
பி.டெக் (நானோ டெக்னாலஜி), எம்.டெக் (நானோ டெக்னாலஜி ), நானோ சயின்ஸ் போன்ற படிப்புகள் வழங்கப்படுவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் பார்த்துவந்தேன். முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் ஆங்காங்கு நானோ டெக்னாலஜி என்ற வார்த்தையை கூறிவந்தார்.
சரி என்னதான் அது...என தெரிந்து கொள்ளலாமே என்று ' வையக விரிவு வலையை ' அலசினேன். சில அடிப்படை விவரணைகளும், நானோவின் பயன்பாடுகள் பற்றியும் சில தகவல்கள் கிடைத்தன. ஆனால் நிஜமாக ஒன்றுமே புரியவில்லை.
பிறகு சில மாதங்கள் கழித்து, மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' புத்தக ஸ்டாலில் , எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய 'நானோ டெக்னாலஜி' என்ற பெயரிட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. அப்படியே அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். (காசு கொடுத்துதான் !).
அப்புத்தகத்தை படித்தபின் மங்கலாக தெரிந்த நானோ டெக்னாலஜி சற்று பிரகாசமானது. அதில் , நானோ டெக்னாலஜியின் அடிப்படை விஷயங்கள், அதன் பயன்பாடுகள், இத்துறையில் நடைபெற்று வரும் ஆராய்சிகள் முன்னேற்றங்கள் ஆகியவற்றை பற்றி சுஜாதா ஓரளவு விரிவாக அலசியிருந்தார். தமிழில் நானோ டெக்னாலஜி பற்றிய முதல் புத்தகம் இது , சுஜாதாவினுடையது.
நான் நானோ டெக்னாலஜி பற்றி என்னளவில் அறிந்துகொண்ட விஷயங்கள் இவை:
அணு அளவில் மிகச்சிறிய பொருள்களை / கருவிகளை வடிவமைத்து நமக்கு வேண்டிய காரியங்களை செய்துகொள்வது. ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரில் ஒரு கோடியில் ஒரு பாகம். ஆனால் இந்த அளவு இன்னும் வரவில்லை, இருநூறு நானோ மீட்டர் அளவு கருவிகளை செய்திருக்கிறார்கள். நானோ டெக்கின் இறுதி நோக்கம் , எலெக்ட்ரான் வரை சென்று அந்த எலெக்ட்ரானை நம்மிஷ்டப்படி ஆட்டுவிப்பது. அவற்றை ப்ரோக்ராம் செய்து சிலபல வேலைகளை செய்விப்பது. நானோ டெக்னாலஜியின் ஒருசில பயன்பாடுகளை கூறினால் புரிந்துகொள்வது சற்று எளிது.
நானோ பாட்டுகள் : நானோ துகள்கள் நம் உடலுக்குள் சென்று மருந்தை செலுத்தி நோயை குணமாக்குவது, புற்றுநோய் செல்களை அழிப்பது , தேய்ந்துபோன செல்களை சரிசெய்வது போன்றவை.
கார்பன் நானோ டியுப்கள்: நானோ அளவிலான இத்தகைய கார்பன் திரிகளை பெயின்ட்டில் கலந்து அடித்தால் கிச்சென ஒட்டிக்கொள்ளுமாம். நுண்ணிய
எலெக்ட்ரானிக் பாகங்களை இணைக்க கார்பன் திரிகள் பயன்படுகின்றன.
இவற்றின் பயன்பாடுகள் இன்னும் அதிகமாம்.
உலோகங்கள் : இரும்பை விட வலிமையான நானோ உலோகங்கள்.
கம்ப்யுட்டர்: எதிர்காலத்தில் நூறுகோடி நுட்பமான கணினி பிராசசர்களை தயாரிக்கலாம்.
சோலார் செல்களின் ஆற்றலை நானோ நுட்பம் மூலம் அதிகமாக்குவது, கருவிகளை உற்பத்தி செய்ய மூலக்கூறு மெசின்களை பயன்படுத்துவது என நானோ டெக்னாலஜியின் பயன்பாடுகள் விரிகிறது.
நானோ துறையானது , பயலாஜி , உலோகவியில், வேதியல், ப்ரோக்ராமிங் என பலதுறை புலமைகளை தனதாக்கி பயன்படுத்திக்கொள்கிறது.
சுஜாதா தனது நூலில் வியந்து இவ்வாறு கூறுகிறார்: வியத்தகு நானோ இயலானது தனது உச்சத்தை எட்டும்போது நாம் கடவுளின் அருகில் சென்றுவிடுவோம்.
அறிவியல் ஆர்வலர்கள் , சுஜாதாவின் மேற்கண்ட புத்தகத்தை படித்துவிட்டு பின் , நானோ சம்பந்தமான ஆங்கில நூல்களுக்கு முன்னேறினால் நானோ இயலை பற்றி தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
கோவை அண்ணா பல்கலைகழகத்தில் இந்த மாதமோ, அடுத்த மாதமோ நானோ டெக்னாலாஜி பற்றி ஒரு ஆய்வுக்கருத்தரங்கம் நடக்கிறது. விருப்பமும், முயற்சியும் உள்ளவர்கள் அங்கு ஆராய்ச்சிக்கட்டுரை கூட சமர்ப்பிக்கலாம்.
Comments
Post a Comment