ஒலிக்கும் பாடல்களில் அவர் கொடுக்கும் சப்தங்கள் என் வயதையொத்த நண்பர்களிடம் மிகப்பிரபலமானவை.
உதாரணமாக, காதலர் தினம் படத்தில் 'காதலெனும் தேர்வெழுதி...' என்ற பாடலை குணாலுக்கு கூட பொருந்தும்படி பாடியிருப்பார். மேலும், சத்யா படத்தில் வரும், 'வளையோசை...' என்ற பாடலிலும், மீரா படத்தில் ' ஓ பட்டர்பிளை....' என்ற இருபாடல்களிலும் உலகத்தரம் வாய்ந்த லதாமங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரின் குரல்களுக்கும் ஈடு கொடுத்து, தன் குரலின் தரமுயர்த்தி மிகுந்த முயற்சியோடு பாடியிருப்பார்.
எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முழுமையான பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்.
இப்படிப்பட்ட மனநிலையில், மலேசியா வாசுதேவன் மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற தலைப்பை பார்த்து சற்று திடுக்கிட்டேன். ம.வாசுதேவன் ஒரு சிறந்த பாடகர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஏறக்குறைய பத்து பக்க அளவு எழுதுமளவு வாசுதேவன் பாடல்களில் என்ன இருக்கிறது என்ற சிந்தனையில் அக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என் விழிகள் வியப்பிலும், திகைப்பிலும் விரிந்தே விட்டன. படித்து முடித்தவுடன் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஷாஜி, ஏராளமான பாடல்களை உதாரணம் காட்டி , ம.வாசுதேவன் ஒவ்வொரு பாடலையும் எவ்வாறு துடிப்புடனும், உயிர்ப்புடனும், மேதைமையுடனும் பாடியுள்ளார் என்பதை அழகாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு உதாரணமும் எனக்கு சவாலாகவே தோன்றியது. நான் பாடகர்களை பற்றி முன்பு கொண்டிருந்த கொள்கைகள் அனைத்தும் உடைந்தே போயின போல தோன்றியது. அக்கட்டுரையை படித்தவுடன் என் குறுகிய ரசிக மனப்பான்மை எனக்கே நன்கு விளங்கியது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் ஷாஜியின் வரிகளிலேயே அப்படியே தருகிறேன். " சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த மலேசியா வாசுதேவன் பாடிய ' பட்டுவண்ண ரோசாவாம்...' (கன்னிப்பருவத்திலே) பாடலையும், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய ' உச்சி வகுந்தெடுத்து...' என்ற இரண்டு பாடல்களையும் உன்னிப்பாக கேட்டுப் பாருங்கள். இரண்டும் ஏறக்குறைய ஒரே கிராமிய ராகத்தில் அமைந்தும், ஒரேவித ஏக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் -
பாடும் பா முறையைக்கொண்டு எந்தப்பாடல் சிறப்பாக பாடப்பட்டுள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் " என்கிறார் ஷாஜி. நான் இந்த வரிகளை படித்தவுடன் ஆஹா....விடை தெரிந்துவிட்டது. என் அம்மாவிடமும், அப்பாவிடமும் இரண்டில் எது சிறந்த பாடல் என்று கேட்டேன். இருவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். நீங்களும் வேண்டுமானால் கேட்டு பாருங்கள்....!
ஷாஜி எழுதிய மலேசியா வாசுதேவனை பற்றிய அந்த அருமையான, அபூர்வ கட்டுரை உயிர்மை இணையதளத்தின் முகப்பில் தற்போது படிக்க கிடைக்கிறது. அனைவரும் கட்டாயம் படித்து விடுங்கள்...!
( நன்றி: உயிர்மை மாத இதழ்.)


Comments

  1. எனக்கு இந்த அளவுக்கு நுணுக்கமாக ரசிக்கத் தெரியாது.... கட்டுரையின் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று புரிகிறது.

    ReplyDelete
  2. Paravaa illai...Mrs.Chitra....En katturaiyin moolamaaga neengal innoru katturaiyai kandupidithu pala vishayangalai therindhu kollalaam...! thanks for visit..

    ReplyDelete
  3. whether the comparison makes one better than other?.or the real quality he has. anyway after reading original article i discus with u. write more. ur language skill improving well.

    ReplyDelete
  4. Paaraattukku thanks saravana...Read the original article. its very good one.

    ReplyDelete

Post a Comment