
திருவனந்தபுரம் இந்தியாவின் தென்கோடியிலுள்ள எழில் மிகுந்த ஒரு சிறிய நகரம். நாகர்கோயிலிலிருந்து இரண்டுமணி நேர பயணம். இருமுறை சென்றுள்ளேன். மல்டி நேஷனல் கம்பெனிகள் இன்னும் ஊரை சிதைக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள்.
பச்சை பசேலென்ற தென்னந்தோப்புகள், ஏறி இறங்கும் சிறு மலைபோன்ற பாதைகள் (பெண்கள் அல்ல!), மிதமான தட்பவெப்பம், கோவளம் பீச், பத்மநாப சுவாமி கோயில், பத்மநாபபுர அரண்மனை (வருஷம் பதினாறு இங்கேதான் எடுத்தார்கள்) இவைபோன்ற அம்சங்கள் நிரம்பிய ஊர்தான் திருவனந்தபுரம்.
கோவளம் கடற்கரை, நமது மெரீனா கடற்கரை போல் அல்ல. சிறியதுதான். ஆனால் சுத்தமானது. மெரீனாவில் மணல் குப்பைகள் நிரம்பியும், கடல்நீரானது சாக்கடை தண்ணீர் கலந்து, செம்மண் கலரில் காணப்படும். கோவளம் பீச்சிலோ மணல் வெள்ளை நிறத்தில் சுத்தமாகவும், கடல்நீர் தூய்மையான நீல நிறத்திலும் காணப்படும். அருகில் ஆங்காங்கு சிறு குன்றுகளில் தென்னை மரங்களும், நடுவில் ஹோட்டல் ரிசார்ட்டுகளும் காணப்பட்டன. அழகாக இருந்தது. அதில் ஒரு ரிசார்ட்டில் கமல்ஹாசன் வழக்கமாக வந்து தங்குவார் என யாரோ ஒருவர் கூறினார். கடற்கரைக்கு நுழையும் இடத்தில், ஒரு கடையில் புத்தர் சிலைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். எதிர்புறம் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை இருந்தது.
பத்மநாப சுவாமி கோயிலை சுற்றி, மாலை நேரத்தில் நடப்பதே அலாதியான அனுபவம். அதனுடன் ஒரு தேநீர் அருந்தியது மறக்க முடியாத அனுபவம்.
கேரளா பெண்களை பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறாவிட்டால் இந்த எழுத்து நிறைவடையாது. அஞ்சனம் தீட்டிய அழகு கண்கள், கொஞ்சம் எண்ணெய் பூசியது போன்ற முகம், சுருண்ட கேசம், கொஞ்சும் மலையாள மொழி. ஒரு கடைக்குள் நுழைந்து , எனக்குத்தெரிந்த மலையாளத்தில், இந்தப்பொருள் என்ன விலை என கடைக்கார பெண்ணிடம் கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கு தமிழ் தெரியாது' என்று கூறினார். அப்படியே திரும்பி வந்துவிட்டேன் !
அருமை லிங்கேஸ்வரன்!. இதே போல் திண்டுக்கல் பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன்.
ReplyDelete