மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி - தமிழக முதல்வர் கலைஞர் புகழாரம் !

ஆகஸ்ட் பதினான்காம் தேதி சென்னையில் 'வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூறாவது ஜெயந்தி விழா மற்றும் அவரது நினைவு தபால்தலை வெளியீட்டு விழா ' தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது .

கலைஞர் பேசுகையில் ' ராமலிங்க அடிகள் அடியொட்டி - தானும் வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவைக்கும் வண்ணம் உயர்ந்த போதனைகளை எடுத்துக்கூறியவர்' மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி என புகழாரம் சூட்டினார்.

மேலும் ' நட்ட கல்லும் பேசுமோ , நாதன் உள்ளிருக்கையிலே .....' என்ற சித்தர் சிவவாக்கியர் பாடலை குறிப்பிட்ட கலைஞர் , ' கடவுள் வேறு, மனிதன் வேறு அல்ல. கடவுள் மனிதனுக்குள்ளேயே உறைந்துள்ளார். எனவே மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து , அன்பு செய்யுங்கள் போன்ற உயர்ந்த அறிவுரைகளை வழங்கியவர் வேதாத்திரி மகரிஷி எனக்குறிப்பிட்டார்.

கவியரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், நடிகர் சிவகுமார், ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு மகரிஷி நினைவு தபால்தலையை வெளியிட்டது.

தனிமனித அமைதியில் துவங்கி , பரந்து விரிந்து உலக அமைதி மலரவேண்டும் என்ற நோக்கில் , வேதாத்திரி மகரிஷி 'உலக சமுதாய சேவா சங்கத்தை ' நிறுவினார். கடந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாக உலக அமைதிக்கான அடிப்படைக்கொள்கைகளையும் , யோகப்பற்சிகளையும் பரப்பி வந்த மகரிஷி அவர்கள் தனது தொண்ணூற்றி ஐந்தாம் வயதில் மகாசமாதி அடைந்தார்.
ஆனால், தற்போது 'வேதாத்திரிய தத்துவத்தை ' - தமிழகத்தில் ஏறக்குறைய பத்து பல்கலைகழகங்கள் , டிப்ளமோ / இளங்கலை / முதுகலை / ஆராய்ச்சி படிப்புகளாக வழங்கிவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள் இப்படிப்பை படித்தும், படித்து முடித்தும் வருகிறார்கள். இது வேதாத்திரிய தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இந்த தருணத்தில் , சென்னையில் நடைபெற்ற மகரிஷியின் ஜெயந்தி விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

Comments

Post a Comment