கல்லூரி நாட்களும், ஆனந்த விகடனும்...


கல்லூரியில் படித்த நான்கு வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் படிக்கிறோம் என்ற பெருமை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. அவ்வப்போது பாடபுத்தகங்களையும், அடிக்கடி ஆனந்தவிகடனையும் படிப்போம். ஆனந்தவிகடன் எங்களது ஆதர்சன பத்திரிகை. எட்டு வருடங்களுக்கு முன் அப்போது விகடனில் முத்திரை கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. தவறாமல் வாங்கிப் படிப்போம்.

இசையில் இளையராஜா சிறந்தவரா? ரகுமான் சிறந்தவரா? என பெரிய விவாதமே எங்களுக்குள் இரு அணியாக நடக்கும். அப்படி இப்படி என போராடி இளையராஜாவை ஜெயிக்க வைத்துவிடுவோம். கமல்ஹாசனை பற்றி பேசும்போது மட்டும் எல்லோரும் ஒரே அணிதான். தமிழ் வெறியர்களாக சிலர் காலேஜில் அலைந்தார்கள். அதில் நானும் ஒருவன். அழகான பெண்கள் எங்களை கடக்கும்போது, அவர்களுக்கு கேட்காதபடி மெல்ல விசிலடிப்போம். ஒரு மெகா சைஸ் ஆடிட்டோரியத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். பழைய நோட்டில் பேப்பர்களை கிழித்து ராக்கெட் விடுவோம். ஒருமுறை வேகமாக விட்டதில் பெண் நடுவர் மீதே ராக்கெட் பாய்ந்து விட்டது. யாருக்காவது பிறந்தநாள் வந்தால், மற்ற எல்லா பசங்களும் சேர்ந்து 'பம்ஸ்' கொடுப்பார்கள். பம்ஸ் என்றால் பப்சோ, ஸ்வீட்டோ, காரமோ அல்ல. பிறந்தநாள் கொண்டாடுபவனின் இரண்டு கைகளை இரண்டு பேரும், இரண்டு கால்களை இரண்டு பேரும் பிடித்து தூக்கிக் கொள்வார்கள். மற்றவர்கள் பின்புறத்தில் புட்பாலை உதைப்பது போல உதைத்து துவைத்து விடுவார்கள். பிறந்தநாள் நெருங்கினாலே பீதியாக இருக்கும். அப்புறம்தான் வாழ்த்து, கேக், தண்ணீர் எல்லாம். இவ்வளவு உற்சாகங்களுக்கிடையிலும், கேம்பஸ் இன்டர்வியுவில் வேலை கிடைக்க வேண்டுமென்ற கவலை எல்லோருக்கும் ஞாபகத்தில் இருந்தது.

திரும்பி வராத இனிய நாட்கள் அவை. அதுபோன்ற ஒரு நன்னாளில் எங்கள் நண்பர் மாரியப்பன் ஆனந்தவிகடன் முத்திரை கவிதை போட்டிக்கு ஒரு கவிதை எழுதியனுப்பினார். கவிதையும் தேர்வாகி விகடனில் வெளிவந்தது.
பரிசு பணமும் மணியார்டர் அனுப்பினார்கள். நான்கே வரிகளை கொண்ட அக்கவிதையை மாரியப்பன் எப்படி எழுதினார் என்று எனக்கு இன்றும் வியப்பாக இருக்கிறது. அந்த கவிதையை எழுதும் போது அவருக்கு வயது இருபத்தி ஒன்றுதான். சொல்லாத பல அர்த்தங்களை சொல்லும் அந்த கவிதையை நீங்களும் படித்து பாருங்கள்.

டைவர்ஸ்
உன்னை நானும்
என்னை நீயும்
முழுமையாக
புரிந்துகொண்ட போது.

Comments

  1. நினைவுகள் எப்போதும் இதமானது சகோதரா..

    ReplyDelete

Post a Comment